உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, July 11, 2010

எதில் இருக்கிறது மகிழ்ச்சி?

ண்மையான மகிழ்ச்சி எதில் கிடைக்கிறது? நமக்குப் பிடித்த சுவையான உணவைச் சாப்பிடுவதிலா? நல்ல பாடலைக் கேட்பதிலா? நல்ல புத்தகம் ஒன்றைப் படிப்பதிலா? நமக்குப் பிரியமான நண்பர்களைச் சந்தித்துப் பேசுவதிலா? அருமையான திரைப்படம் ஒன்றைப் பார்ப்பதிலா? ஆயாசம் தீர உறங்கி ஓய்வெடுப்பதிலா?

இவை எல்லாவற்றிலுமே மகிழ்ச்சி கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆனால், உண்மையான மகிழ்ச்சி என்பது, பிறருக்கு உதவி, அதற்கு அவர்கள் நமக்கு நெஞ்சு நெகிழ நன்றி தெரிவிக்கும்போது கிடைப்பதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. இன்னும் சொல்லவேண்டுமானால், பிறருக்கு உதவும்போது 80 சதவிகிதம் மகிழ்ச்சியும், அதற்கு அவர்கள் நன்றி தெரிவிக்கும்போது மீதி 20 சதவிகித மகிழ்ச்சியும் சேர்ந்து பூரணத்துவம் பெறுகிறது.

இப்படி எழுதுவதனால், நான் ஏதோ ஓடி ஓடி பிறருக்கு உதவுகிறவன், சேவை மனப்பான்மையில் ஊறித் திளைக்கிறவன் என்று யாரும் தப்பாக நினைத்துவிட வேண்டாம். அப்படி இல்லை. என்னால் என்ன முடியுமோ அதைக் கண்டிப்பாக, தேவைப்படுகிறவர்களுக்குச் செய்து தருவேன். அவர்கள் கேட்கும் உதவி என்னால் செய்ய முடிவதாக இருந்தால், தட்டிக் கழிக்காமல், அதை நிறைவேற்றித் தர உண்மையாக முயற்சி செய்வேன். அவ்வளவுதான்!

இப்போது இதை எதற்காக எழுதுகிறேன் என்றால், இந்த ஒரே வாரத்திலேயே நான்கு உதவிகளைச் செய்த மன நிறைவு கிடைத்திருக்கிறது எனக்கு!

முதலாவது... நண்பரும் இயக்குநருமான சிம்புதேவன் ஒரு நபரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் பற்றிய விவரங்கள் வேண்டும் என்றார். சிம்புதேவனுக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தினர் வீட்டில் அந்த நபரை மருமகனாக்கிக் கொள்ள விரும்புகின்றனர் என்றும், எனவே அந்த நபரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அந்த நபர் எங்கள் அலுவலகத்தோடு தொடர்புடையவர் ஆதலால், அவர் யார், எவர் என அவரைப் பற்றிய மேலதிக விவரங்கள் சேகரித்துச் சிம்புதேவனிடம் சொன்னேன். தவிர, அந்த நபரைப் பற்றி இன்னும் நன்கு தெரிந்த ஒரு நண்பரின் செல்பேசி எண்ணையும் கொடுத்து, அவரிடமும் விசாரித்துக் கொள்ளலாம் என்று சொன்னேன்.

மேலும், சிம்புதேவன் தனது ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ படத்தைப் பத்திரிகையாளர் சோ அவர்களுக்குப் போட்டுக் காண்பிக்க விழைந்தார். சோவிடம் ஒரு அப்பாயின்ட்மென்ட் வேண்டும் என விரும்பினார். அவரே நேரடியாகக் கேட்டிருந்தால், மாட்டேன் என்றா சொல்லியிருக்கப் போகிறார் சோ? இருந்தாலும், ஏனோ என்னைக் கேட்டார். நான் என் நண்பர் துக்ளச் சத்யா மூலமாக அதற்கு ஏற்பாடு செய்தேன்.

சந்திப்பு நடந்ததா, தான் விரும்பியபடி சிம்புதேவன் சோ அவர்களுக்குப் படத்தைப் போட்டுக் காண்பித்தாரா என்று தெரியாது.

இரண்டாவது... பழம்பெரும் எழுத்தாளர் மகரம் அவர்களின் புதல்வரும், என் 30 ஆண்டு கால நண்பருமான திரு.மார்க்கபந்து அவர்களுக்கு எழுத்தாளர் பிரேமா நந்தகுமார் என்பவரின் விலாசமும், தொலைபேசி எண்ணும் தேவைப்பட்டது. ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்பு மகரம் அவர்களைப் பற்றிய கட்டுரைகள் சிலவற்றை பிரேமா நந்தகுமார் ‘பாரத மணி’ என்னும் பத்திரிகையில் எழுதி வந்துள்ளாராம்.

பிரேமா நந்தகுமார் பற்றிப் பலரிடம் விசாரித்ததில், எழுத்தாளர் சாருகேசியிடம் லட்டு மாதிரி அவருடைய வீட்டு விலாசமும், தொலைபேசி எண்ணும் கிடைத்தது. அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் குமுதினி என்றொரு எழுத்தாளர் பல கதைகளையும் கட்டுரைகளையும் தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளார். அவருடைய மருமகள்தான் இந்த பிரேமா நந்தகுமார் என்கிற தகவலும் கிடைத்தது. கிடைத்த விவரங்களை உடனே மார்க்கபந்துவுக்குச் சொன்னேன்.

மூன்றாவது... இயக்குநர் மணிரத்னம் அவர்களிடம் அசிஸ்டென்ட் இயக்குநராகப் பணியாற்றும் ஷாலினி, விகடன் அலுவலகத்துக்கு ஓர் உதவி கோரி வந்திருந்தார். அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் ஓவியர் கோபுலு வரைந்த சில ஓவியங்கள் ஒரு ரெஃபரென்ஸுக்காக மணிரத்னத்துக்குத் தேவைப்பட்டுள்ளது. குறிப்பாக, சோழர் காலப் பெண்டிரின் ஓவியங்கள். 1958-59-ல் ஜெகசிற்பியன் எழுதிய தொடர்கதைகளான ஆலவாய் அழகன், திருச்சிற்றம்பலம் ஆகியவற்றுக்கு கோபுலு வரைந்த ஓவியங்கள் கொள்ளை அழகு. ஆனந்த விகடனில் ‘பொக்கிஷம்’ பகுதிக்காக அந்தக் கால விகடன் இதழ்களை அடிக்கடி புரட்டிக்கொண்டு இருப்பவன் நான் என்பதால், ஷாலினி கேட்ட கோபுலு படங்களை உடனடியாக என்னால் ட்ரேஸ்-அவுட் செய்து கொடுக்க முடிந்தது. ஒன்றிரண்டு படங்கள் என்றால், நானே பிரின்ட்-அவுட் எடுத்துக் கொடுத்திருப்பேன். ஆனால், ஷாலினி அந்த இரண்டு தொடர்கதைகளுக்கும் கோபுலு வரைந்திருந்த அத்தனைப் படங்களையும் ஒரு சி.டி-யில் காப்பி செய்து தரும்படி கேட்டார். அது என்னால் சாத்தியமில்லை என்பதால், இதழ் தேதிகளைக் குறித்துக் கொடுத்து, ஆனந்த விகடன் இணை ஆசிரியர் திரு. கண்ணன் மூலமாக சிஸ்டம் டிபார்ட்மென்ட்டில் பதிவு செய்துகொள்ளும்படி சொல்லி அனுப்பினேன்.

நான்காவது... திரு.வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களோடு ஒரு அறிமுகம் ஏற்படுத்தித் தரும்படி எழுத்தாளர்(கள்) சுபா என்னைக் கேட்டுக்கொண்டார்கள். திரு.இறையன்பு அவர்களைச் சந்தித்துப் பேச தாங்கள் நாலைந்து முறை முயன்றும், இயலாமல் போனதாகச் சொன்னார்கள்.

சுபா சமீபத்தில் தொடங்கியிருக்கும் ஒரு பதிப்பகத்தின் மூலமாக நாலைந்து புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றில் ஒன்று, மகாபலிபுரம் பற்றிய புத்தகம் (மகாபலிபுரம் என்பது தவறு; மாமல்லபுரம் என்பதே சரி என்று விளக்கினார் திரு. இறையன்பு). இது வெறும் விளக்கக் கையேடு போல இல்லாமல், மகாபலிபுரத்துக்குச் சுற்றுலா வருபவர்களுக்குக் கூடவே ஒரு கைடு வந்து வழிகாட்டி, ஒவ்வொன்றையும் விளக்கிச் சொல்வது போல விரிவாகவும், சுவாரசியமாகவும் தகவல்கள் இடம்பெற்றுள்ள புத்தகம். இதில், கோட்டுச் சித்திரங்களை அருமையாக வரைந்து அசத்தியிருக்கிறார் ஓவியர் ஜெ.பி. தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது இந்தப் புத்தகம்.

திரு.இறையன்பு சுற்றுலாத் துறைச் செயலர் என்பதால், அவருக்கு இந்தப் புத்தகங்களை அளிக்க விரும்பி, அவரிடம் இது பற்றிப் பேச விரும்பினார்கள் சுபா. திரு.இறையன்புவிடம் இன்று காலை செல்பேசியில் தொடர்புகொண்டபோது, மாலை 5 மணிக்கு வருமாறு அழைத்தார். அதன்படியே எழுத்தாளர்கள் ‘சுபா’வை அழைத்துச் சென்று, இறையன்புவிடம் அறிமுகப்படுத்தினேன். அறிமுகப்படுத்தினேன் என்றால், ‘இவர்கள்தான் சுபா. இவர்கள் பெரிய எழுத்தாளர்கள். ஆயிரக்கணக்கான சிறுகதைகளையும், நூற்றுக்கணக்கான நாவல்களையும், சில திரைப்படங்களுக்குக் கதை, வசனமும் எழுதியிருக்கிறார்கள்’ என்று அல்ல. எழுத்தாளர்கள் ‘சுபா’வைத் தெரியாதவர்கள் இருக்க முடியுமா? திரு.இறையன்புவுக்கும் அவர்களைத் தெரிந்திருந்தது. என்ன... இவர்கள் ஒருவருக்கொருவர் பத்திரிகை எழுத்துக்கள் மூலமாக அறிந்திருந்தார்களே தவிர, நேரடி அறிமுகம் இல்லை. அவர்களின் சந்திப்புக்கு நான் ஒரு ஓடமாக இருந்தேன். அவ்வளவே!

நாலு பேருக்கு உதவ முடிந்ததில் மகிழ்ச்சி! அவற்றை இங்கே எழுதிப் பெருமைப்பட்டுக்கொண்டுவிட்டேன். ஆனால், என்னிடம் உதவி கோரி, நிறைவேற்ற இயலாமல் போனவை நாற்பதாவது இருக்கும். என்னிடம் வந்த அந்த நாற்பது கோரிக்கைகளில், எனக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாதவை, சாத்தியம் இல்லாதவை முப்பதாவது இருக்கும். மீதி, நான் உதவ முயன்றும், பல காரணங்களால் இயலாமல் போனவை.

உதாரணமாக, பழம்பெரும் தமிழறிஞர் மறைமலையடிகள் அவர்களின் மகன் வறுமைக்கோட்டின் கீழ் இருப்பதாகவும், தமிழக அரசாங்கத்தின் மூலமாகத் தன் குடும்பத்துக்கு ஏதேனும் நிதி உதவி பெற்றுத் தருமாறும் என்னிடம் சில மாதங்களுக்கு முன் கோரிக்கை வைத்தார். அவரைப் பற்றி ஜூனியர் விகடன் குழுவிடம் சொல்லி, அந்தப் பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளிவரச் செய்தேன். என்னால் முடிந்த உதவி அவ்வளவுதான்!

சென்ற வாரம் அவர் மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டு, தமிழக அரசு இதுவரை தன் குடும்பத்தைக் கண்டுகொள்ளவே இல்லை என்று வருத்தப்பட்டு, மீண்டும் நிதி உதவி கோரிக்கையை வைத்தார். “மன்னிக்கவும் ஐயா! இதில் நான் ஒன்றும் செய்வதற்கில்லை. நீங்கள் ஜூனியர் விகடனைத் தொடர்பு கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டேன்.

அதே போல், ஓவியர் கோபுலு கேட்ட ஓர் உதவி உள்பட இன்னும் பலவற்றை (நாற்பது கோரிக்கைகள் என்பது சும்மா ஒரு கணக்குதான். துல்லியமான புள்ளி விவரம் அல்ல) என்னால் நிறைவேற்றி வைக்க முடியவில்லை.

உதவி செய்யமுடிந்த விஷயங்களைப் பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியும் பெருமிதமும் அடையும் அதே வேளையில், உதவி செய்ய இயலாமல் விட்ட விஷயங்களையும் பகிர்ந்துகொண்டு வருத்தமும் சிறுமையும் அடைவதுதானே முறை!

ஆனால் ஒன்று... உதவ இயலாமல் போன நாற்பது விஷயங்கள் தந்த வருத்தத்தை, உதவ முடிந்த நாலு விஷயங்கள் அறவே போக்கி, பெரிய மன நிறைவை அளித்திருப்பது உண்மை!

.

19 comments:

மகிழ்ச்சி.
 
உங்க பதிவுகளை தொடர்ந்து படித்து வருவதில் ஒரு “மகிழ்ச்சி”
 
நீங்க ரொம்ப நல்வர்ர்ர்ண்ணே..
 
sir u r great.
 
உதவுவதில் தான் மகிழ்ச்சி உண்டு. அனைவரும் உதவுவோம்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
 
அருமையான அலசல்
 
http://valluvam-rohini.blogspot.com/2007/10/sep-17-2002.html

இந்த லிங்க் க்ளிக் செய்து பாருங்கள்
 
இடது கை கொடுப்பது வலது கைக்குத் தெரியக்கூடாது என்பார்கள். நீங்களோ, செய்த உதவிகளைப் பட்டியலிட்டுப் பதிவெழுதி ஜம்பம் அடித்துக்கொண்டு இருக்கிறீர்கள். வெட்கமாக இல்லையா? அப்படியும் என்ன பெரிய உதவி செய்துவிட்டீர்கள்? இயல்பாக எல்லாரும் செய்யக்கூடிய, செய்துகொண்டு இருக்கிற மிகச் சாதாரண உதவிகள்தான்!
- கே.ஆர்.
 
ஓவியர் கோபுலுவின் படம்தானே மேலே கொடுத்திருப்பது? ஆனால், அது ஆலவாய் அழகன் கதைக்கான படமா, திருச்சிற்றம்பலம் கதைக்கான படமா என்று குறிப்பிடவில்லையே? நிற்க. கோயில் பிரசாதம் தாங்கி வந்த உறையின் மீது பெரியார் தபால்தலை ஒட்டப்பட்டிருந்த முரண்பாடு பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். பல ஆண்டுகளுக்கு முன்னே பழநியில் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அங்கே தபால்தலை மீது குத்தப்படும் போஸ்டாபீஸ் முத்திரை ‘காவடி’ போன்று இருக்கும். பெரியார் தபால்தலை மீது காவடி முத்திரை குத்தி வந்த அந்த உறையைக் கண்டு நான் ரசித்துச் சிரித்தேன்.
 
ஒருவருக்கு உதவுவதில் கிடைக்கும் மனநிறைவு மற்ற எதிலும் கிடைப்பதில்லை. எல்லாருக்கும் உதவினேன் என்று சொல்வதில் இருக்கும் உங்கள் நேர்மை, என்னால் பல பேருக்கு உதவமுடிவதில்லை என்று சொல்வதிலும் இருப்பதைப்பார்த்து வியந்து போனேன்.
 
இந்தியக் கலாசாரத்தை பொறுத்தவரையில் யாசகம் கொடுப்பவரை விட, யாசிப்பவருக்குத்தான் பெருமை அதிகம் என எப்போதோ படித்தது‍ ஞாபகம் வருகிறது. உதவி கேட்பவர்களுக்கு‍ உதவி செய்வதன் காரணமாக நாம் புண்ணியத்தை பெற்றுக் கொள்வதால் அவர்களுக்கு‍ சிறப்பான ஓர் இடத்தை நமது‍ கலாச்சாரம் ஏற்படுத்தி கொடுத்துள்ளதாம்.
ஜெ. பாபு
கோவை-20
 
** பட்டர்ஃப்ளை சூர்யா! இரட்டைப் பின்னூட்டத்துக்கு இரட்டை மகிழ்ச்சி; இரட்டை நன்றிகள்!

** என்ன விசரன்... வடிவேலு மாதிரியா?!

** ஜீவன்பென்னி! பாராட்டுக்கு நன்றி! ஆனா, கிரேட்டெல்லாம் ஒண்ணும் கிடையாது! கே.ஆர். பின்னூட்டத்தைப் படிங்க!

** நன்றி மதுரை சரவணன்! எனது இந்தப் பதிவோட நோக்கத்தை நீங்க சரியாப் புரிஞ்சுட்டிருக்கீங்க!

** கோமா! உங்க லின்க் பிடிச்சு, உதவுதல் பற்றிய உங்கள் பதிவைப் படிச்சேன். அத்தனையும் முத்துக்கள்!
 
கே.ஆர்., உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் என் நன்றி! \\இயல்பாக எல்லாரும் செய்யக்கூடிய, செய்துகொண்டு இருக்கிற மிகச் சாதாரண உதவிகள்தான்!// ஆமாம். மிகச் சாதாரண உதவிகள்தான் அவை. அந்தச் சாதாரண உதவிகளைப் பட்டியலிடுவது எப்படி ஜம்பம் அடித்துக்கொள்வதாக ஆகும்? பெரிய உதவி செய்தால் மட்டும் அதைப் பதிவிடலாமா? அதுதானே ஜம்பம் அடித்துக்கொள்வதாக ஆகும்? அந்தப் பதிவின் நோக்கம், பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி உண்டாவதை மற்றவர்களுக்கும் அனுபவபூர்வமாக உணர்த்துவதே! ஒரு பஸ் ஸ்டாப்பில் யாரேனும் ஒரு இடத்துக்கு எந்த நம்பர் பஸ்ஸில் ஏறி, எங்கே இறங்கவேண்டும் என்று நம்மை விசாரிக்கும்போது, அதற்கான சரியான பதில் நமக்குத் தெரிந்திருந்து அவர்களுக்கு வழிகாட்ட முடிந்தால், அப்போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சியை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா திரு. கே.ஆர்? அதைத்தான் இந்தப் பதிவின் மூலம் நான் வெளிப்படுத்த நினைத்தேன். தங்களுக்கு வேறு மாதிரி தோன்றியிருந்தால், அது என் எழுத்தின் குறையே!
 
நன்றி கணேஷ் ராஜா! அந்தப் படம் கோபுலுவின் படமேதான்! ஆலவாய் அழகன் தொடரில் இடம்பெற்ற படம். அது சரி! ‘என் டயரி’ வலைப்பூவில் இடம்பெற்ற ‘அசகாய சுட்டிகள்’ பதிவுக்கு இடவேண்டிய ஒரு பின்னூட்டத்தைத் தவறுதலாக இங்கே இட்டுவிட்டீர்களோ? பழநி காவடி முத்திரை சமாச்சாரம் எனக்குப் புதுசு. சுவாரசியமும்கூட!
 
நன்றி கவிதைக் காதலன்!

புதியதொரு கோணத்தில் கருத்தைப் பகிர்ந்துள்ளமைக்கு நன்றி ஜெ.பாபு!
 
உதவுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை பல முறை அனுபவிக்கிறேன். தாங்கள் எழுதியிருப்பது மிக மிக உண்மை! இந்தப் பதிவு கூட ஓர் நல்ல உதவியே!
 
அந்த கோபுலுவின் படங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி..செய்ய முடிந்ததை பட்டியலிட்டீர்கள்..செய்ய முடியாததையும் பட்டியலிட்டீர்கள்.அதனால், உங்கள் நேர்மையைக் கண்டு மகிழ்ச்சி!
பின்னூட்டங்கள் கார,சாரமாக இருந்தும்,
வெளியிட்டீர்கள்..அதனால் உங்கள் பெருந்தன்மையைக் கண்டு மகிழ்ச்சி!!
எதில் இல்லை மகிழ்ச்சி??

அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
 
இந்த அவசர உலகத்தில் பொறுமையாக தகவல்களை பரிமாற்றம் செய்வதும், அவரவரது தத்தளிப்புகளை புரிந்து உதவுவதும் மகிழ்ச்சி தரும் உதவிகள்.இம்மாதிரி முடிந்த உதவிகளை உடனுக்குடன் செய்வதற்கு நிச்சயம் உத்வேகம் அளிக்கும் வகையில் இப்பதிவு அமைந்துள்ளது.நன்றிகள்.
 
இந்தப் பதிவு கூட ஒரு வகையில் வாசிப்பவருக்குச் செய்யும் உதவி தான். நல்ல ஓவியம், சில நல்ல தகவல்கள்.
உதவி செய்து விட்டு பலரும் கர்வப்பட்டுக் கொள்வார்கள். வாழ் நாள் முழுதும் சொல்லிக் காட்டிக் கொண்டே இருப்பார்கள்.
அது தான் தவறு .