உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, July 06, 2010

தாதா வீட்டில் நான்!

ரொம்ப நாளாக வலைப்பூ எழுதாததில் எனக்கு வருத்தம்தான். அலுவலகப் பணிகளும், திருமணம் போன்ற விசேஷங்களின்பொருட்டு வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தங்களும் சேர்ந்துகொண்டதால், வலைப்பூக்களில் எழுதமுடியவில்லை.

இனி, வாரம் ஒருமுறையாகிலும் தவறாமல் எழுத முயல்கிறேன்.

நான் வாடகைக்குக் குடியிருந்த பன்னிரண்டு வீடுகளைப் பற்றி எழுதுவதாகக் குறிப்பிட்டு, ஒன்பதாவது வீடு வரையில் எழுதி முடித்துவிட்டேன். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான அனுபவம்!

நெசப்பாக்கம் திலகவதி அப்பார்ட்மென்ட்டில் குடியிருந்தபோதுதான், எங்கள் குழந்தை ஷைலஜா யூ.கே.ஜி. முடித்தாள். பள்ளி வேனில்தான் போய் வருவாள். காலையில் எட்டு மணிக்கு அவளுக்கு யூனிஃபார்ம் அணிவித்து, கையில் டிபன் பாக்ஸ் ரெடி பண்ணித் தந்து, ஒரு குட்டி நாற்காலியைப் போட்டு அப்பார்ட்மென்ட் வாசலில் உட்கார்த்தி வைத்திருப்போம். வேன் வந்ததும், அதில் குழந்தையை ஏற்றி அனுப்பிவிட்டு, உள்ளே வருவார் என் மாமியார்.

சாயந்திரம் பள்ளி வேன், கடைசி குழந்தையாக ஷைலஜாவைத்தான் கொண்டு வந்து இறக்கிவிட்டுப் போகும். பெரும்பாலான நாட்களில் அவள் தூங்கியபடிதான் வருவாள். நாலு மணிக்குக் கிளம்பும் வேன் எல்லாக் குழந்தைகளையும் விட்டுவிட்டு, இவளைக் கடைசியாகக் கொண்டு வந்து எங்கள் வீட்டில் சேர்ப்பதற்குள் 6 மணி ஆகிவிடும். பள்ளி வேனில் ஒருமுறை நானும் சென்று வந்ததால், குழ்ந்தைக்கு எத்தனை அலுப்பு இருக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். தூங்குகிற குழந்தையை என் மாமியால் அப்படியே தூக்கிச் செல்ல முடியாது. உலுக்கி எழுப்பித்தான் இறக்கி அழைத்துப் போக வேண்டியிருக்கும். அசந்து தூங்குகிற குழந்தையை எழுப்ப அவர்களுக்குப் பாவமாக இருக்குமாம்.

இதனாலேயே பள்ளிக்கு அருகில் வீடு கிடைத்தால் நல்லது என அசோக் நகரில் தேட ஆரம்பித்துவிட்டேன். சிபிடபிள்யூடி குவார்ட்டர்ஸில் குடியிருந்தபோதிலிருந்து தமிழ்நாடு மளிகைக் கடையில்தான் வீட்டுக்குத் தேவையான சாமான்கள் வாங்குவது வழக்கம். அந்தக் கடையின் உரிமையாளர் முகம்மது இஸ்மாயீல் மற்றும் அவர் குடும்பத்தினர் அனைவரும் எங்களுக்கு நெருங்கிய பழக்கமாகிவிட்டதால், அவர்களிடமே “இந்தப் பக்கத்தில் வாடகைக்கு வீடு ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்” என்று அடிக்கடி கேட்டுக் கொண்டு இருப்பாள் என் மனைவி. அவர்களும் இன்முகத்தோடு, “அவசியம் சொல்கிறோம்” என்பார்கள்.

அச்சமயத்தில், புரோக்கர் மூலமாக, இந்தப் பக்கத்தில் ஒரு வீடு காலியாக இருப்பதாக அறிந்து, ஒரு மதிய வேளையில் வந்து பார்த்தேன். மிக மிக எளிமையான வீடுதான். அட்வான்ஸ் 5,000 ரூபாய்; வாடகை 500 ரூபாய். பள்ளிக்கு அருகில் குடிவந்தால் போதும் என்கிற எண்ணத்தில், முன்னே பின்னே யோசிக்காமல் உடனடியாக வந்து குடியேறிவிட்டேன்.

சாமான்களை ஒரு வேனில் எடுத்து வரும்போது, அதை ஓட்டி வந்த டிரைவர் சொன்னார்... “என்னா சார்! அங்கேயா குடி போகப் போறீங்க? பார்த்து, நாலு எடத்துல விசாரிச்சுட்டு வரக்கூடாதா சார்? ரொம்பப் பேஜாரான எடம் சார் அது! சாயந்திரம் 6 மணிக்கு மேல தெருவே நாறிடுமே! அடிதடி, சண்டைனு அமக்களப்படும். குடிச்சிட்டுத் தகராறு பண்ணுவானுங்க. ஒரே கலீஜா இருக்கும். எங்களுக்கே அந்தத் தெருவுல நுழைய கஸ்டமா இருக்கும். ரொம்ப ராவடியான எடம் சார் அது! ஏமாந்துட்டீங்களே சார்!”

டிரைவர் இப்படி வயிற்றில் ஏகத்துக்கும் புளியைக் கரைக்க, நொந்து நூலானேன்.

கீழே சின்னச் சின்ன போர்ஷன்களாக மூன்று குடித்தனங்கள்; கடைசி போர்ஷனில் நாங்கள் குடியேறினோம். மாடியில் வீட்டு ஓனர் குடியிருந்தார்.

முதல் போர்ஷனில் கல்லூரி மாணவன் ஒருவன் குடியிருந்தான். அவன் தன் பங்குக்கு ஒரு வெடிகுண்டை வீசினான். “இங்கே ஏன் சார் வந்து மாட்டிக்கிட்டீங்க? எப்படியாவது அட்வான்ஸைத் திரும்ப வாங்கிக்கிட்டு, சீக்கிரமே வேற வீடு பார்த்துப் போயிடுங்க. அதான் உங்களுக்கு நல்லது” என்றான். “என்னப்பா விஷயம்?” என்றேன் பதற்றத்தை மறைத்துக் கொண்டு.

“இந்த வீட்டு ஓனர் மேல பதினாலு கொலை வழக்கு இருக்குது. கூலிக்குக் கொலை செய்யும் கும்பலோட தலைவரு இவர். வெளியே டாடா சுமோ நிக்குது பார்த்தீங்களா, அதுல எப்பவும் தடி, தாம்பு, அரிவாளு, சூரிக்கத்தின்னு எல்லா ஆயுதமும் இருக்கும். ஆர்டர் வந்தவுடனே கிளம்பிப் போய், சம்பந்தப்பட்ட ஆளோட கை, காலை வாங்கிட்டு வந்துடுவாங்க. இல்லே, தீத்துடறதுன்னாலும் தீத்துட்டு வந்துடுவாங்க. எனக்கே இந்த விஷயம் தெரியாமத்தான் இங்கே வந்து மாட்டிக்கிட்டேன். எனக்கு இன்னும் கொஞ்ச நாள்ல காலேஜ் முடிஞ்சுடும். சொல்லிட்டு நல்லதனமா கிளம்பிடுவேன். நீங்களும் எப்படியாச்சும் கிளம்பிடப் பாருங்க” என்றான் அந்தப் பையன்.

எனக்கு அடிவயிற்றில் சொரேல் என்றது. கொடுத்த அட்வான்ஸ் தொகை திரும்பக் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, உடனே வேறு இடம் பார்த்துப் போய்விட வேண்டும் என்று மனசு துடித்தது.

பெரும்பாலான நாட்கள், அந்த வீட்டு வாசலில் ஒரு போலீஸ்காரர் ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருப்பார். தாதாவின் நடமாட்டத்தைக் கவனிப்பதற்காகவாம்! அந்தம்மா (ஓனரின் மனைவி) மிகவும் தன்மையாகத்தான் எங்களிடம் பேசினார்; பழகினார். “அவரு இல்லீங்களா? ரொம்ப நாளா காணோமே?” என்று இயல்பாகக் கேட்பதுபோல் ஒரு நாள் அவரிடம் கேட்டேன். “வெளிய போயிருக்கிறாரு. பத்து நாள்ல வந்துருவாரு” என்றார். இதைக் கேட்டுக்கொண்டு இருந்த அந்தக் கல்லூரி மாணவன் பின்னர் என்னிடம் தனியாக, “கேட்டீங்களா... வெளிய போயிருக்கிறாராம்! அதாவது, வெளியே போயிருக்கிறார்னா ‘உள்ளே’ போயிருக்கிறார்னு அர்த்தம். போலீஸ்காரங்க அப்பப்போ வந்து சந்தேக கேஸ்ல இவரை அழைச்சுக்கிட்டுப் போய், ஜெயில்ல பத்துப் பதினஞ்சு நாள் வெச்சிருந்து அனுப்புவாங்க. மாசத்துக்கு கேஸ் கணக்குக் காட்டணும்னாலும் இவரை அழைச்சுக்கிட்டுப் போயிடுவாங்க. அதைத்தான் அந்தம்மா பாலிஷா வெளிய போயிருக்கிறார்ங்குது!” என்றான்.

வயிற்றில் இப்படி அவன் அவ்வப்போது அமிலம் வார்த்துக்கொண்டு இருந்தாலும், பால் வார்ப்பது போலவும் ஒரு தகவலைச் சொன்னான். “சார்! இவங்க ஆளை வெட்டுறது, தீர்க்குறது எதுவும் நம்ம சென்னைல கிடையாது. ஏன், தமிழ்நாட்டுலேயே கிடையாதுன்னு சொல்லலாம். தமிழ்நாட்டு பார்டருக்குள்ள ஆர்டர் வந்தா எடுக்க மாட்டாங்க. ஆந்திரா, கேரளா, கர்நாடகான்னு போயி முடிச்சுட்டு வந்துடுவாங்க. பொதுவா இந்த மாதிரி தாதாங்க, அவங்க இருக்கிற ஏரியாவுல யார் கிட்டயும் தகராறு வெச்சுக்க மாட்டாங்க. நல்லதனமாவே நடந்துப்பாங்க” என்றான். கொஞ்சம் ‘அப்பாடா’ என்றிருந்தது.

நாங்கள் அங்கே ஆறு மாத காலத்துக்கும் குறைவாகவே இருந்தோம். நாங்கள் அங்கே இருந்த வரையில், வீட்டு ஓனரும் சரி, சுற்றி இருந்தவர்களும் சரி, (பெரும்பாலும் அனைவரும் ஒருவருக்கொருவர் உறவினர்களாகவே இருந்தார்கள்) எங்களிடம் மரியாதையாகவும் அன்பாகவுமே நடந்துகொண்டார்கள். தெருவில் உள்ள பொதுக் குடிநீர் தொட்டியில் தண்ணீர் எடுக்கப் போனால், “ஏய்... நவுரு! அய்யருக்கு வுடு! மொதல்ல அவரு தண்ணி பிடிச்சுக்கிட்டுப் போவட்டும்” என்பார்கள். “இருக்கட்டுங்க. நீங்க பிடிங்க. நான் அப்புறமா பிடிச்சுக்கிறேன்” என்றாலும் கேட்க மாட்டார்கள். “எவ்ளோ நேரம் இந்தக் கூட்டத்துல நிப்பீங்க? கொண்டாங்க கொடத்தை” என்று அந்தப் பெண்மணிகளே வாங்கி, நீர் நிரப்பித் தருவார்கள்.

சுகாதாரக் கேடான ஏரியா அது. வீட்டில் இருந்த கிணற்றுக்கு, கார்ப்பரேஷனில் இருந்து வாரம் ஒரு முறை வந்து மருந்து அடித்துவிட்டுப் போவார்கள். தெரு ஓரங்களில் பிளீச்சிங் மருந்து தெளித்துவிட்டுப் போவார்கள். எங்கள் குழந்தைகள் இருவருக்கும் முகத்தில் அடிக்கடி கட்டிகள் வந்து, உடைந்து, ரத்தம் ரத்தமாகப் பெருகி வழியும். பரிசோதித்த டாக்டர், “முதல்ல இடத்தை மாத்துங்க. தண்ணி சரியில்லாததாலதான் இப்படிக் கட்டிகள் வருது” என்றார்.

ஐந்து மாதங்களை அங்கே ஒருவழியாகக் கடத்திய பின்பு, வீட்டு ஓனரைச் சந்தித்து (அவர் ‘வெளியே’ போகாமல் இருந்த சமயத்தில்), எங்கள் அலுவலகத்திலேயே குவார்ட்டர்ஸ் கொடுக்கிறார்கள் என்று புளுகி, வீட்டைக் காலி செய்யவிருப்பதாகச் சொன்னேன். “சரிங்க சார்! நீங்க எப்ப வேணாலும் அட்வான்ஸை வாங்கிக்குங்க. நான் இல்லேன்னாலும் அம்மா கிட்ட கொடுத்துட்டுப் போறேன். தருவாங்க” என்றார் அவர்.

அதன்படியே அடுத்த வாரமே நான் அந்த வீட்டை காலி செய்ய, சொன்னபடியே வீட்டு ஓனர் ‘வெளியே’ போயிருக்க, அந்த மாதத்தில் நாங்கள் அங்கே குடியிருந்த இருபது நாளுக்குண்டான வாடகையை மட்டும் அவரின் மனைவி கணக்குப் பண்ணி அட்வான்ஸில் பிடித்துக்கொண்டு, மீதியை என்னிடம் தந்தார்.

நாங்கள் அடுத்துக் குடியேறிய இடம் (11-வது இடம்) வேறெங்கும் இல்லை; இப்போது குடியிருக்கும் இடத்தின் உரிமையாளரின் இன்னொரு வீடுதான்.

அங்கே சில ஆண்டுகள் குடியிருந்துவிட்டு, பின்னர் சாலிகிராமத்தில் சொந்த ஃப்ளாட் வாங்கி, அங்கே சில மாதங்கள் குடியிருந்து (12-வது இடம்), அந்த இடம் எங்களுக்குச் சரிப்பட்டு வராமல், மீண்டும் பெரியவர் முகம்மது இஸ்மாயீலின் வீட்டுக்கே வந்து, நாங்கள் முன்பு குடியிருந்த அதே போர்ஷனில் மீண்டும் குடியேறிய கதையைத்தான் முன்பு விரிவாக எழுதியிருந்தேன்.

பின்பு சில மாதங்கள் கழித்து, இப்போதுள்ள சற்றுப் பெரிய இடத்தில் முன்பு குடியிருந்தவர்களைக் காலி செய்யச் சொல்லிவிட்டு, எங்களுக்கு இந்த இடத்தை அளித்தார் பெரியவர் இஸ்மாயீல். இங்கே குடி வந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது.

மகன் பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரி செல்லும் வரை கண்டிப்பாக இங்கேதான் குடியிருப்போம். அதன்பின்பும், தொடர்ந்து இவர்களின் இல்லத்தில் குடியிருக்கவேண்டும் என்றுதான் ஆசை. பார்ப்போம்!

.

3 comments:

//இனி, வாரம் ஒருமுறையாகிலும் தவறாமல் எழுத முயல்கிறேன்.// மகிழ்ச்சி!
 
நான் இருக்கும் வட சென்னையில் இப்படியான தாதாக்கள் இருப்பது தெரியும். அசோக் நகரிலுமா?
 
கே.பி.ஜனார்த்தனன், கணேஷ் ராஜா இருவருக்கும் என் நன்றிகள்.

என் பதிவுகள் (இந்தப் பதிவு உள்பட) அனைத்தையும் உடனுக்குடன் படித்து, தமிழிஷ்-ஷில் ஓட்டு அளித்து அதைப் பாப்புலர் பதிவாக்கும் அன்பு உள்ளங்கள் அனைத்துக்கும் என் இதயம்கனிந்த நன்றிகள்!