உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, June 06, 2010

வீடு பேறு!

குறுகிய காலத்தில் மிக அதிக வீடுகளில் குடியேறிய சாதனைக்கு கின்னஸ் ரெக்கார்டில் இடம் இருக்குமானால், தாராளமாக நான் அதற்குத் தகுதி உள்ளவன். ஆறு ஆண்டுகளுக்குள் பன்னிரண்டு வீடுகள் மாறிய கதையை வலைப்பூவில் எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்த சமயத்தில்தான்...

எனது இன்னொரு வலைப்பூவான ‘என் டயரி’யில் ஒரு பதிவை இப்படித் தொடங்கியிருந்தேன். அந்த வீடுகள் மாறிய கதையை இங்கே எழுதுகிறேன்.

‘வீடு பேறு’ என்பது மோட்சத்தை, சொர்க்கத்தைக் குறிக்கும். சென்னையில் வாடகைக்கு வீடு பெறுவதும், வீடு பேறு அடைவதற்குச் சமமானதொன்று! 1984-ல் நானும் என் தம்பியுமாக கையில் மொத்தமே 2000 ரூபாயுடன் சென்னையில் வந்து செட்டிலானபோது, எம்.ஜி.ஆர். நகரில், புகழேந்தி தெருவில், ஒரு தூ........ரத்து உறவினர் வீட்டில், 90 ரூபாய் வாடகையில் குடியேறினோம். கரண்ட் பில்லுக்குத் தனியாக 10 ரூபாய்.

நான் ஆம்ப்ரோ பிஸ்கட் கம்பெனியில் வேலைக்குச் சேர, பிராட்வேயில் இருந்த ஜெமினி இன்ஸ்டிட்யூட்டில் டெலிவிஷன் மெக்கானிசம் பயின்றான் தம்பி.

நாங்கள் இருந்த வீட்டுக்கு எதிரில் தெலுங்குத் திரைப்பட இசையமைப்பாளர் ஒருவர் குடியிருந்தார். தினமும் அவர் வீட்டிலிருந்து ஆர்மோனிய இசையுடன், தெலுங்குப் பாடலை யாராவது பாடிக்கொண்டு இருப்பார்கள். அதே தெருவில், ஒரு சின்ன நர்ஸரி பள்ளிக்கூடம் இருந்தது. அதில் காலை வணக்கமாக, டி.எம்.எஸ் பாடிய ‘சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா’, ‘உள்ளம் உருகுதய்யா முருகா’, ‘அழகென்ற சொல்லுக்கு முருகா’, ‘உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை’ என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முருகன் பாடலைத்தான் பிள்ளைகள் கோரஸாகப் பாடுவார்கள். எனக்கு இது இனிய ஆச்சரியம்!

சில ஆண்டுகளில், சிதம்பரத்திலிருந்து என் தங்கை குடும்பமும் சென்னை வந்து செட்டிலாக, எல்லோருமாக மாம்பலம் கோதண்டராமர் கோவில் தெருவில் ஒரு வீடு பார்த்துக் குடியேறினோம். அதுவும் மிகச் சின்ன வீடுதான். குட்டியான கிச்சன் மற்றும் ஒரே ஒரு அறைதான். பல குடித்தனங்கள் கொண்ட வளாகம் அது. விசாலமான மொட்டை மாடி இருந்ததால், குடித்தனக்காரர்களில் ஆண்கள் அனைவரும் அந்த மொட்டை மாடியில்தான் படுப்பது வழக்கம். அங்கேயும் இன்னாருக்கு இந்த இடம் என்று எழுதப்படாத ஓர் ஒப்பந்தம் இருந்தது. அவரவரும் தங்கள் தங்கள் இடத்தில்தான் படுக்க வேண்டும்; இடம் மாறிப் படுத்தால் தகராறுதான்!

இந்த வீட்டில் இருந்தபோதுதான் நான் சாவி பத்திரிகையில் வேலை கிடைத்துச் சேர்ந்தேன். சுஜாதா, வைரமுத்து, பாலகுமாரன், மாலன் போன்ற பிரபலங்களின் அறிமுகம் கிடைத்தது இங்கே இருந்தபோதுதான். இலக்கிய எழுத்தாளர் பெருமதிப்புக்குரிய அசோகமித்திரன் நேரிலேயே வந்திருந்து, ‘மானஸரோவர்’ அத்தியாயத்தைக் கொடுத்துவிட்டுப் போன வீடு இது. அவர் கிளம்பி வாசலுக்குப் போய் தெருவில் இறங்கிய பின்னர்தான் தம்மை ‘அசோகமித்திரன்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். நேரிலேயே அவர் வருவார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை ஆதலால், அவரை யாரோ உதவியாளர் அல்லது உறவினர் என்றுதான் நான் அத்தனை நேரமும் நினைத்திருந்தேன்.

எனக்குத் திருமணம் ஆன சமயத்தில், அதே கோதண்டராமர் கோயில் தெருவில், கொஞ்சம் இட வசதி கூடுதலாக உள்ள வேறு ஒரு வீட்டில் குடியிருந்தோம். அந்த வீட்டு உரிமையாளர்கள் நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால், அவர்களின் பேச்சு பிராமணர்களைப் போலவே இருந்தது. நாங்கள் தண்ணி என்போம்; அவர்கள் தூத்தம் என்பார்கள். நாங்கள் வீட்டுக்கு என்று சொல்வோம்; அவர்கள் ஆத்துக்கு என்பார்கள். முழுச் சைவம். இதனால் நாங்கள் அவர்களை ரொம்பக் காலம் பிராமணர்கள் என்றே நினைத்துக்கொண்டு இருந்தோம். பின்பு, அவர்கள் பிராமணர்கள் அல்ல என்று தெரிந்தபோது ஆச்சரியமான ஆச்சரியம்! சின்ன வயதிலிருந்தே கணவனும் மனைவியும் பிராமணக் குடும்பங்கள் அதிகம் உள்ள பகுதியிலேயே வாழ்ந்ததால் தங்களுக்கு இயல்பாகவே பிராமண பாஷை வந்துவிட்டதாகச் சொன்னார்கள்.

பின்னர் நானும் என் மனைவியும் சைதாப்பேட்டையில் உள்ள ஒரு சின்ன வீட்டுக்குத் தனிக்குடித்தனம் போனோம். வி.ஜி.பன்னீர்தாஸ் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த, பல குடித்தனங்கள் அடங்கிய வளாகம் அது. நீளமான ஒரு ஹால், கிச்சன், கிச்சன் ஓரமாகவே ஒரு பெரிய சதுரப் பள்ளம்; அதில்தான் பாத்திரம் தேய்த்துக்கொள்ள வேண்டும்; குளியல் அறையும் அதுதான்! ஆறு குடித்தனங்களுக்கு ஒரே பொதுக் கழிப்பறை. பக்கெட்டில் தண்ணீர் வைத்துக் காத்திருக்க வேண்டும். சில சமயம் ஒன்றிரண்டு பேர் நமக்கு முன்னதாக இடம் பிடித்திருப்பார்கள்; சில சமயம் ஏழெட்டுப் பேருக்குப் பின்னால் நமது முறை வரும். எனவே, டூ பாத்ரூம் வருகிறதோ இல்லையோ, சம்பிரதாயமாக காலை வேளையில் பக்கெட் வைத்து இடம்பிடித்து ஒரு நடை ‘போய்விட்டு’ வந்துவிடுதல் உத்தமம்.

அங்கிருந்து நாங்கள் இடம்பெயர்ந்த இடம் மாம்பலம், கோவிந்தன் ரோடு. இதுவும் பல குடித்தனங்கள் கொண்ட மிகச் சின்ன இடம்தான். உள்ளே நுழைந்ததும் எட்டுக்கு எட்டு உள்ள ஒரு சதுர ஹால், பின்னால் ஒரு வால் மாதிரி கிச்சன். 600 ரூபாய் வாடகை, 6000 ரூபாய் அட்வான்ஸ் என்பது எனக்கு அந்நாளில் மலைப்பாக இருந்தது. சம்பளமே 1,200 ரூபாய்தான். ஆனால், நாங்கள் குடியிருந்த மற்ற இடங்களுக்கும் இந்த இடத்துக்கும் என்ன ஒரு வித்தியாசம் என்றால், மற்ற இடங்கள் எல்லாமே காரை பெயர்ந்த, பொக்கையும் பொத்தலுமான சிமெண்ட் தரை. இங்கே வழவழ மொஸைக் தரை.

இங்கே பக்கத்து போர்ஷனில் குடியிருந்த ஒரு காலேஜ் மாணவன், ரொம்ப நாளாக வாடகை கொடுக்காமல் டபாய்த்திருக்கிறான். ஒரு நாள் ராத்திரி பன்னிரண்டு மணி போல வந்து, தன் போர்ஷனிலிருந்து தனது சாமான்களை (அதிகம் இல்லை; ஒரு பெரிய சூட்கேஸ், டேபிள் ஃபேன் ஒன்று, சைக்கிள் ஆகியவை) எடுத்துக்கொண்டு கம்பி நீட்ட முனைந்தபோது, வீட்டு ஓனரிடம் வசமாக மாட்டிக்கொண்டான். கணவனும் மனைவியுமாக அந்தப் பையனைப் போட்டு அடி அடியென்று அடித்துத் துவைத்துவிட்டார்கள். அந்தப் பையனை ஒரு மூலையில் தள்ளி, அந்தம்மா அவனைக் காலால் எட்டி எட்டி உதைத்ததை இப்போது நினைத்தாலும் நெஞ்சு பக் பக்கென்று அடித்துக் கொள்கிறது.

மறுநாள், அந்தம்மா எங்களிடம் “என்ன... பயந்துட்டீங்களா?” என்று புன்சிரிப்புடன் கேட்டபோது, என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

ஆனால், அவர்கள் எங்களிடம் மிகவும் பிரியமாகத்தான் நடந்துகொண்டார்கள். அடிக்கடி எங்களுக்குத் தங்கள் வீட்டில் செய்த இனிப்புகளையும், தின்பண்டங்களையும் தங்கள் பெண் மூலம் கொடுத்தனுப்புவார்கள். அவர்கள் மகளின் மஞ்சள் நீராட்டுவிழாவில் என் மனைவி போய் கலந்துகொண்டு, வெஜிடபிள் பிரியாணியை ஒரு வெட்டு வெட்டிவிட்டு வந்தாள்.

அடுத்து நாங்கள் குடியேறிய இடம் கே.கே.நகர். ராவ்ஜி குடும்பம். இங்கேயும் இரண்டு அறைகள்தான். ஆனால், வீட்டம்மா ரொம்ப நல்ல மாதிரி. கன்ஸீவ் ஆகியிருந்த என் மனைவியைத் தன் மகள் மாதிரி கவனித்துக் கொண்டார். மாம்பலம் ஹெல்த் செண்டரில் என் மகள் ஷைலஜா பிறந்ததும், முதலில் கைகளில் வாங்கியவர் என் மனைவியின் அக்கா என்றால், அடுத்து அதை வாங்கிக் கொஞ்சியவர் இந்த வீட்டம்மாதான். பிரமீளா என்று பெயர். திருச்சியில் தனியே இருந்த என் மாமியாரையும், மனைவியின் தங்கையையும் சென்னைக்கே வரவழைத்துத் தங்க வைத்துக்கொண்டேன். கிட்டத்தட்ட நாங்கள் மூன்றரை ஆண்டுக் காலம் தங்கியிருந்த வீடு இது. இதற்கு முன்பெல்லாம் அதிகபட்சமாக ஒரு வீட்டில் ஒரு வருடம்தான் தங்கியிருப்போம்.

சாவி மூடப்பட்டது, நாங்கள் இந்த ராவ்ஜி வீட்டில் குடியிருந்தபோதுதான். வாடகை ரூ.500-தான் என்றாலும், அடுத்த மாத செலவுகளை எப்படிச் சமாளிக்கப் போகிறோம், வாடகையை எப்படிக் கொடுக்கப் போகிறோம் என்று பீதியாகவே இருந்தது எனக்கு.

நல்ல வேளையாக, அன்னையின் அருளால் ஆனந்த விகடனில் வேலை கிடைத்தது. என் மகன் ரஜ்னீஷ் பிறந்ததும் இங்கேதான்!

விகடன் நண்பர் ஒருவர் மூலமாக அசோக் நகர் சி.பி.டபிள்யூ.டி குவார்ட்டர்ஸில் 1,000 ரூபாய் வாடகையில் (ரூ.15,000 அட்வான்ஸ்) ஒரு வீடு வாடகைக்குக் கிடைத்தது. பெரிய பங்களா என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். விஸ்தாரமான பெரிய இரண்டு அறைகள், நீளமான தாழ்வாரம், வசதியான டாய்லெட், தாராளமான கிச்சன் எனக் குடிபோனபோது கொண்டாட்டமாக இருந்தது. ஆனால், முழுதாக ஒரு வருடம்கூட அங்கே குடியிருக்கக் கொடுத்து வைக்கவில்லை எங்களுக்கு.

மத்திய அரசுக்குச் சொந்தமான அந்த வீட்டை எக்ஸ்-சர்வீஸ்மென்னான அவர் இப்படி வெளியாருக்கு வாடகைக்கு விடக்கூடாது என்பதோ, நான் அங்கே குடியேறியது குற்றம் என்பதோ எனக்கு அப்போது தெரியாது. செக்கிங் வந்தபோதுதான் தெரிந்தது. ‘குறிப்பிட்ட தேதிக்குள் வீட்டை காலி செய்யும்படியும், இல்லையென்றால் போலீஸைவிட்டு அப்புறப்படுத்த வேண்டியிருக்கும்’ என்பதாகவும் கோர்ட் நோட்டீஸைக் கொண்டு வந்து என் வீட்டுக் கதவில் ஒட்டிவிட்டுப் போய்விட்டார்கள்.

வயிற்றில் புளியைக் கரைக்க, கோட்டூர்புரத்தில் இருந்த ஓனர் வீட்டுக்கு நடையாய் நடந்தேன், அட்வான்ஸைத் திருப்பிப் பெற! ஆனால், அவர் கண் ஆபரேஷனுக்காக புனேவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அப்போது அட்மிட் ஆகியிருந்தார். வேறு வழியில்லாமல், அவசரமாக கே.கே.நகரில் புரோக்கர் மூலம் வேறு ஒரு இடம் பார்த்துக் குடியேற வேண்டியதாகப் போயிற்று.

கே.கே.நகரில் ஒரு அய்யங்கார் வீட்டில் குடியேறினோம். வாடகை ரூ.2,000. அட்வான்ஸ் ரூ.20,000. முழி பிதுங்கிவிட்டது எனக்கு. என்றாலும், உடனடியாக வேறு இடம் கிடைக்கவில்லை. புரோக்கர் கமிஷனாக ஒரு மாத வாடகையை ரூ.2,000 அழுதேன்.

வீட்டுக்காரம்மா ரொம்பக் கெடுபிடி. வீட்டைச் சுற்றி உள்ள இடங்களைச் சுத்தமாகப் பெருக்க வேண்டும், காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்திருந்து வாசல் தெளித்துக் கோலம் போடவேண்டும் என்றெல்லாம் பல கட்டளைகள். ‘வாசல் கேட்டில் ஒண்ணுக்கு அடிக்கிறான் பாருங்க. பக்கெட் தண்ணி எடுத்து வந்து பினாயில் போட்டுச் சுத்தமா கழுவி விடுங்க’, ‘கேட்டு மேல ஏறி நிக்கறான் பாருங்க. இப்படி ரெண்டு தடவை ஆட்டினா, கேட்டு என்னத்துக்கு ஆகுறது?’ என்றெல்லாம் என் ஒன்றரை வயது மகனை ஏதாவது குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பார்.

திருட்டுப் பயம் அதிகம் உள்ள ஏரியா அது. நாங்கள் குடியிருந்த வீட்டிலும் ஒரு திருடன் வந்தான்.

அந்தக் கதை அடுத்த பதிவில்!

.

8 comments:

சார், பூனேவில் இருந்தபோது, மூன்று வருடத்தில் ஏழு முறை வீடு மாறியுள்ளேன் :) :)

அலுவலகத்தின் branch அருகில் இருக்கும்படி தங்கவேண்டும் என்று விரும்புவதால் இப்படி ஏழுமுறை மாற (தாவ)வேண்டிய சூழல். Branch என்றால் தாவத்தானே வேண்டும் :) :)

இந்தப் பதிவைப் படித்தவுடன், வீடு மாறிய நினைவுகள் எழுந்தன.

/ “என்ன... பயந்துட்டீங்களா?” என்று புன்சிரிப்புடன் கேட்டபோது / :)
 
ஒவ்வொரு வீட்டிலும் பெற்ற பல தரப்பட்ட அனுபவங்களை சுவை பட எடுத்து சொல்லியுள்ளீர்கள்.என்பதுகளில் நடுத்தர வாழ்வில் வாடகை வீட்டு வாழ்க்கையில் வீட்டு ஓனர்கள் வாடகைக்கு இருப்பவர்களை அவர்களது ஆளுமையில் தான் வைத்து இருப்பார்கள்.நன்மையோ தீமையோ, ஒவ்வொரு அசைவும் அவர்களது பார்வைக்குள்ளாகும் அவையனைத்தையும் விடாமல் சொன்னவிதம் நன்றாக இருந்தது. ஒவ்வொரு வீடு மாற்ற்த்திலும் ஷிப்டிங் பெரிய பாடு தான்....
 
அந்தக் கதை அடுத்த பதிவில்!
Waiting.
ந‌ன்றாக‌ இருக்கு உங்க‌ள் அனுப‌வ‌ம். :-)
 
இத்தனை வீடுகளுக்கு குடி போறது மட்டும் பெரிய விஷயமில்லை! ஒவ்வொரு வீட்டைப் பற்றியும் அதன் நினைவுகளையும் ஞாபகப்படுத்தி எழுதுவதே பெரிய விஷயம்தான்!
 
அது சரி..இப்படி சஸ்பென்ஸில விட்டுட்டீங்களே ஸார், எங்களை?
 
உங்கள் அனுபவத்துக்கு நேர்மாறான அனுபவம் என்னுடையது. நாற்பது ஆண்டுக் காலமாக, சூளைமேட்டில் ஒரே வீட்டில் குடியிருந்து, சமீபத்தில்தான் வேறு இடத்தில் சொந்த வீடு வாங்கிக் குடியேறினோம்.
திருடன் கதையை உடனே எழுதுங்கள். ஆர்வமாக இருக்கிறது.
 
* ரசனையான பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி பொன்னியின் செல்வன்!

* அனுபவித்துப் படித்திருக்கிறீர்கள் என்பது உங்கள் பின்னூட்டத்திலிருந்து தெரிந்தது பத்மநாபன். நன்றி!

* மன்னிக்கவும் வடுவூர் குமார்! அடுத்த பதிவில் என்று சொல்லி ஏமாற்றிவிட்டேன். டி.எம்.எஸ். பற்றிய பதிவொன்றை இட்டுவிட்டேன். கண்டிப்பாக அடுத்த பதிவு ‘வீட்டுக்குள் திருடன் புகுந்த கதை’தான்!

* ரவிஷா! பாராட்டுக்களுக்கு நன்றி!

* ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி! கண்டிப்பாக அடுத்த பதிவில் சஸ்பென்ஸை உடைத்துவிடுகிறேன்!

* நன்றி கணேஷ்ராஜா! அவசியம் எழுதுகிறேன். தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி!
 
சென்னைல ரொம்ப கஷ்டம்தான். சிலகாலம் நானும் சென்னையில் இருந்திருக்கிறேன் அப்ப பேச்சிலர் அதனால் பெரிய கஷ்டமாக இருக்கவில்லை.