உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, January 17, 2010

மந்திர மூன்றெழுத்து!

ன்பு மூன்றெழுத்து, அறிவு மூன்றெழுத்து, அண்ணா மூன்றெழுத்து என்று அடுக்கிக்கொண்டே போவார் கலைஞர் மு.கருணாநிதி. ஆனால், மக்களை ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக மயங்க வைத்த அந்த மந்திர மூன்றெழுத்து - எம்.ஜி.ஆர்-தான்! இன்றைக்கும் அவரின் பிறந்த நாளை முன்னிட்டுத் திரும்பும் திசையெல்லாம், தெரு முக்குகளில் எல்லாம் ஒரு ஸ்டூல் போட்டு, எம்.ஜி.ஆரின் படத்தை வைத்து மாலை அணிவித்து, ஊதுவத்தி ஏற்றி, அருகே ஸ்பீக்கரில் எம்.ஜி.ஆரின் படப் பாடலை ஒலிக்கவிட்டு, தங்கள் தலைவனை நெகிழ்ச்சியோடு மக்கள் நினைவுகூர்வதைப் பார்க்க முடிகிறது.

எனக்கு நினைவு தெரியத் தொடங்கிய காலத்திலிருந்தே நான் சிவாஜி ரசிகனாகத்தான் வளர்ந்தேன். நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது, என்னைப் போன்று சிவாஜி ரசிகர்களாக இருக்கும் பிள்ளைகளுடன்தான் நட்பு பாராட்டுவேன். எம்.ஜி.ஆரை ஒரு பையன் ரசிக்கிறான் என்றால், அவன் நிச்சயம் ஒரு ரவுடியாகத்தான் இருப்பான் என்று என்னவோ இனம்புரியாத பயம் அந்தப் பிஞ்சுப் பருவத்தில் என் மனதில் எழுந்திருந்தது. சிவாஜியின் படப் பாடல்களை ரசித்துக் கேட்கும் நான், எம்.ஜி.ஆர். பாடலையும் உள்ளுக்குள் ரசிப்பேன். வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டேன். சிவாஜியே சொந்தக் குரலில் பாடுகிறார் என்பது என் அப்போதைய எண்ணம். சிவாஜி அளவுக்கு எம்.ஜி.ஆரும் பாடிவிடுகிறாரே என்று மனசுக்குள் ஒரு காழ்ப்பு உணர்வு எழும். இருவருக்குமே டி.எம்.எஸ். என்கிற ஒரு காந்தர்வக் குரலோன்தான் பின்னணி பாடுகிறார் என்கிற உண்மை எனக்கு எட்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் தெரிய வந்தது. டி.எம்.எஸ்ஸின் அற்புதமான பாடல்களாலேயே நான் என்னையும் அறியாமல் எம்.ஜி.ஆரை ரசிக்கத் தொடங்கியிருந்தேன்.

நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர். படம் ‘குமரிக் கோட்டம்’. என் சின்ன வயதில் மிகவும் அரிதாகத்தான் நான் திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் சிவாஜி படங்கள்தான். இல்லையென்றால் பக்திப் படம். பத்தாம் வகுப்புக்கு வந்த பின்னர்தான், நான் தனியே சென்று திரைப்படங்கள் பார்க்கத் தொடங்கினேன். சிவாஜிக்கு அடுத்தபடியாக நான் அப்போது சென்று ரசித்துப் பார்த்தவை ஜெய்சங்கர் படங்கள்தான்.

எம்.ஜி.ஆர். படங்களில் நீரும் நெருப்பும், பல்லாண்டு வாழ்க இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த படங்கள். தவிர, மாட்டுக்கார வேலன், தாயைக் காத்த தனயன், எங்க வீட்டுப் பிள்ளை, நான் ஆணையிட்டால், அடிமைப் பெண், ஒளிவிளக்கு, சிரித்து வாழ வேண்டும், பறக்கும் பாவை எனப் பல படங்கள் பார்த்திருக்கிறேன். ரசித்தும் இருக்கிறேன்.

சிவாஜி நடிப்போடு எம்.ஜி.ஆர். நடிப்பை ஒப்பிடக் கூடாது. சிவாஜி படத்தோடு எம்.ஜி.ஆர். படத்தை ஒப்பிடக் கூடாது. இட்லி இட்லிதான்; தோசை தோசைதான்; பொங்கல் பொங்கல்தான்; பூரி பூரிதான். ஒவ்வொன்றும் ஒவ்வொறு சுவை. ஒன்றோடு ஒன்றை ஒப்பிடக் கூடாது. இந்த ஞானம் வந்த பின், நான் நிறைய எம்.ஜி.ஆர். படங்களையும் பார்க்கத் தொடங்கினேன்.

எம்.ஜி.ஆர். தமிழக முதல்வர் ஆனதிலிருந்து அவர் மறையும் வரையில் நான் அ.தி.மு.க. விசுவாசியாகத்தான் இருந்தேன். அவர் உயிரோடு இருந்திருந்தால், இன்றைக்கும் என் ஓட்டு அவருக்குத்தான்.

எனக்குத் தெரிந்து அவரின் ஆட்சி, பொற்கால ஆட்சிதான். அவரின் ஆட்சியிலும் எத்தனையோ போராட்டங்கள், வன்முறைச் சம்பவங்கள், கொலை, கொள்ளை போன்றவை நிகழ்ந்திருக்கலாம். ஆனால், இன்று போல் ஒட்டு மொத்தமாகச் சட்டம், ஒழுங்கு கெட்டுப் போய்விடவில்லை. எம்.ஜி.ஆர். இருக்கிறார்; அவர் பார்த்துக் கொள்வார்; ஜனங்களுக்கு எது நல்லது என்று அவருக்குத் தெரியும்; அவர் ஒரு முடிவு எடுத்தால், அது சரியாகவே இருக்கும். அவர் ஏழை எளியவர்களைக் கைவிட மாட்டார்; தவறு செய்கிறவர்கள் தக்க தண்டனை பெறுவார்கள் என்கிற நம்பிக்கை ஒவ்வொரு குடிமகனிடமும் அன்றைக்கு இருந்தது.

1983 அல்லது 1984 என்று நினைக்கிறேன்... வருடம் சரியாக நினைவில் இல்லை; அப்போது நான் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் தங்கிக்கொண்டு, டைப்ரைட்டிங் இன்ஸ்ட்ரக்டர் கோர்ஸுக்குப் படித்துக்கொண்டு இருந்தேன். ஆறு வார கோர்ஸ் அது. கோடை விடுமுறையில், அந்தப் பள்ளி வளாகத்தின் வகுப்பறைகளை எங்களைப் போன்ற மாணவர்கள் குழுக் குழுவாகத் தங்கிக் கொள்ள அனுமதித்திருந்தார்கள். ஆறு வார முடிவில் அந்தப் பள்ளியிலேயே தேர்வு நடத்தப்பட்டது.

மெயின் ரோட்டிலிருந்து உள்ளடங்கி இருந்த அரசுப் பள்ளி அது. காபி, டிபன், சாப்பாடு சாப்பிட வேண்டுமென்றால் நீள, நெடுக நடந்து ‘வெற்றி’ தியேட்டர் வரை வர வேண்டும். அப்படி ஒரு நாள் காலையில் 8 மணி சுமாருக்கு, நானும் என் நண்பர்களுமாக வந்து டிபன், காபி சாப்பிட்டுவிட்டுத் திரும்பிச் செல்கிறபோது, அங்கேயுள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒரே கூட்டமாக இருந்ததைப் பார்த்தோம். கூட்டம் என்றால் பெருங்கூட்டம் இல்லை; ஒரு முப்பது நாற்பது பேர் இருப்பார்கள். என்னவென்று அறிய ஆவலோடு போய் எட்டிப் பார்த்த எங்களுக்கு இன்ப அதிர்ச்சி. எம்.ஜி.ஆர். வந்திருந்தார். காவல்துறை உயர் அதிகாரிகளோடு அவர் ஏதோ தீவிரமாகப் பேசிக்கொண்டு இருந்தார். அவர் முகத்தில் கவலை படிந்திருந்தது. என்ன பிரச்னை என்று அப்போது தெரியவில்லை. நான் எம்.ஜி.ஆரை மிக அருகே பார்த்தது அப்போதுதான்! அவர் கிளம்பிச் செல்கிறவரைக்கும் இருந்து, அவரைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டுப் பின்னர் நாங்கள் எங்கள் பள்ளிக்கூடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.

பின்புதான், அகரம் நாராயணன் என்கிற ஒரு ரவுடி அன்றைக்கு அதிகாலையில் குரோம்பேட்டையில் சாலையோரம் இருந்த ரிக்‌ஷாக்காரர், பங்க் கடைக்காரர் என ஐந்தாறு பேரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டான் என்கிற விஷயம் தெரிய வந்தது. அதற்காகத்தான் நிலைமையை ஆராய எம்.ஜி.ஆரே நேரில் வந்துவிட்டுப் போயிருந்தார். அகரம் நாராயணன் காலில் ஸ்ப்ரிங் பூட்ஸ் அணிந்திருப்பான், எத்தனை உயரமான சுவரானாலும் சுலபமாக எகிறித் தாவிப் போய்விடுவான், அவனைப் பிடிக்கவே முடியாது என்றெல்லாம் வதந்திகள். எம்.ஜி.ஆர் போலீஸ் படையை முடுக்கிவிட்டு, அடுத்த சில மாதங்களிலேயே அவனைக் கைது செய்து சிறையில் தள்ளிவிட்டார். குரோம்பேட்டை மக்களுக்கு நெடு நாளாக இருந்த ஒரு தலைவலி ஓய்ந்தது.

பொதுவாகவே, ஆட்சியாளர்கள் மீது இப்போது இருப்பது போன்ற ஒரு வெறுப்போ, மிரட்சியோ மக்களுக்கு எம்.ஜி.ஆரிடம் இல்லை. நல்லவர்கள் அவர் ஆட்சியில் நிம்மதியாகத்தான் இருந்தார்கள். ஒரு திறமையான பஸ் டிரைவர் மீது, இவர் நம்மைப் பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்ப்பார் என்று முழு நம்பிக்கை வைத்துப் பயணிகள் அயர்ந்து தூங்குவதில்லையா, அது போல ஒரு நம்பிக்கை எம்.ஜி.ஆரிடம் மக்களுக்கு இருந்தது. கடவுள் போல, ஒரு தேவ தூதன் போலத்தான் மக்கள் அவரை மதித்தார்கள்; போற்றினார்கள்.

என்றாலும்கூட, கலைஞருக்கு இன்று தொட்டதற்கெல்லாம் பாராட்டு விழாக்கள் நடக்கிற மாதிரி எம்.ஜி.ஆருக்கு நடந்ததாகவே தெரியவில்லை. இத்தனை ஜால்ரா சத்தங்கள் அன்றைக்கு நம் காதைக் கிழிக்கவில்லை. துக்ளக் சோ எம்.ஜி.ஆரைத் தன் பத்திரிகையில் எத்தனையோ கேலிச் சித்திரங்கள் போட்டு, எம்.ஜி.ஆருக்கு ஆட்சி செய்யவே தெரியாது, கோமாளி ஆட்சி என்றெல்லாம் விமர்சித்தார். எதுவுமே எடுபடவில்லை!

எம்.ஜி.ஆர். எதையுமே கண்டுகொள்ளவில்லை. கலைஞர் போல் பதிலுக்குப் பதில் வரிந்து கட்டிக்கொண்டு அறிக்கை விடவில்லை; பதில் சொல்லிக்கொண்டு இருக்கவில்லை. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தார். அவர் மீது அம்பு எய்தவர்களே களைத்துப் போய் ஒரு கட்டத்தில் வில்லைக் கை நழுவ விட்டார்கள்.

யாரையும் எம்.ஜி.ஆர். எடுத்தெறிந்து பேசியதாக, யோசித்துப் பார்த்தாலும் எனக்குத் தெரியவில்லை. குறிப்பாக, தொழிலில் போட்டியாக இருந்த சிவாஜி கணேசன், அரசியலில் போட்டியாக இருந்த கருணாநிதி இருவரையும் எம்.ஜி.ஆர். ஒரு நாளும் தரக் குறைவாகவோ, மரியாதைக் குறைவாகவோ விமர்சித்ததில்லை. ‘என் நண்பர் கருணாநிதி அவர்கள்...’, ‘என் தம்பி கணேசன்...’ என்றுதான் பேசுவார்.

ஒருமுறை, சென்னை வானொலியில் வி.ஐ.பி. தொகுத்து வழங்கும் தேன் கிண்ணம் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக்கொண்டு இருந்தது. தொகுத்து வழங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிவாஜி ரசிகன் என்ற முறையில் அந்த நிகழ்ச்சியை நானும் ரசித்துக் கேட்டேன். டி.எம்.எஸ். பாடல்கள் பட்டையைக் கிளப்பின. சிவாஜி ஒவ்வொரு குறிப்பைச் சொன்ன பிறகும் அதற்கான பாட்டு ஒலிபரப்பாகும். இப்படிப் பத்துப் பன்னிரண்டு பாடல்கள் அன்று ஒலிபரப்பாயின. பெரும்பாலும் தான் நடித்த படங்களிலிருந்தும், ஒன்றிரண்டு பாடல்களை மட்டும் வேறு சில படங்களிலிருந்தும் தொகுத்து வழங்கினார் சிவாஜி. நிகழ்ச்சியின் இறுதிவரையில் எம்.ஜி.ஆர். பாடல் எதையுமே சிவாஜி குறிப்பிடவில்லை; ஒலிபரப்பவில்லை. சிவாஜி ரசிகனாக இருந்தபோதிலும், எனக்கே இது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது.

மறுநாள், செய்தித்தாள்களில் எம்.ஜி.ஆர். தேனியிலோ அல்லது பெரியகுளத்திலோ கூட்டத்தில் பேசிய பேச்சு முழுமையாகப் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. படித்தேன். சிவாஜியைப் பற்றிக் குறிப்பிட்டு ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்திருந்தார். “தம்பி கணேசனுக்கு இணையான நடிகர் உலகிலேயே இல்லை. ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ சிறந்த நடிகர். அதனால், நமது கணேசனை ‘தென்னகத்து மார்லன் பிராண்டோ’ என்பார் அறிஞர் அண்ணா. உண்மையில், மார்லன் பிராண்டோதான் தன்னை ‘ஹாலிவுட் சிவாஜி’ என்று பெருமையோடு சொல்லிக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு ஈடு, இணையற்ற நடிகர் தம்பி கணேசன்” என்று பேசியிருந்தார். சிலிர்த்துப் போனேன்.

எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர்தான். அவர் இடத்தை இனியொருவர் பிடிக்க முடியாது!
.

17 comments:

சிவாஜி ரசிகர்களுக்கு இருந்த எண்ணவோட்டத்தை அப்படியே படம் பிடித்து காட்டிய நீங்கள் ,அதே ரசிகர்கள் படிப்படியாக எப்படி எம் . ஜி . ஆர் யும் ரசிக்க ஆரம்பித்தார்கள் என்பதையும் அழகாக சொல்லியுள்ளீர்கள். குறிப்பாக முதல் முறை ஆட்சிக்கு வந்தவுடன், மிக மிக எதார்த்தமான மக்களாட்சியையும் , மக்களும் '''தலைவன் இருக்கிறான் கலங்காதே ''' எனும் மனோ நிலையில் இருந்ததையும் சிறப்பாக
உங்களுக்கே உரித்தான எளிமை + இனிமை நடையில் அருமையாக பதித்துள்ளீர்கள் ... வாழ்த்துக்கள்
 
நல்ல பதிவு சார்..:)
 
தனி ஒரு மனிதனாக அவர் பெற்ற கஷ்டங்களும் அவமானங்களும் ஏராளம். அதையெல்லாம் மீறி தனி சக்தியா திகழ்ந்தார் என்பதில் மாற்று கருத்து இல்லை.

அசைக்க முடியாத தனது அரசியல் செல்வாக்கால் அவர் எதை வேண்டுமானாலும் செய்திருக்கலாம்.

ஆனால் எதையும் செய்யவில்லை.
 
எம்.ஜி.ஆர் பாடல்கள் மிக உத்வேகம் அளிக்கிறது. கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கத் தோனுகிறது.

எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் தமிழீழம் அமையவும் வாய்ப்பு அமைந்திருக்கும். இனி காலம்தான் விடை சொல்லும்.

எம்.ஜி.ஆரைப் பற்றிய பகிர்தல்; மிக நல்லப் பதிவு சார்!
 
மிக நல்ல பதிவு...நன்றி
 
excellent review... thanks for the thalaivar post....
 
சிவாஜி அவர்களை பற்றி படித்து தெரிந்துகொண்ட அளவிற்கு எம்ஜியார் அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் எங்கின்ற ஆர்வம் எனக்கு ஏன் வரவில்லை எங்கின்ற கேள்வி என்னுள் இதை படித்த பொழுது தோன்றுகின்றது.
 
சமீபத்தில் கமலைப் பாராட்டி ரஜினி பேசிய நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. உண்மையிலேயே எம்.ஜி.ஆர். தலைமுறைகளைத் தாண்டி வாழ்ந்துக் கொண்டிருப்பவர் தான். நல்ல பதிவு சார்.
 
As you say his ruling was very good till he got the friendship of notorious UDAYAR

Suppamani
 
பொன்மனச் செம்மல் பத்தி அதிகம் தெரியாத என்னைப் போன்றவர்களுக்குப் பல விஷயங்களைப் புரிய வெச்சுது உங்களோட இந்தப் பதிவு. எம்.ஜி.ஆர். பிறந்த நாளுக்கு நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன். கூடவே வேற சில விஷயங்களும் எழுதியிருக்கேன். படிச்சுட்டு உங்க கருத்தைச் சொல்லுங்ணா! ப்ளீஸ்!
 
யாரையும் எம்.ஜி.ஆர். எடுத்தெறிந்து பேசியதாக, யோசித்துப் பார்த்தாலும் எனக்குத் தெரியவில்லை. குறிப்பாக, தொழிலில் போட்டியாக இருந்த சிவாஜி கணேசன், அரசியலில் போட்டியாக இருந்த கருணாநிதி இருவரையும் எம்.ஜி.ஆர். ஒரு நாளும் தரக் குறைவாகவோ, மரியாதைக் குறைவாகவோ விமர்சித்ததில்லை. ‘என் நண்பர் கருணாநிதி அவர்கள்...’, ‘என் தம்பி கணேசன்...’ என்றுதான் பேசுவார். ............ good one!
 
ரவிபிரகாஷ்,

முடிந்தால் இந்தப் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
http://nhm.in/shop/978-81-8493-359-8.html

அன்புடன்
ஆர். முத்துக்குமார்
கிழக்கு பதிப்பகம்
 
@ விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி பத்மநாபன்!

@ மிக்க நன்றி பலா பட்டறை!

@ கருத்துக்கு நன்றி சூர்யா!

@ பொன்னியின் செல்வன்! பின்னூட்டத்துக்கு நன்றி!

@ நன்றி ராஜ்!

@ நன்றி மகா!

@ நன்றி ஜீவன்பென்னி!

@ நன்றி இரமேஷ்குமார்! பதிவிடும்போதே ரஜினியின் பேச்சு பற்றிய நினைவு எனக்கும் வந்தது. பதிவுடன் ஒட்டாமல் தனித்து நிற்கப் போகிறதே என்கிற எண்ணத்தில்தான் தவிர்த்துவிட்டேன்.
 
@ சுப்பாமணி! பின்னூட்டத்துக்கு நன்றி!

@ கிருபாநந்தினி! அவசியம் படிக்கிறேன். நன்றி!

@ நன்றி சித்ரா!

@ நன்றி முத்துக்குமார்! அவசியம் தாங்கள் பரிந்துரைத்த புத்தகத்தைப் படிக்கிறேன்.
 
இந்தப் பதிவுக்குத் தமிழிஷ்ஷில் வோட்டளித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!
 
எம்.ஜி.ஆர்...... எம்.ஜி.ஆர்.தான். தமிழகத்தில் அவரது ஆட்சி உண்மையிலே பொற்கால ஆட்சி.

1990 - 2000 த்தில் செயற்கை கோள்
தொ(ல்)லைக்காட்சிகள் வரும் வரை திரையரங்குகளில் அவரது படங்கள் தான் ரசிகர்களை பெருமளவில் ஈர்த்து வந்தன என்றால் மிகையில்லை.
 
SUPER