உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, January 11, 2010

என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு!

ல்யாணி என்கிற முகம் தெரியா அன்பரிடமிருந்து என்னுடைய ‘என் டயரி’ வலைப்பூவில் நான் இட்டிருந்த ‘நலமா ஞாநி?’ பதிவுக்கு ஒரு பின்னூட்டம் வந்தது. அதன் சாராம்சம் கீழே:

“இது இந்தப் பதிவுக்குப் பொருத்தமில்லாததாக இருந்தபோதிலும், நீங்கள் விகடனில் பணியாற்றுகிறவர் என்பதால் இந்த யுஆர்எல் இணைப்பை உங்களுக்கு அனுப்ப விரும்புகிறேன். (இணைப்பு: என்டிடிவி.காம்.) மிகுந்த மன வருத்தம் அளிக்கக்கூடிய இந்தச் செய்தியை என்டிடிவி.காம்.-ல் படித்தேன். எனக்குத் தெரிந்த வரையில் இந்தச் செய்தி துரதிர்ஷ்டவசமாக எந்தத் தமிழ்ப் பத்திரிகைகளிலும், செய்தித் தாள்களிலும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்படவில்லை. விகடனாவது தனது வெப் பேஜில் இதை ஒரு செய்தியாக வெளியிட்டிருக்கும் என்று எதிர்பார்த்தேன். இல்லை. என்டிடிவி வெளியிட்டிருக்கும் இந்தச் செய்தி என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது. சம்பந்தப்பட்ட தமிழ்நாடு அமைச்சர்களின் மீதான என்னுடைய கோபத்தை வெளிப்படுத்த என்னிடம் போதிய வார்த்தைகள் இல்லை. இறந்துபோன அந்தக் காவலரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சம்பந்தப்பட்ட அந்தத் தார்மிக மற்றும் அற நெறி உணர்வுகள் அற்ற, தகுதியற்ற அமைச்சர்கள் தினம் தினம் தூக்கம் கெட்டு, குற்ற உணர்ச்சியோடும் குடைகிற மனத்தோடும் நெடுங்காலம் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்!”

கல்யாணி கொடுத்திருந்த இணைப்பில் கண்ட என்டிடிவி செய்தியின் தமிழாக்கம் கீழே:

காவலர் ஒருவர் சாலையில் தாக்கப்பட்டார்; அமைச்சர்கள் அதிர்ச்சியுடன் காரில் அமர்ந்திருந்தனர்; உதவிக்கு யாரும் வரவில்லை!

மிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.வெற்றிவேல் என்கிற காவலர் சாலையில் விழுந்து துடிதுடித்தபடி உதவி கேட்டுக் கெஞ்சிக்கொண்டு இருக்கிறார். 44 வயதுடைய அவரின் கால்கள் ஒரு ரவுடிக் கும்பலால் துண்டிக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த இந்தச் சாலை வழியாக அரசு கார்களின் அணிவகுப்பு ஒன்று கடக்கிறது. தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர் (மொய்தீன் கான்) மற்றும் ஹெல்த் மினிஸ்டர் (எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்) இருவரும் அந்த அணிவகுப்பில் இருக்கிறார்கள். கார்களின் ஊர்வலம் நிற்கிறது. இரு அமைச்சர்களுமே தங்கள் கார்களை விட்டு இறங்கவில்லை. அவர்களுடன் அரசுத்துறை அதிகாரிகளான மாவட்ட ஆட்சியாளரும், ஹெல்த் செக்ரெட்டரியும் இருக்கிறார்கள்.

எட்டு நிமிடங்கள் கழிந்த பிறகு, கலெக்டர் ஜெயராமன் மிகுந்த தயக்கத்துடன் ஒருவழியாகக் காரை விட்டுக் கீழே இறங்குகிறார். ஆனால், யாருமே அடிபட்டுக் கிடக்கும் அந்தக் காவலரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முன் வரவில்லை. கடைசியாக கலெக்டர் ஆம்புலன்ஸுக்குப் போன் செய்கிறார். ஆனால், அது வரவில்லை.

இருபது நிமிடங்களுக்குப் பிறகு, அந்த போலீஸ்காரர் அந்தக் கார்களில் ஒன்றில் கிடத்தப்படுகிறார். (அப்போதும் அமைச்சர்கள் தங்கள் கார்களை வழங்க முன்வரவில்லை.) மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அந்தக் காவலர் இறந்துவிடுகிறார்.

ஆம்புலன்ஸ் வந்து போன பிறகு, ஹெல்த் மினிஸ்டர் தன் காரை விட்டுக் கீழே இறங்குகிறார்.

பின்னர் இது பற்றி அவரது கருத்தைக் கேட்டறிய முயன்றபோது, அவர் தன்னைத் தனியே விடுமாறு என்டிடிவி நிருபரிடம் கோபத்துடன் எரிந்து விழுகிறார்.

நடந்த நிகழ்வுகளில் எந்தத் தவறும் இல்லையென்று, அந்த கார் ஊர்வலத்தில் கலந்துகொண்ட மூத்த அதிகாரியான வி.கே.சுப்புராஜ் சொல்கிறார். “அந்தச் சூழ்நிலையில் என்ன செய்யமுடியுமோ அதை நாங்கள் சிறப்பாகவே செய்தோம். ஆம்புலன்ஸ் வருவதற்கு 20 நிமிடங்கள் ஆகிவிட்டன. போலீஸார் சிறப்பாகச் செயல்பட்டனர்...” என்று என்டிடிவி-க்கு அளித்த தொலைபேசி பேட்டியில் சொன்னார் அவர்.

கீழே வீடியோ இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது அந்த அமைச்சர்களின் விசிட்டைப் படமெடுப்பதற்காகச் சென்ற ஃப்ரீலான்ஸ் காமிராமேனால் பதிவு செய்யப்பட்ட காட்சியாகும். இது மிகக் கொடூரமான காட்சியாகவும், குழந்தைகள் பார்க்க முடியாத அளவுக்கு மோசமானதாகவும் உள்ளது.

(என்டிடிவி.காம்-ல் அந்த வீடியோ இணைப்பும் உள்ளது. உயிருக்குப் போராடும் காவலரின் உடம்பு கொடூரம் தெரியாத அளவுக்கு மாஸ்க் செய்யப்பட்டுள்ளது.)

வீடியோ காட்சியைப் பார்த்தபோது வயிறு பற்றி எரிந்தது. ‘என்னங்கடா இது அக்கிரமா இருக்கு’ என்று ஆத்திரம் வந்தது. தமிழ்த் திருநாட்டில் காவலர் ஒருவருக்கே பாதுகாப்பு இல்லை; அதுவும் மாண்புமிகுக்கள் கண் எதிரேயே துடிதுடித்துக் கிடக்கும் அவரைக் காப்பாற்ற நாதியில்லை என்றால், நாமெல்லாம் எந்த மூலை என்கிற பயம் வந்தது.

வேறு யாரோ ஒரு காவலரின் குடும்பப் பிரச்னையால் அவரைத் தாக்கத் திட்டமிட்டவர்கள் ஆள் மாறி, வெற்றிவேலைக் கண்டம்துண்டமாக வெட்டிப் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். வெட்டுப்பட்டவர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்; தீவிரவாதியாகவேகூட இருக்கட்டும். உடனடியாக அவரைக் காப்பாற்ற முனைவதுதானே மனிதப் பண்பு!

சமீபத்தில்தான் உச்ச நீதிமன்றம் பொன்னான ஒரு தீர்ப்பை வழங்கியது. சாலையில் அடிபட்டுக் கிடக்கும் நபரைக் கொண்டு வந்து சிகிச்சைக்குச் சேர்த்தால், எந்த மருத்துவமனையும் போலீஸ் எஃப்ஐஆர், லொட்டு லொசுக்கு என்று கேட்டு அலைக்கழிக்கக்கூடாது; உடனடியாக அவருக்குச் சிகிச்சை அளித்துக் காப்பாற்ற வேண்டும்; மற்ற சம்பிரதாயங்களைப் பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்கிறது அந்தத் தீர்ப்பு. இங்கே அடிபட்டவரை மருத்துவமனைக்குக் கொண்டு போகவே அத்தனை தயக்கம். இதற்கும் உச்ச நீதிமன்றம் பிறகு ஒரு தீர்ப்பு வழங்குமோ என்னவோ!

அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும் ஒரு காவலரைக் காப்பாற்ற அமைச்சர்களே தயங்கும்போது, சாமானிய மக்களைக் குறை சொல்ல என்ன இருக்கிறது!

ஆங்கிலத்தில் ‘Ill Joke’ என்று ஒரு வகை நகைச்சுவைத் துணுக்குகள் உண்டு. அப்படி ஒரு வேதனையான நகைச்சுவைத் துணுக்கு இதோ:

மந்திரி 1: “எனக்கு ரொம்ப மென்மையான, இரக்கமுள்ள மனசு. உங்களுக்கு எப்படி?”

மந்திரி 2: “எனக்கும் அப்படித்தான்! ஒருத்தர் வேதனையில துடிக்கிறதைப் பார்க்க எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும். மனசு தாங்காது!”

மந்திரி 1: “அப்ப சரி, ரெண்டு பேருமே கண்ணை மூடிக்கிட்டு இங்கே கார்லேயே இருப்போம். ஆம்புலன்ஸ் எப்ப வந்து அவரைக் கூட்டிட்டுப் போகுதோ, போகட்டும்!”
.

10 comments:

//‘என்னங்கடா இது அக்கிரமா இருக்கு’ என்று ஆத்திரம் வந்தது. தமிழ்த் திருநாட்டில் காவலர் ஒருவருக்கே பாதுகாப்பு இல்லை//

உங்கள் ஆத்திரம் நியாமானதுதான். காவலரின் உயிருக்கே இப்படி என்றால் சாமானியர்களின் உயிர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். உங்கள் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள வீடியோ கிளிப்பிங்கை நானும் பார்த்தேன். வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கும் அவர் எழுந்திருக்க முயற்சிப்பதும் பின்னர் முடியாமல் சுருளுவதுமான காட்சிகள் மனதை என்னவோ செய்தது. நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

ரேகா ராகவன்.
 
நம்ம நாட்டோட எத்தனயோ சாதனைகள்ல இதுவும் ஒன்னுதான்...
 
போலீசுக்கே இந்த கதின்னா ?
 
என்ன பண்ண, அ தி மு க அமைச்சர்னா திட்டலாம், தி மு க வா அமைச்சர் ஆச்சே.
 
அக்கிரமம் மட்டும் இல்லை ரவி! அசிங்கமும் கூட! ஒரு மாநிலத்தின் இரண்டு அமைச்சர்கள், அதில் ஒருவர் சுகாதாரத்துறை அமைச்சர் கண் எதிரில் ஒரு சாகத்துடிக்கிறார்! அவரை காப்பாற்றாமல், இரண்டு அமைச்சர்களும் காரில் உட்கார்ந்துகொண்டு பல் குத்திக்கொண்டிருக்கிறார்கள்! இதையெல்லாம் விட அசிங்கம், அந்த அமைச்சர்களை தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்யாமல் வைத்திருப்பது! கண்ணெதிரில் நடக்கும் ஒரு விஷயத்தை இவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்றால், கண்ணுக்குத்தெரியாமல் நடக்கும் பல விபத்துகள்/நிகழ்வுகள்/பேரிடர்கள் இவைகளைப் பற்றி இவர்கள் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை நினைத்தாலேயே பயம் வருகிறது! அந்நியன் ஸ்டைலில் இவர்களை ஜல்லிக்கட்டு மாடுகளாலேயே முட்டவைத்து சாகடிக்கவேண்டும்!
 
Thank you so much for respecting my comment and bringing it out in a separate post. I kept looking at your vikatandiary blogspot and did not see my comment or your response in that. Honestly, I should admit that I was little disappointed. However, after going through your post here, and seeing a news article about this in vikatan, I am quite impressed. Magazines and blogs can definitely take this news to a larger audience than what I can do. Thanks again.

By the way, I really liked your Tamil translation of my comment. Special thanks for that.
 
ரேகா ராகவன், அண்ணாமலையான், பின்னோக்கி, Anonymous, ரவிஷா அனைவருக்கும்... என் மனதில் பொங்கி வந்த உணர்வில் பங்கெடுத்துக்கொண்டமைக்கு நன்றி!
 
திரு.கல்யாணி, வணக்கம். எனது ‘என் டயரி’ பதிவுக்கான தங்கள் பின்னூட்டத்தையும், கொடுத்திருந்த யூஆர்எல் இணைப்பைக் கிளிக் செய்து, அந்தச் செய்தியையும் வாசித்தபோதே, மனம் கனத்தது. இதை இப்படியே பின்னூட்டம் அளவிலேயே முடித்துப் பதில் போட்டுவிடாமல், என் ஆதங்கத்தையும் சேர்த்து தனிப் பதிவாகவே எழுத வேண்டும் என்று தீர்மானித்தேன். நியாயமாகத் தங்களுக்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும்.
 
What you sow you reap. The same police has harassed people who came forward to help accident victims and treat all as criminals.

Now let them start working as the servants and friends of public rather than to dance to the tunes of petty politicians.
 
எதுக்கும் கேமரா man ஜாக்கிரதையாக (safe - ஆக) இருக்க வேண்டுகிறேன்.

ஏனெனில் இப்படி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டதனால் ஆளும் கட்சியால் முறையான விளக்கம் அளிக்க (மழுப்ப) முடியாமல் போய் விட்டது.

அவர்கள் கோபம் எல்லாம் camera man மீது தான் திரும்பும்.
தாங்கள் செய்த தவறை மறைக்க அடுத்தவர் மீது கோபம் கொள்வது இது போன்றவர்களுக்கெல்லாம் (வேடிக்கை பார்த்தவர்களுக்கு) வாடிக்கைதானே? இல்லையென்றால் தலைமையிடம் வாங்கி கட்டிக்கொண்டு பதவியை இழந்து மக்களிடம் கொள்ளை அடிக்க முடியாது வருமானம் நின்று போகுமே இந்த மானம் கெட்டவர்களுக்கு?