உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, January 11, 2010

3 இடியட்ஸ் - விமர்சனம்

‘இடியட்’ என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து உருவானது. இன்றைக்கு முழு முட்டாள் என்கிற அர்த்தத்தில் இது வழங்கப்பட்டாலும், ஆரம்பத்தி்ல் இதன் பொருள் ‘குறிப்பிட்ட துறையில் சிறப்புப் பயிற்சி இல்லாதவன்’ என்பதுதான். எனவே, வேறு ஒன்றில் அவன் கெட்டிக்காரனாக இருக்க வாய்ப்புண்டு. அவன் எதற்கும் உதவாத முழு மூடன் அல்ல.

அந்த வகையில் ‘த்ரீ இடியட்ஸ்’ என்ற தலைப்பு இந்தப் படத்தில் சொல்லப்பட்டுள்ள கதைக்கு மிகவும் பொருத்தமானதே!

இந்தப் படம் நமது கல்வி முறையைக் கேள்விக்குள்ளாக்குகிறது, பிள்ளைகளின் விருப்பத்துக்கு விடாமல் அவர்களை இன்ஜினீயர், டாக்டர் என்று அதிக வருமானம் வரக்கூடிய படிப்புகளைப் படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் பெற்றோர்களுக்கு ஒரு பாடமாக இருக்கிறது என்றெல்லாம் கேள்விப்பட்டதில், ரொம்ப போரடிக்குமோ என்று கொஞ்சம் பயந்துகொண்டேதான் இந்தப் படத்தைப் பார்த்தேன்.

நல்லவேளையாக ரொம்பவெல்லாம் மெசேஜ் சொல்லி போரடிக்கவில்லை. கதையோட்டத்தில் மெசேஜ் இரண்டறக் கலந்திருக்கிறது.

ராஞ்சோதாஸ் ஷ்யாமல்தாஸ் சஜ்ஜத் - ‘3 இடியட்ஸ்’ படத்தில் அமீர்கான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் இது. சுருக்கமாக ராஞ்சோ.

வகுப்பில் முதலாவதாக வரும் ராஞ்சோ திடீரென்று ஒரு நாள் கல்லூரியைவிட்டுக் காணாமல் போகிறார். அவரைத் தேடிக்கொண்டு கிளம்புகிறார்கள் அவருடைய நண்பர்களான ஃபர்ஹான், ராஜு இருவரும். ஃபர்ஹானாக நம்ம மாதவன்; ராஜுவாக ஷர்மான் ஜோஷி. அமீர் கானைத் தேடுகிற சாக்கில், ஒளிப்பதிவாளர் சி.கே.முரளிதரன் புண்ணியத்தில் சிம்லா, மணாலி, லடாக் ஆகிய இயற்கை எழில் மிகுந்த பிரதேசங்களைக் கண்டு களிக்கிறோம்.

நண்பர்கள் ஃபர்ஹான், ராஜு இவர்களின் நினைவலைகளில் கதை பயணிக்கிறது.

பிரீமியர் இன்ஜினீயரிங் கல்லூரிப் பேராசிரியர் வீரு சஹஸ்ரபுத்தே (ஆங்கிலத்தில் இவர் பெயரின் முதல் ஐந்தெழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு இவருக்கு ‘வைரஸ்’ என்று செல்லப் பெயர் இட்டுவிட்டார்கள் மாணவர்கள்.) ரொம்ப கெடுபிடியான ஆசாமி. அவருக்கு இந்த மூவர் குழுவைக் கண்டாலே பிடிக்கவில்லை. மற்ற பிள்ளைகள் எதிரில் மட்டம் தட்டிக்கொண்டே இருக்கிறார். ஆனால், சோதனையாக அவரின் மகள் பியாவுக்கு (கரீனா கபூர்) அமீர் மேல் காதல் பிறந்துவிடுகிறது.

ஆக, நண்பர்களின் ஹாஸ்டல் நினைவுகளையும், அமீர்-பியா காதலையும் சுற்றிக் கதை நகர்கிறது. மற்றபடி, மாணவர்களின் விருப்பப்படி துறையைத் தேர்ந்தெடுத்துப் பாடம் படிக்க அனுமதிக்க வேண்டும் என்கிற மெசேஜ், தொட்டுக்கொள்ள ஊறுகாய்தான்!

கரீனா கபூர் தனக்குக் கொடுத்த பாத்திரத்தை நன்றாகவே செய்கிறார். அதில் சந்தேகமில்லை. ஆனால், அமீர்கானுக்கு அக்கா மாதிரி இருக்கிறார். கரீனாவின் அருகில் அமீர், கரீனாவின் கடைசித் தம்பி மாதிரி ரொம்பப் பொடிசாகத் தெரிகிறார்.

அமீருக்கு வயது 44. ஆனால், 20 வயதே ஆன கல்லூரி மாணவன் போன்று அத்தனை க்யூட்டாக, இளமையின் துறுதுறுப்போடு இருக்கிறார். அவர் பக்கத்தில் மாதவன், மாமா மாதிரி இருக்கிறார். நடிப்பில் சிரத்தை காட்டிய மாதவன், தோற்றத்திலும் அமீருக்குச் சமதையாகத் தன்னைச் சிக்கென மாற்றிக்கொண்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இவர்கள் இருவரைவிட மனதில் அதிகம் இடம்பிடிப்பவர் ஷர்மான் ஜோஷிதான். சந்தோஷம், அழுகை, நெகிழ்ச்சி, கழிவிரக்கம், வேதனை எனப் பலப் பல பாவங்களைக் காட்டி நடிக்க இவருக்கே நல்ல வாய்ப்பு. கிடைத்த வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்.

எல்லா வகுப்பிலுமே ‘ரொம்ப கெட்டிக்காரப் பிள்ளை’ என்று ஒன்று இருக்குமே! அடுத்த பிள்ளையை வாத்தியார் மட்டம் தட்டினால் விழுந்து விழுந்து சிரித்து... தன்னை ஆசிரியர் எழுப்பிக் கேள்வி கேட்டால் ஒழுங்கு மரியாதையாக எழுந்து நின்று பவ்வியமாகவும், உள்ளுக்குள் தானொரு புத்திசாலி மாணவன் என்கிற கெத்தோடும், மனப்பாடம் செய்த பதிலைக் கடகடவென்று ஒப்பித்து... அப்படியொரு மாணவன் சத்தூர் கேரக்டரில் ‘ஓமி’ என்கிற நடிகர் அசத்துகிறார்.

ஆசிரியர் தின விழாவில் பேசுவதற்காக கம்ப்யூட்டரில் சத்தூர் உருப் போடுவதற்காக வைத்திருந்த உரையில், ‘சமத்கார்’ என்கிற வார்த்தைக்குப் பதிலாக ‘பலத்கார்’ என்கிற வார்த்தையை அமீர்கான் ரீ-ப்ளேஸ் செய்துவிட, சொந்தப் புத்தியின்றி மனனம் செய்தே பேரெடுக்கும் சத்தூர் அதை அப்படியே உருப்போட்டுக்கொண்டு போய் ஏற்றமும் இறக்கமுமாகப் பேசி, அது கூட்டத்தில் ஏக தமாஷாகி, சிறப்பு விருந்தினரும் பேராசிரியரும் கடுப்பாகி சத்தூரை உதைக்கும் காட்சி நல்ல நகைச்சுவை விருந்து. ஆனால், அதை அத்தனை தூரத்துக்கு இழு இழுவென்று இழுத்திருக்க வேண்டுமா?

ராஞ்சோவைத் தேடிப் போகும் நண்பர்கள் அங்கே தங்கள் நண்பன் ராஞ்சோவுக்கு (அமீர் கான்) பதிலாக வேறு ஓர் அந்நிய முகத்தைக் காண்கிறார்கள். வீடு முழுக்க ஜனங்கள் சோக மயமாக நின்றிருக்கிறார்கள். சவப்பெட்டி காத்திருக்கிறது. அப்பா மரணமுற்றுக் கிடக்க, அருகே சோகத்தோடு ஜாவீத் ஜாஃப்ரி. இவர்கள் ராஞ்சோவைத் தேடி வந்ததாகச் சொல்ல, தான்தான் ராஞ்சோ என்று சாதிக்கிறார் ஜாவீத். அங்கே மாட்டியிருக்கும் ஃப்ரேம் போட்ட ஸ்காலர்ஷிப்பில் ராஞ்சோதாஸ் ஷ்யாமல்தாஸ் சஜ்ஜத் என்று இவரின் முழுப் பெயர். அருகே அந்நாளில் கல்லூரியில் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோவில், பேராசிரியருக்கு அருகே அமர்ந்திருந்த அமீர் கானுக்கு பதிலாக ஜாவீத் ஜாஃப்ரி!

(இடைவேளை)

ஜாவீதின் அப்பா அஸ்தியை ஃப்ளஷ்-அவுட்டில் போட்டுவிடுவதாக மாதவனும் ஷர்மான் ஜோஷியும் பயமுறுத்த, ஜாவீத் உண்மையை ஒப்புக் கொள்கிறார்.

எனக்கு இந்தி தெரியாது. எனவே, ஜாவீத் என்ன சொன்னார் என்று புரியவில்லை. அவரும் இன்ஜினீயர் படிப்பு படிக்க வேண்டும் என்று தன் அப்பாவால் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம்; இவருக்குப் படிப்பு வரவில்லை. ஆகவே, போலியாக சான்றிதழ் தயாரித்து ஃப்ரேம் போட்டு, குரூப் போட்டோவில் அமீர் படத்துக்குப் பதிலாக தன் படத்தை கிராபிக்ஸில் சேர்த்து தன் அப்பாவை நம்ப வைத்திருக்கலாம். சஸ்பென்ஸ் ஓவர்! இது என் கற்பனைதான். உண்மையும் இதுதானா, வேறு ஏதாவதா என்று இந்தி தெரிந்தவர்கள் சொல்லலாம்.

சீராகச் செல்லும் கதையோட்டத்தில், இடைவேளையின்போது ஒரு திடுக்கிடும் திருப்பம் வைக்க வேண்டுமே என்று திணித்த மாதிரி இருக்கிறது இது.

‘டிஸ்லெக்ஸியா’ குழந்தைகளும் நம்மைப் போல சாதாரண குழந்தைகள்தான்; அவர்களைக் கையாளவேண்டிய முறையே வேறு என்று ஒரு கனமான சப்ஜெக்டை எடுத்துக்கொண்டு, அதை விட்டு அங்கே இங்கே நகராமல், அதே சமயம் மெசேஜ் சொல்கிறேன்பேர்வழியென்று போரடிக்காமல் சுவாரசியமாகச் சொன்ன படம் ‘தாரே ஜமீன் பர்’. அதோடு ஒப்பிட்டால், இந்தப் படம் மெசேஜையும் அழுத்தமாகச் சொல்லவில்லை; வேண்டாத காட்சிகளும் நிறைய! பல இடங்களில் கத்தரி வைத்திருக்கலாம்.

ஆ... ஊ... என்றால், அத்தனை மாணவர்களும் பேண்ட்டைக் கழற்றிவிட்டு, ஜட்டியோடு திரும்பி நின்று பின்புறத்தை ஆட்டிக் காண்பிக்கிறார்கள். ஒருதடவை வந்தால் நகைச்சுவை என்று எடுத்துக் கொள்ளலாம். மீண்டும் மீண்டும் வந்தால் ‘சே’ என்றாகிவிடுகிறது.

வெப் காமிரா உதவியோடு அமீர்கான் நடத்தும் பிரசவம் பரபரப்புக்காகச் சேர்க்கப்பட்ட மாதிரி தெரிகிறது. நம்புகிற மாதிரி இல்லையென்றாலும், காட்சியை விறுவிறுப்பாக நகர்த்தியதில், கொஞ்சம் நம்பகத்தன்மை ஏற்பட்டிருப்பது உண்மை. அதுசரி, வெப் காமிரா மூலம் கரீனா கபூர் ‘புஷ்... புஷ்..’ என்று கர்ப்பிணியை இன்னும் முக்கி பிரசவிக்கத் தூண்டுகிறாரே தவிர, அமீர் கானுக்கு உருப்படியான, நுணுக்கமான ஐடியா எதுவும் கொடுத்ததாகத் தெரியவில்லையே! வெப் காமிரா என்பதெல்லாம் வெறும் பில்டப்!

இந்தப் படம் பல இடங்களில் ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ஸை (இந்தியில் ‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்’) நினைவூட்டுகிறது. இதில் ஷர்மானுக்கு தைரியம் சொல்லி, நம்பிக்கையூட்டுகிறார் அமீர்கான். அதிலும் ஒரு மாணவனுக்கு தைரியம் சொல்லுவார் கமல்/சஞ்சய் தத். இதில் கோமாவில் கிடக்கும் ஷர்மானுக்கு எதிரே நின்று பலவித சேஷ்டைகள் செய்து, சிரிப்பூட்டி, அவரை சுய நினைவுக்குக் கொண்டு வருவார் அமீர்கான். அதில், மயங்கிக் கிடக்கும் ஒரு பெரியவருக்கு எதிரே கேரம்போர்டு ஆடி, அவரை சுயநினைவுக்குக் கொண்டு வர முயற்சிப்பார் கமல். இதிலும் முரட்டுப் பேராசிரியர்; அவரோடு முரண்படும் மாணவன். அதிலும் முரட்டுப் பேராசிரியர்; முரண்படும் மாணவன்.

விண்வெளி வீரர்களுக்கென தான் ஒரு விசேஷ பேனா கண்டுபிடித்திருப்பதாகப் பேராசிரியர் வைரஸ் சொல்ல, அமீர்கான் குறுக்கிட்டு, “ஏன் அத்தனைக் கஷ்டப்பட்டுக் கண்டுபிடிக்க வேண்டும்? பென்சில் எடுத்துக்கொண்டு போகலாமே?” என்று கேட்கிற ஸீன்... ஏற்கெனவே இதைத் துணுக்காகவோ, ஒரு பக்கக் கதையாகவோ படித்த ஞாபகம்.

அதே போல இன்னொரு காட்சியையும் நான் ஏற்கெனவே ஒரு தமிழ்ப் படத்தில் நிச்சயம் பார்த்திருக்கிறேன்; அல்லது தமிழில் ஒரு பக்கக் கதையாகப் படித்து ரசித்திருக்கிறேன். தேர்வு நடக்கிறது. குறித்த நேரத்துக்குள் தேர்வு எழுதி முடிக்கவில்லை அமீர் கானும் அவரது நண்பர்களும். எக்ஸாமினர் இவர்களின் பேப்பர்களை வாங்கிக்கொள்ள மாட்டேன் என்று தீர்மானமாகக் கூறிவிடுகிறார். இவர்கள் கெஞ்சுகிறார்கள். அவர் முடியாது என்கிறார் கண்டிப்பாக. “எங்க ரோல் நம்பர் உங்களுக்குத் தெரியுமா சார்?” என்று கேட்கிறார்கள். அவர் தெரியாதென்று சொன்னதுமே, டேபிளில் அவர் அடுக்கி வைத்திருந்த மற்ற மாணவர்களின் பேப்பர்களையெல்லாம் இழுத்துக் கீழே கலைத்துப் போட்டுவிட்டுத் தங்களுடைய பேப்பர்களையும் அவற்றோடு கலந்து கடாசிவிட்டு ஓடிவிடுகிறார்கள்.

‘3 இடியட்ஸ்’ நல்ல படம்தான். ரசிக்கத்தக்க படம்தான். ஆனால், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை வரக்கூடிய அபூர்வ படம், ஆஹா... ஓஹோ... அமீர் கானுக்கு இது இன்னொரு மைல் கல் என்று பலரும் ஓவராகப் புகழ்வதுதான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. பல படங்கள், அதிகபட்ச எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்டு, அதனாலேயே சப்பென்று இருக்கிற மாதிரி ரசிகர்கள் மனதில் ஒரு பிரமையை உண்டாக்கி, தோல்வியைத் தழுவியிருக்கின்றன. இந்தப் படமும் அப்படியாகிவிடக் கூடாது!

.

8 comments:

படம் நல்லாத்தான் போய்ட்டிருக்கு சார்...

விமர்சனத்துல இடைவேளையெல்லாம் போட்ட மொத ஆசாமி நீங்கதான்னு நெனைக்கறேன். எங்க டீ காப்பின்னு கம்ப்யூட்டர்லேர்ந்து குரல் வருமோன்னு நெனைச்சேன்..
 
படத்துக்கான பெயர்க்காரணம் நல்லா இருக்குங்க.

அமீர்கானுக்கு அக்கா மாதிரி இருக்கிறார். //
நானும் அதாங்க நினைச்சேன்.

உங்கள் விமர்சனம் நல்லா இருக்கு. ஆனா, ரொம்ப எதிர்பார்த்துப் போய் திருப்தியில்லாமல் வந்தது போல் தெரிகிறது.

எனக்கு ரொம்ப பிடிச்சது படம்.
 
பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx
 
படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டும் அதே சமயம் அதிகம் எதிர் பார்ப்பதைக் கட்டுப் படுத்தியும் வைக்கிற நல்ல விமரிசனம்!
 
படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டும் அதே சமயம் அதிகம் எதிர் பார்ப்பதைக் கட்டுப் படுத்தியும் வைக்கிற நல்ல விமரிசனம்!
 
எனக்கு ஜாலியான படம் பார்த்த திருப்தி கிடைத்தது.
 
# \\எங்க டீ காப்பின்னு கம்ப்யூட்டர்லேர்ந்து குரல் வருமோன்னு நெனைச்சேன்..// ரசித்தேன் பரிசல்! :)

# நல்ல படம்தான் விக்னேஷ்வரி! Overdo பண்ண வேண்டாம்னுதான் சொல்கிறேன்!

# மற்ற பதிவர்களுக்கும் உதவும்.

# நன்றி கே.பி.ஜனா!

# எனக்கு நல்லதொரு வாசகர் கிடைத்த திருப்தி கிடைத்தது ஜீவன்பென்னி! :)
 
ரவி சார், விமர்சனம் படிச்சேன். இதுக்கு முன்னே போட்டிருந்த ‘பா’ விமர்சனமும் படிச்சேன். இவ்ளோ நல்லா விமர்சனம் எழுதுற நீங்க ஏன் தமிழ்ப் படங்களுக்கும் விமர்சனம் எழுதக் கூடாது? பாருங்க, ஆயிரத்தில் ஒருவன், குட்டின்னு மத்த பதிவருங்க பின்னியெடுத்துக்கிட்டிருக்காங்க. ஒரு ஆர்வத்துல கேட்கிறேன். தப்பா நினைக்கக் கூடாது. ஆனந்த விகடன் விமர்சனத்தோட க்ளாஷ் ஆயிடுமோன்னு யோசிக்கிறீங்களா?