உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, December 17, 2009

ராஜேஷ்குமாரின் ‘விசாரணை’!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இப்போதெல்லாம் நான் பார்ப்பதே அபூர்வம். நேரமில்லை என்பது ஒரு காரணம். ஆர்வமில்லை என்பது முக்கியக் காரணம்.

பத்தாண்டுகளுக்கு முன்பு, தொலைக்காட்சியில் நான் பார்த்த நிகழ்ச்சிகள் என்னென்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். பீனாஸ் மஸானியின் கஸல் ஆல்பங்கள், பர்வீன் சுல்தானாவின் இந்துஸ்தானி கச்சேரிகள், ஸ்வேதா ஷெட்டி போன்ற சிலரின் பாப் ஆல்பங்கள், டிடி’ஸ் காமெடி ஷோ, டெலிமேட்ச் மற்றும் ஒரு சில ஹாலிவுட் படங்கள் தவிர சில ஹிந்தி சீரியல்களையும் ஆர்வத்துடன் பார்த்திருக்கிறேன். ‘சர்க்கஸ்’ சீரியலில்தான் ஷாரூக்கானை முதன்முதலில் பார்த்தேன். அநேகமாக அது ஷாரூக்கான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக இருக்கலாம். மிக மிக அருமையான சீரியல் அது. அதன் எந்த ஒரு எபிஸோடும் போரடித்ததாக நினைவில்லை.

தவிர ‘ஸீ ஹாக்ஸ்’, ‘ஸ்டார் ட்ரெக்’, ‘தர்த்’ ஆகிய சீரியல்களையும் பார்த்திருக்கிறேன். ‘ஸீ ஹாக்ஸ்’ சீரியலில்தான் நடிகர் மாதவனை முதலில் பார்த்தேன். தமிழ் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் ஹிந்தி சீரியல்களில் நடித்துக்கொண்டு இருந்தவர் மாதவன். ‘தர்த்’ சீரியலில் (வலி என்று பொருள்) நீனா குப்தா சோரம் போகும் பெண்ணாக நடித்திருப்பார். டாம் ஆல்டர் என்கிற வெள்ளைக்கார நடிகரும் அதில் நடித்திருப்பார். நீனா குப்தாவின் கணவராக பிரபல இந்தி நடிகர் அலோக்நாத் வருவார். கள்ள உறவுகள் இந்தி சீரியல்களில் சகஜமாக இடம்பெறும். இன்றைக்குத் தமிழ் சீரியல்கள் இந்த விஷயத்தில் இந்தியைத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டன.

‘இம்திஹான்’ என்றொரு சீரியல். அலோக்நாத், அவர் மகளாக ரேணுஹா சஹானே இருவரையும் மையமாகக் கொண்டு சுழலும் கதை அது. இருவரின் நடிப்பும் அத்தனை அற்புதமாக இருக்கும். தந்தைக்குப் பிறகு அவரின் பிஸினஸை எடுத்து நடத்தும் மகளுக்கு ஏற்படுகிற சோதனைகளை அவள் எப்படி வெற்றி கொள்கிறாள் என்பதே கதை. கிட்டத்தட்ட விகடன் டெலிவிஸ்டாஸின் ‘கோலங்கள்’ மாதிரிதான். ரேணுஹா சஹானேயின் சிரித்த முகத்துக்காகவே அதைத் தொடர்ந்து பார்த்தேன்.

பின்னர் ரேணுகா ‘சுரபி’ என்றொரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மிக அருமையான நிகழ்ச்சி அது. ரேணுகாவுடன் இணைந்து அந்த நிகழ்ச்சியை வழங்கியவர் சித்தார்த் கக். இந்தியாவின் கலாசாரம், பண்டைய நாகரிகம், சிறப்புக்கள், எழில் மிகு இயற்கை வளங்கள், சுற்றுலாத் தலங்கள் எனக் கலவையாக வந்துகொண்டு இருந்த நிகழ்ச்சி அது. கண்ணுக்கும் காதுக்கும் ஒருங்கே சுவையூட்டிய நிகழ்ச்சி.

‘சுரபி’ போலவே சுவையான இன்னொரு நிகழ்ச்சி ‘தி வேர்ல்ட் திஸ் வீக்’. மிக அற்புதமாகத் தொகுக்கப்பட்ட செய்திகளைக் கொண்ட நிகழ்ச்சி அது. ஒருமுறை ஆண்டு இறுதியில் அந்த ஆண்டு நடந்தவற்றைத் தொகுத்துக் காண்பித்தார்கள். சோமாலியாவில் பஞ்சம் காரணமாக எலும்பும் தோலுமாக - இல்லையில்லை - வெறும் எலும்புக்கூடாகவே காட்சி தந்த ஜனங்களையும் குழந்தைகளையும் காட்டிச் செய்தி வாசித்தபோது பின்னணியில் ஒலித்த அந்தச் சோகமான சங்கீதம் நிஜமாகவே கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது.

(‘தி வேர்ல்ட் திஸ் வீக்’ போல தமிழிலும் சன் டி.வி-யில் ‘சென்ற வார உலகம்’ என்ற தலைப்பில் முயன்றார்கள். இந்தி அளவுக்கு இல்லையென்றாலும், இதுவும் ரசனையானதொரு நிகழ்ச்சியாகத்தான் இருந்தது. அதைப் பின்னர் சன் நியூஸ் சேனலுக்கு மாற்றியதில் இருந்து நான் பார்க்கவில்லை. இப்போது அது வருகிறதா என்று தெரியவில்லை.)

‘நுக்கட்’ என்று ஒரு தொடர் நிகழ்ச்சி. ‘தெரு மூலை’ என்று அர்த்தம். ஒரு தெருவில் இருக்கும் பலதரப்பட்ட நபர்களைப் பற்றிய கதை அது. பார்க்கப் பார்க்க வெகு சுவாரசியமாக இருக்கும். ஜாலியாக இருக்கும். அலுப்பே தட்டாது. அதுவே சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, ‘நயா நுக்கட்’ (புதிய தெரு மூலை) என்ற பெயரில் வெவ்வேறு புதிய கதைகளோடு மீண்டும் ஒளிபரப்பானது. இரண்டையுமே நான் முழுதாகப் பார்த்து ரசித்திருக்கிறேன்.

‘முல்லா நசுருதீன்’ மிக நன்றாகத் தயாரிக்கப்பட்டிருந்த ஒரு நகைச்சுவை இந்தி சீரியல். தக் தினா தின், ஸ்ரீமான் ஸ்ரீமதி, சபான் சம்பால்கே போன்ற சீரியல்களும் அழுகாச்சி ரகமில்லை. வாய் விட்டு, மனம் விட்டு ரசிக்க முடிகிற சீரியல்கள். இதில் ‘தக் தினா தின்’ மட்டும் கடைசியில் சொதப்பலாகிவிட்டது. தயாரிப்புப் பக்கம் ஏதோ சிக்கல் போல! கடைசியாகப் பத்துப் பன்னிரண்டு வாரங்கள் அந்த சீரியல் அசட்டுப் பிசட்டென்று வந்து, இறுதியில் நின்றேவிட்டது. ‘சபான் சம்பால்கே’யில் பவானா பல்ஸாவர், டாஸா குரிம் போன்ற நடிகைகள் மிக இயல்பாக, அசத்தலாக நடித்திருப்பார்கள்.

‘ஓஷின்’ என்று ஒரு சீரியல். குட்டிப் பெண் ‘ஓஷின்’ (ஜப்பானியப் பெண்) வளர்ந்து பெரியவளாகி குடும்பத்தைத் தாங்கும் கதை. பிறந்தது முதல் அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாகும் வரையில் நடித்த குழந்தை நட்சத்திரத்திலிருந்து இளம் நடிகை வரை யாருமே நடிக்கவில்லை; ஓஷினாகவே வாழ்ந்திருந்தார்கள். மனசை வெகுவாக நெகிழ்த்திய சீரியல் அது.

அப்படியான நல்ல சீரியல்களெல்லாம் இப்போதும் இந்தியில் ஏதாவது வருகிறதா என்று தெரியவில்லை. இந்தி சீரியல்களைப் பார்த்தே நாளாகிவிட்டது. வீட்டில் காலையிலிருந்து ராத்திரி முடிய ‘சன்’ ராஜ்ஜியம்தான்!

கடைசியாக நான் பார்த்த இந்தி சீரியல் ‘சக்திமான்’. குழந்தைகளுக்கான தொடர் என்றபோதிலும் பெரியவர்களும் பார்த்து ரசிக்கும்படி எடுக்கப்பட்டிருந்தது அது. பின்னாளில் அதுவும் சொதப்பலாகிவிட்டது.

நான் பார்த்து ரசித்த எல்லாவற்றையும் அநேகமாக நினைவுக்குக் கொண்டு வந்து சொல்லிவிட்டேன். குறிப்பாக ஒரே ஒரு சீரியலை மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டேன். அதற்குப் பிறகுதான் நான் மெகா சீரியல் பக்கமே தலை வைத்துப் படுப்பதில்லை என்று விரதம் பூண்டேன். அது - ஜுனூன்!

மிகப் பிரபலமாக, பரபரப்பாகப் போய்க்கொண்டு இருந்த தொடர் அது. ‘ஜுனூன் தமிழ்’ என்றே ஒரு வகைத் தமிழ் பிரபலமாகியது அப்போது. ‘கோலங்கள்’ மாதிரி ஆறேழு வருஷத்துக்கு மேல் வந்து, தடாலென்று அரைகுறையாக அதை அப்படியே அம்போ என்று விட்டுவிட்டார்கள். ‘சீ’ என்று ஆகிவிட்டது.

முன்னெல்லாம் நான் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு இருந்த முக்கியமானதொரு இந்தி சீரியல் ‘சுராக்’. ‘தடயம்’ என்று பொருள். கிரைம் தொடர். இரண்டே எபிஸோடுகளில் ஒரு கதை முடிந்துவிடும். முதல் எபிஸோடில் ஒரு குற்றம் நிகழ்ந்து, குற்றவாளி யார் என்கிற சஸ்பென்ஸோடு நிற்கும். அடுத்த எபிஸோடில் மர்மம் விலகி, கதை பூர்த்தியாகும். பார்க்கவே அத்தனை விறுவிறுப்பாக இருக்கும். அநாவசிய அறுவைகள், அழுகைகள் கிடையாது. காமிரா கோணங்கள் அருமையாக இருக்கும். ஒரு சினிமா பார்க்கிற மாதிரி இருக்கும். கிரைம் டிடெக்டிவ் ‘பரத்’ கேரக்டரில் சுதேஷ் பெர்ரி என்னும் நடிகர் அலட்டிக் கொள்ளாமல் அற்புதமாக நடித்திருப்பார். இவர் ஒரு சில இந்தி சினிமாக்களிலும் தலை காட்டியிருக்கிறார்.

தமிழில் அது போன்று ஏன் யாருமே முயற்சி செய்யவில்லை, எல்லோருமே அழு அழுவென்று அழுது, இழு இழுவென்று இழுக்கிறார்களே என்று நினைப்பேன்.

என் ஆர்வத்துக்குத் தீனி போடுகிற விதமாக ‘கலைஞர் டி.வி’-யில் ஆரம்பித்திருக்கிறது ‘விசாரணை’ கிரைம் தொடர். திங்கள் முதல் வியாழன் வரை மொத்தம் ஒரு கதைக்கு நாலே எபிஸோடுகள். ராஜேஷ்குமாரின் கிரைம் கதைகளை அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இந்தியில் இருந்த ‘ரிச்னெஸ்’ தமிழில் இல்லையென்றாலும், குறையாக எதுவும் தெரியவில்லை. அலட்டலில்லாத நடிப்பு, அறுவை இல்லாத வசனங்கள், இழுவையில்லாத காட்சியமைப்புகள், உறுத்தாத இசை என எல்லா விதத்திலும் ரசிக்கும்படியே உள்ளது. முக்கியமாக ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான கதை. அரை மணி போவதே தெரியவில்லை. கடகடவென்று காட்சிகள் அலுப்பில்லாமல் நகர்கின்றன.
‘பாய்ந்து வா விவேக்’ என்று ஒரு கதை நாலு நாட்களில் அற்புதமாக முடிந்து, இப்போது ‘திகில் திருவிழா’ நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இன்றைக்கு அதன் கடைசி நாள்.

‘விசாரணை’ என்ற பொதுத் தலைப்பே அத்தனை அருமையாக இருக்கிறது. இதை ராஜேஷ்குமார்தான் கொடுத்திருப்பார் என்ற எண்ணத்தில் பேச்சோடு பேச்சாக அவரிடம் இது பற்றிக் குறிப்பிட்டபோது, அது தான் கொடுத்த தலைப்பு இல்லை என்று அவர் சொன்னார்.

‘பின்னே யார் கொடுத்த தலைப்பு?’ என்று கேட்டேன். ‘கலைஞர்’ என்றார்.

அப்படிப் போடு! கலைஞர் கலைஞர்தான்!
.

16 comments:

சார், விசாரணை தலைப்பு யார் வைத்தது என்று விசாரித்து தெரிந்துகொண்டீர்கள்!:-)


கலைஞர் வைக்கும் பெயரும் கொடுக்கும் பட்டமும் உடனடியாகவே நன்றாக மனதில் ஒட்டி விடுகிறது. இதற்கு பல உதாரணம் இருக்கிறது. விசாரணை-யும் உடனே மனதில் பதிகிறது.

ஒரு காமெடி டாக் ஷோ இருக்குமே! ம்..... சேகர் சுமன்-னு நினைக்கிறேன்.. அதுவும் நல்லா இருக்கும்.

ஜுனூன்,சாந்தி-யில் எல்லாம் ஒரு தமிழ் மொழி பெயர்ப்பு இருக்குமே.. சுவாரசியமாகவும் சிரிப்பாகவும் இருக்கும்.
ஒரு எ.கா: சாப்பிட்டேன் இப்பத்தான் நான் :-)
 
அதிகாரி பிரதர்ஸின் சுவராக் சீரியல் என் அபிமான சீரியல். எங்கள் குடும்பமே அதற்கு ரசிகர்கள்.
அருமையாக இருக்கும். இனி "விசாரணை" பார்க்க வேண்டும்.
 
நீங்கள் குறிப்பிட்ட எல்லா ஹிந்தி தொடர்களும் நானும் ரசித்து இருக்கிறேன். நீங்கள் "தேக் பாய் தேக்" [Dhek Bhai Dhek] பார்த்ததில்லையா? சேகர் சுமன், பாவனா பல்சாவர், நவீன் நிச்சல், சுஷ்மா சேத் போன்றவர்கள் நடித்தது. அழுது பயமுறுத்தாத ஒரு தொடர். சேகர் சுமன் முன்பே சில படங்களில் நாயகனாக இருந்தும், இந்த தொடருக்கு பின்னர் தான் பிரபலம் ஆனார். நல்ல பதிவு.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி
 
நல்ல பதிவு. விசாரணை ஒரு எபிசோடு பார்த்தேன். விறுவிறுப்பாக இருந்தது. ஃப்ளாக் அண்ட் ஒயிட் போர்ட்டபிள் டி.வியில் கண்டு ரசித்த டிவி நிகழ்ச்சிகள் நிச்சயம் ஒரு பொற்காலம்தான்.

உங்கள் அளவுக்கு விரிவாக இல்லாவிட்டாலும் முன்னாள் டிவி நிகழ்ச்சிகள் பற்றி நானும் முன்பொரு நாள் எழுதியிருக்கிறேன். சுட்டி இங்கே.

http://chithran.blogspot.com/2005/08/blog-post.html
 
முந்திக் கொண்டீர் சீனியர்!

ரொம்ப நாளாக ஒன்றும் எழுதாமல் இருக்கிறேன். எழுதவேண்டியவைகள் லிஸ்டில் இந்தத் தொடரும் இருந்தது.

விவேக் கேரக்டருக்கு அந்த நடிகர் கனகச்சிதம். முதல் நாளிலிருந்து குடும்பத்தோடு பார்க்கிறேன். இசையும் ஓகே.

இன்னும் விளம்பரதாரர்கள் அதிகம் கிடைக்காததால் விறுவிறுப்பாய் இருக்கிறது. ரொம்ப பிரபலமடைந்தால் விளம்பரங்களும், தேவையில்லாத இழுத்தடிப்புகளுமாய் போகுமோ என்று மனைவியிடம் வருத்தப்பட்டேன்.. அப்படி நடக்காது என்று நம்புகிறேன்.

இப்போதைய சீரியல்களில் சும்மா திரும்பவதையெல்லாம் ட்ண்டடாய் மீஜிக் போட்டு சஸ்பென்ஸ் என்கிறார்கள். அதற்கெல்லாம் குருவே ராஜேஷ்குமார்தான்! அவர் தொடர் கலக்காதா என்ன!
 
BTW, ரவி சார். விவேக், பரத், நரேந்திரன், சங்கர்லால், டியரா ராஜ்குமார் etc, etc பற்றி ஒரு பதிவெழுதலாமே...
 
’தர்த்’ சீரியலில் நீங்கள் குறிப்பிட்ட அந்த வெள்ளைக்கார நடிகர் டாம் ஆல்டர்தான் ‘ஜுனூன்’ சீரியலில் கேசவ் கல்ஸி என்கிற கேரக்டரில் வருவார். அமெரிக்கராக இருந்தும் நன்றாக இந்தி பேசி நடிப்பார். அந்தத் தொடர் வந்துகொண்டு இருந்த சமயத்தில் நான் எய்த், நைன்த் படித்துக்கொண்டு இருந்தேன். பழைய இனிய சீரியல் நினைவுகளைக் கிளறி ‘மலரும் நினைவுகள்’ பதிவிட்டதற்கு நன்றி!
 
\\ஜுனூன்,சாந்தி-யில் எல்லாம் ஒரு தமிழ் மொழி பெயர்ப்பு இருக்குமே.. சுவாரசியமாகவும் சிரிப்பாகவும் இருக்கும்.
ஒரு எ.கா: சாப்பிட்டேன் இப்பத்தான் நான்// ஆமாம், பொன்னியின் செல்வன்! அதைத்தான் ‘ஜுனூன் தமிழ்’ என்றொரு வகைத் தமிழ் பிரபலமாகியது அப்போது என்று என் பதிவில் குறிப்பிட்டேன்! பின்னூட்டத்துக்கு நன்றி!
 
திரு.ராஜு! அவசியம் பாருங்கள். ரிச்சாக எடுக்கவில்லை என்றாலும், அழுகாச்சி சீரியல்களுக்கு இது எவ்வளவோ தேவலாம்!
 
திரு. வெங்கட், தேக் பாய் தேக் வந்தது தெரியும். ஆனால், நான் பார்க்கவில்லை. மற்றபடி, காலை நேரத்தில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்று பார்த்தேன். பெயர் மறந்துவிட்டது. சேகர் சுமன் ஓர் அற்புதமான காம்பியரர்!
 
திரு.சித்ரன்! பின்னூட்டத்துக்கு நன்றி! அவசியம் உங்கள் பதிவை உடனே பார்க்கிறேன். இணைப்பு கொடுத்ததற்கு நன்றி!
 
பரிசல்காரன், விரிவான பின்னூட்டத்துக்கு மனமார்ந்த நன்றி!
 
பரிசல், முக்கியமாக கணேஷ்-வசந்த்தை விட்டுவிட்டீர்களே?
 
திருமதி கிருபாநந்தினி! ஜுனூன் பார்த்தது இன்னமும் நினைவிருக்கா? கேசவ் கல்ஸி பெயரை மறக்காமல் சொல்கிறீர்களே! எனக்கு அதில் தாதா நகர்கர் தவிர, ஏனையோர் பெயர்கள் மறந்துவிட்டன.
 
ஷாந்தி சீரியலில் ராஜ் ஜீஜே சிங் வருவாரே ஞாபகம் இருக்கிறதா? இன்றும் எனக்கு அந்த காட்சிகள் நிழலாடுகின்றன. மேலும் மதிய நேரத்தில் 'யுக்" என்ற சுதந்திரப் போராட்டம் பற்றிய சீரியல் வரும். அதில் ஹேமில்டன் என்ற மொட்டை ஆங்கில ராணுவ அதிகாரி அப்போது என்னை மிரட்டுவான்.
இதையெல்லாம் விட என் சிறுவர் பருவத்தை சூறையாடிக் கொண்டது சந்திரகாந்தா.. 'ஜுனார்கட்" என்று ராஜகம்பீர உச்சரிப்பில் அதிரும் குரல் இப்போதும் என் செவிப்பறைகளை உரசுகிறது.
 
ஷாந்தி சீரியலில் ராஜ் ஜீஜே சிங் வருவாரே ஞாபகம் இருக்கிறதா? இன்றும் எனக்கு அந்த காட்சிகள் நிழலாடுகின்றன. மேலும் மதிய நேரத்தில் 'யுக்" என்ற சுதந்திரப் போராட்டம் பற்றிய சீரியல் வரும். அதில் ஹேமில்டன் என்ற மொட்டை ஆங்கில ராணுவ அதிகாரி அப்போது என்னை மிரட்டுவான்.
இதையெல்லாம் விட என் சிறுவர் பருவத்தை சூறையாடிக் கொண்டது சந்திரகாந்தா.. 'ஜுனார்கட்" என்று ராஜகம்பீர உச்சரிப்பில் அதிரும் குரல் இப்போதும் என் செவிப்பறைகளை உரசுகிறது.