உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, October 18, 2009

சந்தன வீரப்பனுக்கு ஒரு கடிதம்!


ந்தன வீரப்பன் மறைந்து இன்றோடு ஐந்து வருடம் பூர்த்தியாகிவிட்டது.

மூன்று மாநிலங்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தவன் வீரப்பன். யானைகளையும் சந்தன மரங்களையும் போலீஸ்காரர்களையும் கணக்கு வழக்கில்லாமல் வெட்டி வீழ்த்தியவன். ஆனால், அவனிடம் சில நல்ல குணங்களும் இருந்தன. அவன் ஒருபோதும் பெண்களைக் கடத்திப் போய் பாலியல் பலாத்காரம் செய்தது கிடையாது. கடவுள் நம்பிக்கை உள்ளவன். தனக்குக் குறிப்பிட்ட நபரால் தொல்லை எதுவும் இருக்காது என்று அவன் நம்பினால், அவரை அவன் துன்புறுத்துவதோ கொலை செய்வதோ கிடையாது.

அப்படித்தான் அவன் மாநில அரசுகளை மிரட்டித் தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் பொருட்டு கர்நாடக சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரைக் கடத்திக் காட்டில் கொண்டு போய் நூறு நாட்களுக்கும் மேலாக வைத்திருந்தாலும், அவரைக் கொஞ்சமும் துன்புறுத்தாமல் விடுவித்துவிட்டான். தவிர, அவரை விடுதலை செய்யும்போது அவன் அவருக்கு வேட்டி, சட்டைகளைப் பரிசாகத் தந்து, பிரியா விடை கொடுத்ததாகவும் செய்திகள். காட்டில் அவன் தன் மீது மிக அன்பாகவே நடந்துகொண்டான் என்றும், தனது மூட்டு வலிக்கு உடும்புத் தைலத்தை மருந்தாகத் தடவிவிட்டான் என்றும் பின்னர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் ராஜ்குமார்.

இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில், வீரப்பனுக்கு ராஜ்குமார் கடிதம் எழுதினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து விகடனில் எழுதினேன். அது கீழே...

வீரப்பனுக்கு ராஜ்குமார் எழுதும் கடிதம்!

ன்புச் சகோதரர் வீரப்பனுக்கு, உங்கள் அன்புக்குரிய ராஜ்குமார் எழுதிக் கொள்வது.

நான் இறைவன் அருளாலும், தங்கள் அருளாலும் நலமுடன் பெங்களூர் வந்து சேர்ந்தேன். இங்கு யாவரும் நலம். அதுபோல் உங்கள் அனைவரின் நலத்துக்கும் அடிக்கடி கடிதம் எழுதவும் - மன்னிக்கவும் - காஸெட் அனுப்பவும்!

நூற்றியெட்டு நாட்களாக உங்களின் அன்பு உபசரிப்பில் உண்டு, உறங்கி, மகிழ்ந்து அந்த இயற்கைச் சூழலில் லயித்து இருந்ததில், உங்களை விட்டுப் பிரிந்து வரவே எனக்கு மனசில்லை. உங்களிடம் பிரியா விடை பெற்ற அந்தக் கணத்தில் எனக்குக் கட்டுப்படுத்தவே முடியாமல் கண்ணீர் துளிர்த்துவிட்டது. உங்களுக்கும் அப்படித்தான் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

உங்கள் மனசு ரொம்ப நெகிழ்ந்திருந்தது என்பதை நீங்கள் அந்தப் பக்கமாகத் திரும்பிக் கொண்டு, உங்கள் கண்களில் கசிந்த நீரைத் துப்பாக்கி முனையால் சுண்டி எறிந்ததைப் பார்த்ததும் புரிந்துகொண்டு விட்டேன்.

பெங்களூர் வந்ததிலிருந்து எனக்கு நாக்கே செத்துவிட்டது. அங்கே வாய்க்கு ருசியாக எனக்கு நீங்கள் மைனா பொரியல், உடும்புக் கறி, காட்டெருமைக் குழம்பு, பன்றிக் கொழுப்பு வறுவல் என காட்டுணவு வகைகளை உங்கள் கையால் அன்புடன் சமைத்துப் போட்டீர்கள். இங்கே அப்படி எனக்கு வக்கணையாக, என் டேஸ்ட் அறிந்து நாவுக்கு ருசியாகச் சமைத்துப் போட யார் இருக்கிறார்கள்!

தங்களின் உபசரிப்பையெல்லாம் என் மகன்களிடம் நான் விரிவாக எடுத்துச் சொன்னபோது, ‘அப்படியா!’ என்று ஆச்சரியப்பட்டார்கள். “அப்பா! வீரப்பன் அங்கிள் காட்டுக்கு நாமெல்லாம் போய் ஜாலியாக ஒரு வாரம், பத்து நாள் அவரோடு இருந்துட்டு வரலாம்ப்பா! எங்களுக்கும் அவரின் ரெசிப்பிக்களை ஒரு பிடி பிடிக்கவேண்டும் என்று ஆவலாக இருக்கிறது” என்று நச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள். உங்களிடமிருந்து சிக்னல் கிடைத்ததும், குடும்பத்தோடு வந்து உங்களுடன் சில நாட்கள் தங்கி, அவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்ய விரும்புகிறேன்.

நான் அங்கிருந்த சமயங்களில் எனது பொழுதுபோக்குக்கும் நீங்கள் குறை வைக்கவில்லை. மிமிக்ரியில் தேர்ந்தவரான நீங்கள் சிறுத்தை போல் உறுமியும், ஆந்தை போல் அலறியும் இன்னும் பலவாறாக மிமிக்ரி செய்து காண்பித்து என்னைக் குதூகலப்படுத்தினீர்கள். எனக்காக நீங்கள் மயிலாட்டம், ஒயிலாட்டம், மாரியாத்தா, காளியாத்தா போன்ற புதுமையான ஆட்டங்களை ஆடிக் காண்பித்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதை என்னால் மறக்க முடியாது. உங்களின் அந்தச் சில அற்புதமான நடன அமைப்புகளை எனது அடுத்த படத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்று பார்க்கிறேன்.

உண்மையைச் சொல்கிறேன்... உங்களிடமிருந்து பிரிந்து வந்ததிலிருந்து சில நாட்கள் எனக்குச் சரியாகவே தூக்கம் வரவில்லை. பிறகுதான் ஒரு யுக்தி செய்தேன். நீங்கள் கொடுத்தனுப்பிய ஆடியோ காஸெட்டுகளைப் போட்டு, அதிலிருந்து எழும் ராக்கோழிச் சத்தம், காட்டு வண்டுகளின் ரீங்காரம், யானையின் பிளிறல், புலிகளில் உறுமல், நரிகளின் ஊளை இவற்றையெல்லாம் காது குளிரக் கேட்ட பின்புதான் நிம்மதியான தூக்கம் கிடைத்தது எனக்கு.

பஞ்சு மெத்தை, திண்டு, தலையணை இவற்றைக் கண்டாலே வெறுப்பாக இருக்கிறது. வெறும் தரையில், அதுவும் மண் தரையில் இலை தழைகளையும் சருகுகளையும் பரப்பி, அதன் மீது கைகளையே தலையணையாக்கிக் கொண்டு படுத்தால்தான் உறக்கமே வருகிறது. அப்படிப் படுப்பதுதான் சௌகரியமாகவும் இருக்கிறது. இது ஓர் உன்னதத் துறவு நிலை. இத்தகைய ஓர் உயரிய நிலையை இந்தச் சாமானியனுக்கும் சித்திக்கும்படிச் செய்த என் ஞான குரு தாங்கள்தான்.

மற்றபடி உங்கள் ஆஸ்துமா எந்த மட்டில் இருக்கிறது? ஏதோ ஒரு மூலிகைச் சாறு பிழிந்து குடித்தால் சரியாகிவிடும், ஒன்றும் கவலைப்பட வேண்டாம் என்று எனக்கு ஆறுதல் சொன்னீர்களே, அந்த மூலிகைச் சாறு கிடைத்ததா? பிழிந்து குடித்தீர்களா? உங்கள் உடல்நிலையைப் பற்றித்தான் எனக்கு மிகுந்த கவலையாக இருக்கிறது. நீங்கள் கொடுத்தனுப்பிய கருங்குரங்குத் தைலத்தைதான் தினமும் என் கால் மூட்டு வலிக்குத் தடவி வருகிறேன். இப்போது வலி எவ்வளவோ தேவலை. தைலம் தீரும் நிலையில் இருக்கிறது. முடிந்தால் காஸெட்டோடு இரண்டு பெரிய சைஸ் புட்டியில் கருங்குரங்குத் தைலம் கொடுத்தனுப்பினால் உதவியாக இருக்கும்.

மற்றபடி உங்கள் உடல் நலத்துக்கும், சேத்துக்குளி கோவிந்தன் உள்ளிட்ட உங்களின் அன்புத் தம்பிகள் அனைவரின் உடல் நலத்துக்கும் அடிக்கடி காஸெட் அனுப்பிக்கொண்டிருக்க வேண்டுகிறேன்.

உங்களின் அன்பை என்றும் மறவாத, உங்களின் உடன்பிறவா அண்ணன்

ராஜ்குமார்.
.

6 comments:

//உங்கள் கண்களில் கசிந்த நீரைத் துப்பாக்கி முனையால் சுண்டி எறிந்ததைப் பார்த்ததும் புரிந்துகொண்டு விட்டேன்//

சார், அந்த வீரப்ப சாமி சத்தியமா சொல்றேன் இந்த கடிதத்தை நடிகர் சந்திரபாபு (இவரை பற்றி ஒரு பதிவு போடுங்களேன்) நடித்த படத்தை பார்க்கும் போது ஏற்படும் குபீர் சிரிப்புகளுடன் படித்து முடித்தேன். ஹாஸ்யமான பதிவுக்கு ஒரு ஸல்யூட்.

ரேகா ராகவன்.
 
நல்ல காமெடி அந்தக் காடிதம்! (காடு இதம் என்று சொல்கிறதல்லவா?) - கே.பி.ஜனா
 
ஏன் சார் உங்களுக்கு இது காமெடியா ? பெங்களூரிலும், கர்நாடகத்தின் இன்ன பிற பகுதியில் வாழும் தமிழர்கள் அந்த 100 நாட்களும் எப்படி ஒரு நடுக்கத்துடன் வாழ்ந்தார்கள் தெரியுமா ? ராஜ்குமாருக்கு காட்டில் ஏதும் ஆகியிருந்தால் -- ஐயோ நினைக்கவே பயமாய் இருக்கிறது.

இப்படிக்கு
திக் திக் என 100 நாட்களை கழித்த ஒரு பெங்களூர்த் தமிழன்
 
ரேகா ராகவன் அவர்களுக்கு...
பாராட்டுக்களுக்கு நன்றி!

கே.பி.ஜனா அவர்களுக்கு...
வழக்கம்போல் வார்த்தை விளையாட்டோடு கூடிய உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன்!

அனானிமஸ் அவர்களுக்கு...
இந்தக் கற்பனைக் கடிதம் எழுதப்பட்டது திரு.ராஜ்குமார் பத்திரமாக விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த பிறகுதானே? நிகழ்கிற சமயத்தில் பயங்கரமாகவும், சோகமாகவும் இருக்கும் பல சம்பவங்கள் பின்னர் நினைவுகூர்கிறபோது காமெடியாக இருப்பதில்லையா, அது போல்தான் இதுவும்! பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி! திக் திக் பெங்களூர்த் தமிழனான நீங்கள் உங்கள் பேரைக் குறிப்பிட்டுப் பின்னூட்டம் இட்டிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.
 
அருமை...
 
புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் புக்மார்க் செய்ய

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்