உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, September 24, 2009

‘என்னோடு பாடுங்கள்...’-டி.எம்.எஸ்.


நான் டி.எம்.எஸ்ஸின் அதி தீவிர ரசிகன். இன்றல்ல, நேற்றல்ல... நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான ரசிகன். அவரது குரல் வளத்துக்கு ஈடு இணையாக இன்னொருவர் குரலை என்னால் ஒப்பிட்டுப் பார்க்க இயலவில்லை. எப்போது நான் கணினியில் வேலை செய்ய உட்கார்ந்தாலும், ஒரு புறம் டி.எம்.எஸ்ஸின் பாடலை ஒலிக்கவிட்டு, அதைக் கேட்டபடியே வேலை செய்வேன். என் வேலைக்கு இடையூறாக அது ஒருபோதும் இருந்ததில்லை. மாறாக, செய்கிற வேலையின் சுமை தெரியாமல் சுலபமாக முடிக்க, இந்தப் பழக்கம் எனக்கு உதவுகிறது.

டி.எம்.எஸ். தவிர்த்து மேலும் பலரின் குரல்களையும், பாடல்களையும் நான் ரசிப்பதுண்டு. சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், எஸ்.சி.கிருஷ்ணன், பி.பி.ஸ்ரீனிவாஸ், ஏ.எம்.ராஜா, டி.ஆர்.மகாலிங்கம், எம்.கே.டி.பாகவதர், எஸ்.பி.பாலசுப்ரமணியம் என அது ஒரு பெரிய லிஸ்ட்!

ஒவ்வொரு குரலுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. லட்டு ஒரு வகை இனிப்பு என்றால் மைசூர்பாகு வேறு மாதிரியான இனிப்புச் சுவை. பால்கோவா வேறு ரகம். ஆனால், எல்லாமே இனிப்புதான். எல்லாமே சுவைதான். என்ன... ஒருவருக்கு மைசூர்பாகு பிடிக்கும்; இன்னொருவருக்கு பால்கோவா பிடிக்கும்; வேறு ஒருவருக்கு குலோப்ஜாமூன் பிடிக்கும். எனக்கு அதிகம் பிடித்தது பால்கோவா. அதில் ஒரு கிண்ணம் சாப்பிட்டேன் என்றால், மைசூர்பாகில் இரண்டு விள்ளல் மட்டும் எடுத்துக் கொள்வேன். லட்டில் பாதியே போதும் என்பேன். அது போலத்தான் டி.எம்.எஸ்ஸை நான் அதிகம் ரசித்தாலும், மற்றவர்களின் பாடல்களில் குறிப்பாகச் சிலவற்றைக் கேட்டு ரசிப்பதுண்டு.

சிவாஜி மிகப் பெரிய நடிகர். எத்தனையோ விதமான கேரக்டர்கள் செய்திருக்கிறார். நடையிலேயே வெவ்வேறு வகையான நடை நடந்து காட்டியவர். திருவிளையாடல் படத்தில் மீனவனாக, கடற்கரை மணலில் நடக்கிற நளினமான அழகு என்ன, தருமியுடன் புலவராக வேக நடை போட்டு வருகிற மிடுக்கு என்ன, திருவருட்செல்வர் படத்தில் ‘மன்னவன் வந்தானடி...’ பாடலின்போது மன்னனாக நடந்து வருகிற கம்பீரம் என்ன, வீரபாண்டிய கட்டபொம்மனில் தூக்கு தண்டனைக் கைதியாக, அதே சமயம் வீரம் சிறிதும் குன்றாமல் கிளைமாக்ஸில் நடந்து வருகிற ஜோர் என்ன... சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், ரத்தக் கண்ணீர் படத்தில் எம்.ஆர்.ராதா செய்த குஷ்டரோகி கேரக்டரை அந்த அளவுக்கு சிவாஜியால் செய்ய முடியவில்லை என்பதே நிஜம். அதே போல், பாரதியார் கேரக்டரும் ('கை கொடுத்த தெய்வம்’ படத்தில் ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே...’ பாடல் காட்சி) சிவாஜிக்கு அத்தனைப் பொருத்தமாக இல்லை.

சிலது சிலருக்குத்தான் பொருத்தமாக இருக்கிறது. பாடல்களும் அப்படித்தான்! டி.எம்.எஸ். எல்லா விதமான பாடல்களையும் பாடியிருக்கிறார் என்றாலும், வேறு சிலர் பாடிய குறிப்பிட்ட சில பாடல்களை அவர் பாடினால் ரசிக்குமா என்பது சந்தேகம்தான். ‘திருப்பதி மலை வாழும் வெங்கடேசா...’, ‘விநாயகனே, வினை தீர்ப்பவனே... வேழ முகத்தோனே, ஞான முதல்வனே...’ போன்ற சீர்காழியின் பாடல்களைக் கேட்டுக் கேட்டு, நம் மனதில் அதன் இசை வடிவம் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதை டி.எம்.எஸ். பாடினால் சீர்காழியின் பாட்டு அளவுக்குத் திருப்தியாக இருக்குமா என்று தெரியவில்லை. ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை...’ என டி.ஆர்.மகாலிங்கத்தின் முழக்கம் டி.எம்.எஸ்ஸின் குரலில் ஒலிக்கும்போது, அதே அளவு சுவையானதாக இருக்குமா என்பது சந்தேகம்தான்.

காரணம், முதலில் வருகிற பாடலை நாம் கேட்டுக் கேட்டு, அது நம் மனதில் ஆழமாகப் பதிந்து, அதுதான் முறை, அதுதான் சரி என்பதாக நம் மனது ஏற்றுக் கொண்டு விடுவதால், அடுத்து ஒருவர் அதையே பாடுகிறபோது ஒரிஜினல் அளவுக்கு இது இல்லையே என்பதாக நினைக்கத் தோன்றுகிறது. இதனால்தான் ரீ-மிக்ஸ் கலாசாரம், நான் உள்படப் பலருக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். எஸ்.பி.பி-யின் பல பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதை ‘எனையாண்ட இசை அரசர்கள்’ பதிவில் குறிப்பிட்டுள்ளேன். ‘பொட்டு வைத்த முகமோ...’, ‘இரண்டில் ஒன்று, நீ என்னிடம் சொல்லு...’, ‘காதல் ராணி கட்டிக் கிடக்கு, கட்டில் இருக்கு...’, ‘இளைய நிலா பொழிகிறதே...’ எனக் கடகடகவெனக் குறைந்தபட்சம் ஐம்பது, அறுபது பாடல்களைத் தாராளமாகச் சொல்லலாம். அவற்றை டி.எம்.எஸ். பாடினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். சில இன்னும் நன்றாகவும் இருக்கலாம் என்று தோன்றியது. சில அவருக்குச் சரிவராது என்றும் தோன்றியது.

உதாரணமாக, சமீபத்தில் வெளியான ‘அட்றாட்றா நாக்கு மூக்க...’, ‘சூப்பரு...’ போன்ற பாடல்களை டி.எம்.எஸ் பாடினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அவர் குரல் கம்பீரமானது; கண்ணியமானது. அது சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெய்சங்கர் இவர்களுக்கெல்லாம் கச்சிதமாகப் பொருந்தியது. டி.எம்.எஸ். காதல் பாடல் பாடினாலும், அதில் ஒரு மிடுக்கு தெரியும். ‘மதன மாளிகையில், மந்திர மாலைகளாம்...’, ‘மயக்கமென்ன... இந்த மௌனம் என்ன’ போன்ற பாடல்களைக் கேட்டால், மிடுக்கும் கம்பீரமுமாக இருக்கும். அவ்வளவு ஏன், டப்பாங்குத்துப் பாடல்களான ‘பொண்ணாப் பொறந்தா ஆம்பிள கிட்டே கழுத்த நீட்டிக்கணும்...’, ‘நேத்துப் பூத்தாளெ ரோசா மொட்டு...’ பாடல்களையேகூட எடுத்துக் கொள்ளுங்கள். அவை ஏதோ ரெண்டுங்கெட்டான் விடலை பாடுகிற மாதிரி இருக்காது. காதலின் குழைவை விட, அதிலும் ஒரு முதிர்ச்சிதான் தெரியும். டி.எம்.எஸ்ஸின் குரல் அப்படி இயல்பிலேயே கம்பீரமானது.

எனவே, எஸ்.பி.பி-யின் ‘இரண்டில் ஒன்று, நீ என்னிடம் சொல்லு...’ பாடலை அந்த அளவுக்கு நெகிழ்வும் குழைவுமாக டி.எம்.எஸ்ஸால் பாட முடியாதென்றே தோன்றுகிறது. அவர் என்னதான் மென்மையாகப் பாடினாலும், அது சிவாஜிக்கோ ஜெய்சங்கருக்கோதான் பொருத்தமானது போல் தெரியுமே தவிர, விஜய்க்கும் அஜீத்துக்கும் பொருந்தவே பொருந்தாது. ‘மதுரையில் பறந்த மீன் கொடியை உன் புருவத்தில் கண்டேனே...’ பாடலில், டி.எம்.எஸ் குரலின் கம்பீரத்துக்கு ஜெமினி கணேசனால் ஈடுகொடுக்கவே முடியவில்லையே!

1979-ல் வெளியான படம் ‘நான் வாழ வைப்பேன்’. அந்தப் படத்துக்கு இசை இளையராஜா. அதில், ‘என்னோடு பாடுங்கள்... நல்வாழ்த்துப் பாடல்கள்...’ என்று ஒரு பாட்டு. எஸ்.பி.பி. பாடிய பாட்டு அது. எனக்கு மிகவும் பிடித்தமான எஸ்.பி.பி. பாடல்களில் அதுவும் ஒன்று. அந்தப் பாட்டு சிவாஜிக்கு என்பதால், முதலில் அதை டி.எம்.எஸ்ஸை வைத்து ரெக்கார்ட் செய்தார்கள். பிறகு, அது சரியாக இல்லை என்று எஸ்.பி.பி-யைப் பாட வைத்து, அதைத்தான் படத்திலும், இசைத்தட்டிலும் வெளியிட்டார்கள்.

இதில் டி.எம்.எஸ்ஸுக்குக் கோபமான கோபம். இருக்கத்தானே செய்யும்? அவர் கச்சேரிக்காக இலங்கைக்குப் போன இடத்தில் (மதுரை போல அங்கே டி.எம்.எஸ். ரசிகர்கள் அதிகம்.) இந்தத் தகவலைச் சொல்லி, அதே பாடலைப் பாடி, “நீங்களே சொல்லுங்க. இது நல்லாருக்கா, எஸ்.பி.பி. பாடியது நல்லாருக்கா?” என்று கேட்டாராம். ரசிகர்கள் ஏக மனதாக டி.எம்.எஸ். பாடியதுதான் நன்றாக உள்ளது என்று சொன்னார்களாம். இப்படியொரு செய்தியை நான் அந்தக் காலத்தில் படித்தேன்.

டி.எம்.எஸ்ஸுக்கும் இளையராஜாவுக்கும் இடையில் மனக் கசப்பு ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். எனக்குக்கூட அப்போது இதனால் இளையராஜா மீது கோபமான கோபம். டி.எம்.எஸ். பாடியதை நன்றாக இல்லை என்று ஒதுக்கி, வேறு ஒருவரைப் பாட வைப்பதா என்று கோபம். இதன் காரணமாக, எஸ்.பி.பி. மீது கூட எனக்குக் கோபம் எழுந்தது உண்மை. இத்தனைக்கும், டி.எம்.எஸ். பாடிய ‘என்னோடு பாடுங்கள்...’ பாடலை நான் கேட்டதே இல்லை.

அந்த அபூர்வமான பாடலை நேற்று எனக்கு இ-மெயிலில் அனுப்பியிருந்தான் என் தம்பி. கேட்டேன்.

உண்மையைச் சொல்கிறேன். எஸ்.பி.பி-யின் பாடல் அளவுக்குச் சிறப்பானதாக அது தெரியவில்லை. இளையராஜா அன்று எடுத்த முடிவு சரிதான்!

இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். எஸ்.பி.பி. பாடிய ‘என்னோடு பாடுங்கள்...’ பாடல் நன்றாக இருந்தது. ஆனால், அது சிவாஜிக்குப் பொருத்தமானதாக இல்லை. டி.எம்.எஸ். பாடிய பாடல் அவ்வளவாகப் பிடித்தமானதாக இல்லை. என்றாலும், அதைக் கேட்கும்போது சிவாஜியின் நடிப்பு எப்படி இருக்கும் என்பதை மனக் கண் முன் கொண்டு வர முடிந்தது.

ஒரு வேளை டி.எம்.எஸ்., இளையராஜா இருவரும் அன்றைக்குக் கருத்தொருமித்து, விட்டுக் கொடுத்து, இன்னும் ஓரிரு தடவை முயன்றிருந்தால், நிச்சயம் டி.எம்.எஸ்ஸிடமிருந்து இதை விடச் சிறப்பான பாடல் நமக்குக் கிடைத்திருக்கக்கூடும்!

சரி, இளையராஜா எம்.எஸ்.வி. இல்லையே!

(டி.எம்.எஸ். பாடிய ‘என்னோடு பாடுங்கள்...’ பாடலைக் கேட்க விரும்பினால், கீழே உள்ள வரியில் சொடுக்கவும்.)
இப்பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்!
.

13 comments:

பிரகாஷ்...

நீங்கள் சொல்வது மிகச்சரி. 'பொட்டு வைத்த முகமோ' என சிவாஜிக்காக எஸ்.பி.பி சுமதி என் சுந்தரியில் பாடிய பாடலை இன்று கேட்டாலும் டி.எம்.எஸ் பாடியிருந்தால் நன்றாக இருக்குமே எனத்தோன்றும்...

என்னால் சிவாஜி, எம்.ஜி.ஆர் இருவருக்கும் டி.எம்.எஸ் தவிர வேறு யாரையும் கற்பனையில் கூட பிடிப்பதில்லை. ஆனாலும் பின்னாளில் மலேசியா வாசுதேவன் சிவாஜிக்கு பொறுத்தமாய் பாடினார்(பூங்காற்று திரும்புமா?)...

நல்ல பதிவு, அருமையான தகவல் மற்றும் ஒப்பீட்டுடன்...

பிரபாகர்.
 
சார்,

மிகச் சுவாரஸ்யமான தகவல், பதிவு, பாடல் ... நன்றி!

அந்த SPB வடிவத்தையும் கொடுத்திருக்கலாமே:

http://www.raaga.com/play/?id=26994

- என். சொக்கன்,
பெங்களூர்.
 
நுட்பமான ஒலிப்பதிவு! -கே.பி.ஜனா.
 
'உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால்...' பாடலில் ('நான் ஆணையிட்டால்') 'அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்..' என்ற அடியில் 'பூங்குயில்' என்ற வார்த்தையைப் பாடும்போது டி. எம். எஸ்சின் அந்தத் தனி(T) மதுர(M) சுவைக்(S) குரல் என்னை மிகவும் ஈர்க்கும். -- கே.பி. ஜனா.
 
மிக சுவாரஸ்யமான தகவல் இந்த பாடல் எஸ்பிபி குரலிலும் நான் கேட்டதில்லை.
 
எஸ் பி பி பாடியது இப்ப நினைவில் வரல. டிஎம்எஸ் பாடியது கேட்டா அதன் தனி சுவை அப்படியே இருக்கு. நீங்க சொல்ற மாதிரி இளைய ராஜா கொஞ்சம் டிஎம்ஸ் கொஞ்சம் விட்டுக் கொடுத்து இருந்தா நமக்கு இன்னொரு சுகம் கிடைச்சிருக்கும் - ரிஷபன்
 
ஆனா, டி.எம்.எஸ். பாடலை முதல்ல கேட்டிருந்தா, அதைப் போல எஸ்.பி.பி-யின் பாடல் அவ்வளவு சிறப்பா இல்லேன்னு சொல்லியிருப்பீங்க!
- கிருபாநந்தினி
 
//என்னால் சிவாஜி, எம்.ஜி.ஆர் இருவருக்கும் டி.எம்.எஸ் தவிர வேறு யாரையும் கற்பனையில் கூட பிடிப்பதில்லை.// சரியாகச் சொன்னீர்கள் பிரபாகர்ஜி! என்னாலும்தான்! டி.எம்.எஸ். பற்றி முன்னே நான் போட்டிருந்த பதிவுகளைப் படித்தீர்களாஜி? ஒரு ஆர்வம்தான்!

திரு.சொக்கன், பாராட்டுக்கு நன்றி! எஸ்.பி.பி. பாடல் எல்லோருக்கும் தெரிந்திருக்குமே என்றுதான் விட்டுவிட்டேன்.

திரு.கே.பி.ஜனா! பாட்டைக் கேட்டு ரசித்திருக்கிறீர்கள். இதை பிளாகில் போட எனக்கு உதவியது என் மகள்தான் என்பதை நன்றியோடு இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ‘பூங்குயில்’ நல்ல உதாரணம். அது மட்டுமா? டி.எம்.எஸ்ஸின் தனி மதுர சுவைக் குரலின் இனிமைக்கு உதாரணமாக இன்னும் நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம்! பின்னூட்டத்துக்கு நன்றி திரு.ஜனா!

மங்களூர் சிவா! என்ன, எஸ்.பி.பி. குரலிலும் அந்தப் பாட்டைக் கேட்டதில்லையா? சரிதான், அப்ப எனக்கு வயசாயிடுச்சுதான்போல!

ரிஷபன்! என்ன, எஸ்.பி.பி. பாடியது நினைவுக்கு வரலன்னு சொல்லி, எல்லாருமா சேர்ந்து என்னை வயசாளியா ஆக்கப் பாக்கறீங்களா? சொக்கன், இப்ப ஒப்புக்கறேன்! எஸ்.பி.பி. பாடின பாட்டையும் நான் பதிவிட்டிருக்கணும்தான்!

அப்படியும் இருக்கலாம் கிருபா! பின்னூட்டத்துக்கு நன்றி!
 
வெகுதூர சாலை பயணத்தில் டிஎமெஸ்ஸின் பாட்டுக்களை ஒடவிட்டுக் கொண்டே பயணிப்பது சுகம் என தற்போதைய மத்திய இரசாயனத்துறை அமைச்சரும் பேட்டியில் கூறியிருந்தார்.

டி.எம்.எஸ்ஸின் பல பாட்டுகள் சுகம்.

அவர் 'நான் ஒரு ராசியில்லா ராஜா' (டி.ராஜேந்தருக்கு) பாடியதற்குப் பிறகே வாய்ப்புகள் குறைந்தது என கேள்விப்பட்டுள்ளேன். அது பற்றி உங்கள் கருத்து ??

மகேஷ்
 
டி.எம்.எஸ்க்கு என பிரத்யேகமாக பாராட்டுவிழா (மதுரையில்) நடத்தியதும் மத்திய அமைச்சரே (பலர் பல ஆண்டுகள் டிஎமெஸ்ஸை கண்டு கொள்ளாத நிலையில்)

மகேஷ்
 
எஸ்.பி.பாலுவும், இளையராஜாவும் செய்தது மிகப் பெரிய தவறு. மாற்றம் தேவை என்றால் இசை அமைப்பாளர் வேறு புதிய பாடலை அமைத்து பாலுவுக்கு கொடுத்திருக்க வேண்டும். அல்லது, முன்பே டி.எம்.எஸ் க்கு சரி வருமா என்று யோசித்து இருக்க வேண்டும். சீனியர் கலைஞரை மரியாதை குறைவாக நடத்தியது அனாகரிகம்.

இதைப் போலவே ’குங்குமம்’ படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் முதலில் பாடிய ‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை‘பாடல், மாற்றி அமைக்கப்பட்டு சிவாஜிக்கு டி.எம்.எஸ் பாடினாரே!இதே அனாகரிகம் தான் அன்று நடந்தது. சரித்திரம் மீண்டும் திரும்புகிறது. எஸ்.பி.பாலு இப்போது புதிய பாடகர்களால் இதை அனுபவிக்கிறார்.சினிமாவில் இத்தகைய மரியாதையின்மை சகஜம். ஆனால் சீர்காழி கோவிந்தராஜன் போன்ற மானமுள்ள தமிழன் அன்றே சிவாஜி-கே.வி.மகாதேவன் முன்னிலையில் இதை கண்டித்து “எல்லோருக்கும் சாப்பாடு போடுங்கள்,ஆனால் எச்சில் இலையில் போடாதீர்கள்” என்று கூறி கர்னாடக சங்கீதம், பக்திப் பாடல்களில் வெற்றி பெற்றது வரலாறு!
எச்சில் இலையில் ராஜா சாப்பாடு போடாமலும், பாலு எச்சில் சாப்பாட்டை சாப்பிடாமலும் நல்ல முன்னுதாரணமாகியிருக்கலாம். அதனால் தான் இவர்களும் டி.எம்.எஸ் போல படுகிறார்கள்! காலம் அனைத்தையும் காட்டும்.
 
பணத்துக்காகவோ அல்லாது சந்தர்ப்பத்துக்காகவோ எதையும் பாடுட்டு போவங்க இந்தகாலத்து பாடகர்கள். கடவிளை சாகவேண்டும் என்று பட மாட்டன் என்று சொல்லி கண்ணதாசனோடு அடம் பிடித்தவர் tms but spb பதினேட்டுவயது இளமொட்டுமனது பாய் போடதவிக்குது மனது என்ற கந்தசஷ்டி கவச மொட்டில் அமைந்த பாடலை பிழைப்புக்காக பாடினாங்க. இதுதான் tms இற்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம். tms பற்றி ஒரு G . ராமநாதன் or msv or ilayaraja or கங்கை அமரன் or t .ராஜேந்தர் or முஹது ரபி or SPB or மலேசிய வாசுதேவன் போன்றோர்கள் சொல்லவதை கேட்டு அறிந்து கொள்ளலாம். நான் மேல் குறிப்பிட்டவர்கள் அவரை நன்கு உணர்ந்தவர்கள். Tms இன் குரலில் இருக்கும் இனிமை SPB இல் இல்லை. பாவம் உம் TMS அளவிற்கு கொடுக்கமுடியா. TMS அளவிற்கு தமிழை உம் உச்சரிக்கமுடியா. TMS இன் சங்கீத திறமைக்கு யாராலும் நெருங்கமுடியா. இந்த நண்பரோ tms என்கின்ற இமயத்தை SPB போன்ற சாதாரண பாடகர்களோடு ஒப்பிடுகிறார். இந்த என்னோடு பாடுங்கள் என்ற பாடலை நன்றாக கேளுங்கள் புரியும். இப்பாடல் 1979 இல் வந்தது. அவரது வயது 57. அப்போது 33 வயது SPB ஐ காட்டிலும் TMS இன் வாய்ஸ் அற்புதம். இளையராஜாவின் தனிப்பட்ட கர்வமே இதற்கு காரணம். இந்தப்படத்தில் எடுபட்ட ஒரே ஒரு பாடல் "எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவன்னமே" என்ற TMS பாடல் மட்டுமே.
 
பணத்துக்காகவோ அல்லாது சந்தர்ப்பத்துக்காகவோ எதையும் பாடுட்டு போவங்க இந்தகாலத்து பாடகர்கள். கடவிளை சாகவேண்டும் என்று பட மாட்டன் என்று சொல்லி கண்ணதாசனோடு அடம் பிடித்தவர் tms but spb பதினேட்டுவயது இளமொட்டுமனது பாய் போடதவிக்குது மனது என்ற கந்தசஷ்டி கவச மொட்டில் அமைந்த பாடலை பிழைப்புக்காக பாடினாங்க. இதுதான் tms இற்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம். tms பற்றி ஒரு G . ராமநாதன் or msv or ilayaraja or கங்கை அமரன் or t .ராஜேந்தர் or முஹது ரபி or SPB or மலேசிய வாசுதேவன் போன்றோர்கள் சொல்லவதை கேட்டு அறிந்து கொள்ளலாம். நான் மேல் குறிப்பிட்டவர்கள் அவரை நன்கு உணர்ந்தவர்கள். Tms இன் குரலில் இருக்கும் இனிமை SPB இல் இல்லை. பாவம் உம் TMS அளவிற்கு கொடுக்கமுடியா. TMS அளவிற்கு தமிழை உம் உச்சரிக்கமுடியா. TMS இன் சங்கீத திறமைக்கு யாராலும் நெருங்கமுடியா. இந்த நண்பரோ tms என்கின்ற இமயத்தை SPB போன்ற சாதாரண பாடகர்களோடு ஒப்பிடுகிறார். இந்த என்னோடு பாடுங்கள் என்ற பாடலை நன்றாக கேளுங்கள் புரியும். இப்பாடல் 1979 இல் வந்தது. அவரது வயது 57. அப்போது 33 வயது SPB ஐ காட்டிலும் TMS இன் வாய்ஸ் அற்புதம். இளையராஜாவின் தனிப்பட்ட கர்வமே இதற்கு காரணம். இந்தப்படத்தில் எடுபட்ட ஒரே ஒரு பாடல் "எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவன்னமே" என்ற TMS பாடல் மட்டுமே.