உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, September 29, 2009

இந்தி டி.எம்.எஸ்; தமிழ் லதா மங்கேஷ்கர்!


பாட்டுத் தலைவன் டி.எம். சௌந்தர்ராஜனின் குரலுக்கு நான் எத்தனை ரசிகனோ, அத்தனை ரசிகன் இந்திப் பாடல்களுக்கும்! ஆராதனா, பாபி, சத்யம் சிவம் சுந்தரம், குர்பானி, ஷோலேயில் தொடங்கி, பாஸிகர், கல்நாயக், பேட்டா, ஹம் ஆப்கே ஹைன் கோன், சாஜன், மொஹ்ரா, கயாமத் ஸே கயாமத் தக் என வளர்ந்து, நேற்றைய ஆஜா நச்லே, ஓம் சாந்தி ஓம், பூல் புலய்யா, தூம் வரைக்கும் தொடர்ந்து இந்திப் பாடல்களைக் கேட்டு ரசித்துக்கொண்டு இருக்கிறேன்.

இந்திப் பாடல்களைக் கேட்டு ரசிப்பதற்கு விசேஷ காரணம் எதுவும் இல்லை. எனக்குப் பிடித்திருக்கிறது. அவ்வளவே! இந்தி இசையில் அதிகம் பயன்படுத்தப்படும் தபலா, சந்த்தூர், ஜலதரங்கம் இவற்றின் ஒலிகள் எனக்கு ரொம்பவும் பிடித்திருப்பதும்கூட ஒரு காரணமாக இருக்கலாம். என்னுடைய இன்னொரு பதிவில் (என் டயரி) நான் பீனாஸ் மஸானி பற்றி எழுதியிருந்தேன். அவரின் கஸல் ஆல்பங்களில் பெரும்பாலும் மேலே சொன்ன இந்த இசைக்கருவிகள்தான் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

மற்றபடி, இந்தியில் எனக்கு ஒரு அட்சரம்கூடத் தெரியாது. ஆனாலும், இந்தித் திரைப்பாடல்களை ரசிப்பதில் எனக்கு எந்தக் கஷ்டமும் ஏற்பட்டதில்லை. சொல்லப்போனால், இந்தி தெரியாமலிருப்பதால்தான் அவற்றை என்னால் ரசிக்க முடிகிறதோ என்னவோ!

மொழி புரிந்துவிட்டால், அதன் அர்த்தம் விளங்கிவிட்டால், நம் கவனம் இசையை விட்டு அதன் அர்த்தத்துக்குத் தாவிவிடும். ‘ஐயே! இவ்வளவுதானா! பெரிய அபாரமான பாட்டாகவெல்லாம் ஒன்றும் இல்லையே! ரொம்பச் சாதாரணமா எழுதியிருக்காரே!’ என்று யோசிக்கத் தொடங்கிவிட்டால், அப்புறம் இசையை எங்கேர்ந்து ரசிப்பது?

இறைவனை வழிபடும் ஸ்லோகம் ‘போற்றி... போற்றி...’ என்று தமிழில்தான் இருக்க வேண்டும் என்று, இறைவனை நம்பாதவர்கள்கூட மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழுக்கு நான் எதிரி அல்ல! என் தாய்மொழி தமிழ்தான். எனக்கு, என் தாய்க்கு, தந்தைக்கு, என் மனைவிக்கு, என் மாமியாருக்கு, என் குழந்தைகளுக்கு, என் தாத்தாவுக்கு, பாட்டிக்கு என எல்லோருக்குமே தமிழ்மொழிதான் தாய்மொழி. தமிழைத் தவிர வேறு மொழி தெரியாது. எனக்குக் கூட ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரியுமே தவிர, சரளமாகப் பேசத் தெரியாது. இதில் இந்திக்கும், சம்ஸ்கிருதத்துக்கும் எங்கே போக? என் குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம் தவிர இன்னொரு மொழி தெரிந்திருக்கட்டுமே என்று இந்திப் பாடத்திலும் சேர்த்திருக்கிறேன். ‘ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்’ புத்தகத்தைத் தமிழாக்கம் செய்தபோது, அதன் இடையிடையே பல இடங்களில் இந்தி ‘கொட்டேஷன்ஸ்’ வந்து, அர்த்தம் தெரியாமல் நான் விழித்தபோது, அதைத் தமிழாக்கம் செய்து கொடுத்து உதவியது என் மகள்தான்.

இது இருக்கட்டும். இறைவனின் ஸ்லோகம் நமக்குப் புரியாத மொழியில் இருந்தால், நமக்கு அதன் மீது ஒரு மரியாதை வருகிறது; ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது. நமக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் லோக்கல் தமிழில், ‘உனுக்கு ஒண்ணியுமில்லப்பா! ஜல்ப்புதான்; காய்ச்சலுதான்! மருந்து கொடுத்துக்குறேன். காலீல ஒரு தபா, ராவிக்கு ஒரு தபா எடுத்துக்க. பட்டுனு உட்டுரும்!’ என்று சொன்னால், அவர் போலி டாக்டரோ என்று யோசிக்க வேண்டியதாகிவிடும். அதுவே அவர் ஸ்டைலான ஆங்கிலத்தில் அந்த நோய்க்கு ஏதாவது பெயர் சொல்லி, பிரிஸ்கிருப்ஷன் தந்தால், நமக்கு அவர் மீது நம்பிக்கை பிறக்கும். நோய் குணமாக டாக்டரின்மீது நாம் வைக்கும் நம்பிக்கையும் முக்கியம்.

நம்மவர்கள் பாராட்டுவதைவிட, வெள்ளைக்காரர்கள் பாராட்டும்போதுதான் நமக்கே நம் அருமை புரிகிறது. ‘வெரிகுட்டுனு சொன்னான் வெள்ளைக்காரன்’ என்றால்தான் நமக்குத் திருப்தி! இது நமது பொதுவான மனோபாவம். அதன்படி, ‘இறைவா, உன் பன்னிரு கண்கள் போற்றி! பன்னிரு தடந்தோள்கள் போற்றி!’ என்று சொல்லிக்கொண்டு இருந்தால், மனம் பக்தியை விட்டுவிட்டு, அதன் அர்த்தத்தை ஆராய்ச்சி செய்வதில் இறங்கிவிடும். அது போலவேதான், இந்திப் பாடல்களையும் அதன் மொழி தெரியாததால்தானோ என்னவோ, என்னால் ரசிக்க முடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். தமிழில் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் உள்ளிட்ட பிரபல பாடலாசிரியர்கள் எழுதிய திரைப் பாடல்களையும் நம்மால் ரசிக்க முடிந்ததென்றால், அதற்குக் காரணம் இசையையும் விஞ்சி நிற்கும் அவர்களின் கவிதைத் திறன்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

‘எனையாண்ட இசை அரசர்கள்... அரசிகள்’ பதிவில் பி.சுசீலா பற்றி எழுதும்போது, ‘ராதையின் நெஞ்சமே’ பாட்டிலிருந்துதான் நான் அவரின் ரசிகனாக ஆனதாகக் குறிப்பிட்டிருந்தேன். அத்தனை ஈர்ப்பான இசையின் மூலம் இந்தி என்பது பிறகுதான் எனக்குத் தெரிந்தது. இந்தியில் லதா மங்கேஷ்கரும், கிஷோர் குமாரும் இந்தப் பாடலைத் தனித்தனியாகப் பாடியிருக்கிறார்கள். நான் ஸ்கூல் படிக்கும்போதே கிஷோர் குமாரின் ‘ராதையின் நெஞ்சமே’ மூலப் பாடலைக் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. அவரின் குரல் கம்பீரமானது; அதே சமயம் குழைவும் நெகிழ்வுமானது. மொத்தத்தில் அவர் இந்தி டி.எம்.எஸ்.

பி.சுசீலா பாடிய ‘ராதையின் நெஞ்சமே’ பாடலை பின்னர் ரொம்ப காலம் நான் கேட்கவே முடியவில்லை. (இப்போது கலைஞர் டி.வி-யில் அடிக்கடி அந்தப் பாடல் காட்சியைக் காண்பிக்கிறார்கள்.) அது தமிழ்ப் பாடல் என்பதால், வரிகள் ஞாபகத்தில் இருக்கவும், ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு கணினி வசதி, இணைய வசதிகள் வந்தவுடன் அந்தப் பாடலைத் தேடி டவுன்லோடு செய்து கேட்டு மகிழ முடிந்தது. கிஷோர் குமார் விஷயத்தில் அந்த வரிகளும் தெரியவில்லை; அது என்ன படம் என்றும் தெரியவில்லை. என்ன, ஏது என்று கொஞ்சமாவது க்ளூ இருந்தால்தானே நெட்டிலும் தேடிப் பார்க்க முடியும்? பார்க்கிறவர்களிடமெல்லாம்கூடக் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போனேன்.

இந் நிலையில், நவராத்திரியை முன்னிட்டு போன ஞாயிற்றுக்கிழமை என் தங்கை வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அங்கே என் தம்பி யதார்த்தமாக கிஷோர் குமார் ஹிட்ஸ்களை வைத்திருந்து, எனக்குப் போட்டுக் காட்டினான். உடனே, ‘ராதையின் நெஞ்சமே’ பாடலைச் சொல்லி, கிஷோர் குமார் பாடிய அதன் மூலப் பாடல் இருக்கிறதா என்று கேட்டேன். ‘ஓ! இருக்கிறதே!’ என்று சொல்லி, அதை ஓடவிட்டான். ஆஹா! காதில் தேனமிர்தம் பொழிந்த மாதிரி இருந்தது.

‘கில்..... தே ஹைன் குல்யாஹான்’ என்கிற அந்தப் பாடல் கிஷோர் குமாரின் வசீகரக் குரலில் என்னை மயக்கியது. அப்புறம் கேட்கவேண்டுமா, நெட் இருக்கிறதே! அந்த வரிகளைப் போட்டுத் தேடி, அந்தப் பாட்டு இடம் பெற்ற படம் ‘ஷர்மிலி’ என்பதையும் கண்டுபிடித்துவிட்டேன். அதில் லதா மங்கேஷ்கர் பாடிய பாடலும் உள்ளது. லதா மங்கேஷ்கர் அற்புதமான பாடகிதான். அதில் சந்தேகமில்லை. அவரின் ‘ஹம் ஆப்கே ஹைன் கோன்’ படம் உள்ளிட்ட பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும். என்றாலும், குறிப்பிட்ட ‘கில் தே ஹைன் குல் யாஹான்’ பாடல் நம்ம பி.சுசீலாவின் ‘ராதையின் நெஞ்சமே’ அளவுக்கு இல்லை.

கீழே, கிஷோர் குமாரின் ‘கில் தே ஹைன் குல்யாஹான்’ பாடலுக்கும், பி.சுசீலாவின் ‘ராதையின் நெஞ்சமே’வுக்கும் லின்க் கொடுத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் கேட்டு ரசிக்கலாம்.


இதோ அந்த இரண்டு பாடல்கள்:

கில்தே ஹைன் குல்யா ஹான்

ராதையின் நெஞ்சமே
.

7 comments:

//சொல்லப்போனால், இந்தி தெரியாமலிருப்பதால்தான் அவற்றை என்னால் ரசிக்க முடிகிறதோ என்னவோ!//

ஹிந்தி தெரிந்தால் அப்பாடல்கள் இன்னும் அழகு ததும்ப தெரியும். இது என் அனுபவம்!
 
//இறைவனின் ஸ்லோகம் நமக்குப் புரியாத மொழியில் இருந்தால், நமக்கு அதன் மீது ஒரு மரியாதை வருகிறது;//

ஒத்துக்கொள்கிறேன்.

//‘உனுக்கு ஒண்ணியுமில்லப்பா! ஜல்ப்புதான்; காய்ச்சலுதான்! மருந்து கொடுத்துக்குறேன். காலீல ஒரு தபா, ராவிக்கு ஒரு தபா எடுத்துக்க. பட்டுனு உட்டுரும்!’ என்று சொன்னால், அவர் போலி டாக்டரோ என்று யோசிக்க வேண்டியதாகிவிடும்.//

சரியாக சொன்னீர்கள்.

//‘கில் தே ஹைன் குல் யாஹான்’ பாடல் நம்ம பி.சுசீலாவின் ‘ராதையின் நெஞ்சமே’ அளவுக்கு இல்லை.//

நீங்கள் சொல்வது சரிதான். டெல்லியில் இருக்கும்போது, இந்த பாடல கேட்டுவிட்டு சுசீலா அம்மா பாடியதை போட்டு காட்ட, கிஷோர்தான் பெஸ்ட் என அவர்கள் சொன்னார்கள்.

நிறைய தெரிந்துகொள்ளலாம் உங்களை படித்தால் பிரகாஷ்...

பிரபாகர்.
 
அடடே, அந்தப் பாடலின் இந்தி வடிவத்தை நீங்க தேடியது தெரியாம போச்சு. போன பதிவின் போதே நீளமாய் ஒரு பின்னூட்டம் எழுதி அப்புறம் ரொம்ப அறுக்கிறேனோ என்று முதல் வரியை மட்டும் கொடுத்தேன். மீதி இதோ:

இளையராஜாவின் முதல் படத்தின் (அ. கிளி ) முதல் மற்றும் ஒரே ஆண் குரல் டி.எம்.எஸ் தான். ('அன்னக் கிளி...' சோக மெட்டு).
ஹைலுலு கலந்து பி.பி. ஸ்ரீநிவாஸ் பாடியது 'பதுமை தானோ?' என்ற பாடல் தானே?ஏ.எம் ராஜா இசையில் பி பி ஸ்ரீநிவாஸ் பாடிய பாடல் ஒன்று உண்டு. 'ஆடிப் பெருக்கு' படத்தில் வரும் 'புரியாது.. வாழ்க்கையின் ரகசியம் புரியாது..' கேட்டிருக்கிறீர்களா?
'எங்கிருந்தோ வந்தான் கண்ணன் ...' என்ற 'படிக்காத மேதை' பாடல் சீர்காழியின் சிறப்பான பாடல்களில் ஒன்று. 'கல்லிலே கலைவண்ணம்...' மற்றொன்று.
'சம்பூர்ண ராமாயணத்'தில் 'வீணைக் கொடியுடைய வேந்தனே..' பாடலில் ஒவ்வொரு ராகமாக கடைசியில் கயிலை நாதரை தன வசமாக்கிய ராகம் வரை பாடுவாரே சி.எஸ்.ஜெயராமன், அதை எப்படி மறந்தீர்கள்?
நான் படித்த சுவையான விஷயம் ஒன்று. 'கணவனே கண் கண்ட தெய்வம்' படத்தில் முதலில் பானுமதி நடிப்பதாக இருந்தது. அவர் பாடிய இரு பாடல்களை அப்புறம் அவர் விலகிக் கொண்டதால் அப்போது அறிமுகமாகியிருந்த பி. சுசீலாவை வைத்து மீண்டும் ரிகார்ட் செய்தார்களாம்.அவைதாம் 'உன்னைக் கண் தேடுதே..' யும் 'எந்தன் உள்ளம் துள்ளி விளையாடு..'வதும்! செம ஹிட் அவை.
ராதையின் நெஞ்சமே பாடலின் ராகம் விசேஷம் தான். பிரபல எஸ். டி. பர்மன் இசையில் வந்த 'ஷர்மிலி' பட 'கில்தே ஹை..'பாடல் மெட்டைத் தழுவியது அது.
காதல் ஜோதியில் வரும் டி. கே. ராமமூர்த்தி இசையமைத்த நிறைய பேர் கவனிக்க மறந்த சூப்பர் வீச்சுப் பாடல் 'சாட்டை கையில் கொண்டு...' பாடலை எழுதியிருப்பது... உங்கள் இசை ஞாபக சக்தி அபாரம்! -- கே.பி.ஜனா.
 
ரொம்ப சூப்பரா சொல்லியிருக்கீங்க இந்தி அரைகுறையா தெரியும் எல்லாம் மங்களுர் வந்ததுக்கப்புறம் கத்துகிட்டதுதான், இந்தி பாடல்கள் கேட்பது நல்ல அனுபவம்.
 
சிறப்பான பதிவு! கிஷோர் குமார் பாடிய அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர், அதாவது ‘ஷர்மிலி’ படத்தின் இசையமைப்பாளர் இசை மாமேதை எஸ்.டி.பர்மன் என்பதையும் தங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கலாம்.
 
சித் சோர் படப் பாடல்கள் பற்றி எங்கேயாவது குறிப்பிட்டிருக்கிறீர்களா என்று கண்ணில் விளக்கெண்ணை போட்டு தேடியும் இல்லை. இனிமையான இசையை எங்கிருந்து வழங்கினாலும் கேட்க நீங்களும் நானும் தயாராக இருக்கும்போது இசைக்கு மொழி எதுக்குங்க? ரசித்து படித்த பதிவு.

ரேகா ராகவன்.
 
எஸ்.ஆர்.கே.! தாங்கள் சொல்வதும் உண்மையாக இருக்கலாம். அதற்குத்தான் தமிழில் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற உதாரணங்களைக் கொடுத்தேன். அப்படி இந்தியிலும் ஜாவீத் அக்தர் போன்ற திறமைசாலிகள் இருக்கிறார்களே!

//டெல்லியில் இருக்கும்போது, இந்த பாடல கேட்டுவிட்டு சுசீலா அம்மா பாடியதை போட்டு காட்ட, கிஷோர்தான் பெஸ்ட் என அவர்கள் சொன்னார்கள்.// விடுங்கள் பிரபாகர்ஜி! காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு!

திரு.ஜனார்த்தனன்! நீங்கள் குறிப்பிட்டுள்ள எந்தப் பாடலையுமே நான் மறக்கவில்லை. அத்தனையையும் எழுதினால் பதிவு அனுமார் வாலாகிவிடுமே என்றுதான் தவிர்த்தேன். மற்றபடி, ஒரு பிளாகில் எழுத வேண்டிய சுவாரஸ்யமான விஷயங்களைச் சிரமம் பாராமல் பின்னூட்டத்தில் நீளமாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி! நன்றி!

மங்களூர் சிவா! பின்னூட்டத்துக்கு நன்றி. நீங்களும் அதிகம் இந்திப் பாடல்களை விரும்பிக் கேக்கறீங்கன்னு தெரியுது. நீங்க ரசிச்ச இந்திப் பாடல்களை (படத்தின் பெயரோடு) முடிஞ்சா என் இ-மெயிலுக்கு அனுப்புங்களேன். நானும் விட்டுப் போனது ஏதாவது அதில் இருந்தா கேட்டு ரசிக்கிறேன்.

கிருபா மேடம்! எஸ்.டி.பர்மன்னு எழுதணும்னு நினைச்சிட்டேதான் இருந்தேன். எப்படியோ மறந்துட்டேன். அதை நினைவுபடுத்திய தங்களுக்கும், கே.பி.ஜனாவுக்கும் நன்றி!

ராகவன்ஜி! சித் சோர் பாடல்கள்னு குறிப்பு கொடுத்திருக்கீங்க. கண்டிப்பா கேட்டுட்டு உங்களுக்கு அது பற்றிய என் கருத்தை இ-மெயில் பண்றேன்! குறிப்புக்கு நன்றி!