உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, September 09, 2009

ரவுடிகளிடம் சிக்கினேன்!

வில்லிவாக்கத்திலிருந்து வரும் என் அலுவலக நண்பர் ஒருவர் சமீபத்தில் இரவு வேலை முடிந்து வீட்டுக்குப் போகும்போது வழிப்பறித் திருடர்களிடம் சிக்கி, கையிலிருந்த இருநூற்றுச் சொச்சம் பணத்தைப் பறிகொடுத்தது பற்றி சுவாரசியமாகக் கதை போல் விவரித்துச் சொல்லிக்கொண்டு இருந்தார். இதே போன்ற திருட்டு அனுபவங்களைப் பல ஆண்டுகளுக்கு முன்பு நான் சாவியில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோதும் அங்கிருந்த தோழர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அங்கே எனக்கு முன் ராஜு என்று ஒருவர் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார் என்றும், அவர் இரவு ஒரு மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்குப் போகும்போது, கோடம்பாக்கம் மேம்பாலத்தின் அடியில் அவரைச் சில ரவுடிகள் வழிமறித்துக் கையில் உள்ள பணம், வாட்ச், கழுத்தில் போட்டிருந்த தங்க செயின் இவற்றைப் பறித்துக்கொண்டது மட்டுமின்றி, பேன்ட் சட்டையையும் கழற்றி வாங்கிக்கொண்டு, அவரை வெறும் ஜட்டியோடு ஓடவிட்டார்கள் என்றும் கதை கதையாகச் சொல்லியிருக்கிறார்கள்.

அது 1989-ம் வருடம் என்று நினைக்கிறேன். நான் அப்போது மேற்கு மாம்பலம், கோதண்டராமர் கோவில் தெருவில் குடியிருந்தேன். சைக்கிளில்தான் வேலைக்குப் போவேன். வீட்டில் கிளம்பினேன் என்றால், ரயில்வே லைன் ஓரமாகவே உள்ள சாலையில் சென்று, துரைசாமி பிரிட்ஜைத் தாண்டி, நேரே கோடம்பாக்கம் ஸ்டேஷன் வரை சென்று, மேம்பாலம் அடியில் புகுந்து, சூளைமேடு ஹைரோடு வழியாக நேரே சென்று, மேத்தா நகரைத் தொட்டு, நெல்சன் மாணிக்கம் ரோடு வழியாக அமிஞ்சிக்கரை, அண்ணா ஆர்ச் என்று என் சைக்கிள் பயணம் சாவி அலுவலகம் வரை நீளும்.


சக தோழர்கள் மாய்ந்து மாய்ந்து சொன்ன வழிப்பறித் திருடர்கள் கதைகளினால் என் மனம் கிலேசத்துக்குள்ளாகியிருந்தது அப்போது. அதுவும் குறிப்பாக, கோடம்பாக்கம் மேம்பாலத்தடியில்தான் ராஜு ஜட்டியுடன் ஓடிய சம்பவம் நிகழ்ந்ததாக அவர்கள் குறிப்பிட்டிருந்ததால், ஒவ்வொரு முறை இரவில் அதைக் கடக்க நேரும்போதும் கந்தர் சஷ்டி கவசத்தை என் மனசு தன்னையறியாமல் உச்சரிக்கத் தொடங்கிவிடும். ஆனால், டகடக டிகுடிகு டங்கு டிங்குகு என்று கவசமேகூட என் பயத்தை அதிகப்படுத்திவிடும். நாலாப்புறமும் கண்களைச் சுழல விட்டபடி, விறுவிறுவென்று மேம்பாலத்தைக் கடப்பேன்.


அன்றைய தினம் நான் வீட்டை விட்டு வெளியில் கிளம்பும்போது யாராவது தும்மியிருக்கலாம்; பூனை ஏதாவது குறுக்கே ஓடியிருக்கலாம்; நிலைப்படியில் தலை இடித்திருக்கலாம்; ஒற்றைப் பிராமணர் எதிரே வந்திருக்கலாம்
. நான் சுதாரித்திருப்பேன். ஒன்றுமே நிகழாமல், நான் செல்வதற்குப் பச்சைக் கொடி காட்டிவிட்டபடியால், வரப்போகும் ஆபத்தை அறியாமல் நான் சைக்கிளில் புறப்பட்டுவிட்டேன். புத்தம் புதிய சைக்கிள். வாங்கி ஒரு மாதம்கூட ஆகியிருக்கவில்லை.


பிரசித்தி பெற்ற கோடம்பாக்கம் மேம்பாலத்தையும் கடந்து சூளைமேடு நெடுஞ்சாலை வழியாக, ‘வந்த நாள் முதல் இந்த நாள் வரை யாரும் மாறவில்லை...’ என்று ‘பாவ மன்னிப்பு’ சிவாஜி மாதிரி பாடியபடி, சைக்கிளைச் செலுத்திக்கொண்டு இருந்தேன்.


பாதி தூரம் கடந்திருப்பேன். சாலை ஒரு திருகலாக வளைகிற இடத்தில் என்னை ஓவர்டேக் செய்து போக முயன்றது ஒரு பைக். அதே சமயம் எதிரே, முன்பக்கம் பெட்ரோல் டேங்க் மீது பையன், பின்னால் மனைவி, அவர் கையில் கைக்குழந்தை என குடும்ப சமேதராக இன்னொரு பைக்கில் வந்துகொண்டு இருந்தார் ஒருவர். என் பின்னாலிருந்து கடக்க முயன்ற பைக் எதிரே வந்த பைக் மீது மோதுவது போல் ஆட்டம் காட்டிவிட்டு, சட்டென்று வளைந்து நெளிந்து விருட்டென்று பறந்துவிட்ட்து. எதிரே வந்த குடும்ப பைக்காளர் பேலன்ஸ் இழந்தார். சட்டென்று பைக் ஸ்கிட் ஆகி, கண் எதிரே சரிந்து விழுந்தார். பெட்ரோல் டேங்க் பையன் சாலையில் உருண்டான். மடிக் குழந்தை அம்மாவின் பிடியிலிருந்து நழுவி, ஓரமாகக் கிடந்த கல் மீது மோதி, அதன் தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்து அலறிய தாயார் ஸ்தலத்திலேயே மயங்கிச் சரிந்தார். இவையெல்லாம் கண் மூடித் திறக்கும் முன்பே நடந்துவிட்டன.


பைக்காரருக்கு உதவி செய்யும் உத்தேசத்தில் என் சைக்கிளை நிறுத்தி இறங்கினேன். அதற்குள் திபுதிபுவென்று பத்துப் பன்னிரண்டு பேர் ஓடி வந்தார்கள். “டேய்... டேய்... புடிறா அவனை! விடாதே!” என்றபடியே ஓடி வந்த அவர்கள் யாரைப் பிடிக்கச் சொல்கிறார்கள் என்று நான் யோசிப்பதற்குள் மூவர் வந்து என் சைக்கிளைப் பிடித்துக் கொண்டார்கள். மற்றவர்கள் அந்த பைக் ஆசாமிக்கு உதவச் சென்றார்கள். “இன்னா சார் ஆச்சு? ஐயோ! ரத்தம் கொட்டுதே! அம்மா மயங்கிட்டாங்களே! டேய், சோடா கொண்டாடா!” என்று கரிசனமாக ஆள் ஆளுக்குக் குரல் கொடுத்தார்கள். நல்லவேளையாக, குழந்தைக்கு உயிராபத்தில்லை. அந்த அம்மாவும் மயக்கம் தெளிந்து எழுந்தார்கள்.


நான் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நகர முற்பட்டேன். “டேய் பேமானி! எங்கடா நழுவப் பாக்குற நாயி! சாருக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிருச்சு, புள்ளைக்கு அடிபட்டிருக்குது, மயிராட்டம் நீபாட்டுக்கும் போற! ஆஸ்பத்திரி செலவுக்கு எதுனா காசு கொடுத்துட்டுப் போடா கஸ்மாலம்!” என்று என் சைக்கிளைப் பிடித்துக்கொண்டார்கள். எதிரே அந்த பைக் ஆசாமி பழையபடியே தன் பையனை முன்னால் உட்கார வைத்துக்கொண்டு, பின்னால் குழந்தை சகிதம் மனைவியையும் ஏற்றிக் கொண்டு கிளம்பத் தயாரானார். இவர்கள் என்னைப் பிடித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்து, “தம்பி மேல தப்பில்லீங்க! எதிரே ஒரு பைக்காரன் மோதினாப்ல வந்ததுல நான் கொஞ்சம் தடுமாறிட்டேன்!” என்றார். “சரி சரி, நீ போ சார்!” என்று அவரை வழியனுப்பி வைத்த கூட்டம், “எவ்வளடா வெச்சிருக்கே பையிலே?” என்றது என்னிடம்.


“ஏங்க, அவரே சொல்லிட்டாருங்களே என் மேல தப்பில்லைன்னு...” என்றேன்.


“அவரு சொல்லிட்டா..? மவனே, எங்காள்றா அவுரு. நாளப்பின்ன அந்தக் கொளந்தைக்கி எதுனா ஆயிருச்சுன்னா, யாரு பதில் சொல்றது? ம்...ம்... ஐந்நூறு ரூவா எடு!”


எனக்குப் பகீரென்றது. என் பாதிச் சம்பளம்!


“போலீசுக்குப் போவோம்! அவங்க என்ன சொல்றாங்களோ அதும்படிச் செய்யலாம்!” என்றேன்.


“போலீசுக்குப் போனா... புடுங்கிடுவானா வந்து?” என்றவர்கள், காது கருகும்படியான நாராச வார்த்தைகளால் என்னை அர்ச்சித்துவிட்டு, என் முதுகிலே ரெண்டு எத்து எத்தி, “ஐந்நூறு ரூவா கொண்டு வந்து கொடுத்துட்டு, உன் சைக்கிளை மீட்டுக்க! இல்லே, போலீசுக்குத்தான் போவேன்னாலும் போய்க்க. எங்களுக்கும் தெரியும் போலீசு!” என்று என் கையிலிருந்து சைக்கிளைப் பிடுங்கித் தள்ளிக்கொண்டு போனார்கள். அவர்கள் பின்னாலேயே ஓடினேன். “ஏங்க, ஐந்நூறு ரூபா அதிகம்க!” என்றேன். “பின்னே, எவ்வளவு தரே?” என்றார்கள். “நூறு ரூபா” என்றேன் பரிதாபமாக. “சரி, உன்னப் பார்த்தாலும் பாவமா இருக்குது. உனுக்கும் வாணாம், எனக்கும் வாணாம்..! இருநூத்தம்பது ரூபா கொடுத்துட்டு எடுத்துக்க உன் சைக்கிளை” என்றார்கள். “ம்... எடு எடு பணத்தை! கொடுத்துட்டு மவராசனா போய்க்கினே இரு உன் சைக்கிள்ல” என்றார்கள்.


“அது... வந்து... இப்ப என் கையில அவ்வளவு பணம் இல்லே. நான் நேரே வேலைக்குதான் போறேன். என்கூட யாராச்சும் வாங்க. நான் வேலை செய்யற இடத்துல ஃப்ரெண்டுங்க யார் கிட்டயாவது வாங்கிக் கொடுக்கிறேன்” என்றேன். “இன்னாடா இவன் இப்பிடிச் சொல்றான்... டேய் பாண்டி, நீ போறியா? மாரி, நீ போறியா?” என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். அங்கேயே தயாராக இருந்தார் ஒரு ஆட்டோக்காரர். சைக்கிளை அதில் ஏற்றிக்கொண்டார்கள். ஒரு கறுத்த ஆளும், பதினாறு பதினேழு வயதுச் சிறுவன் ஒருவனும் (ரவுடித்தனம் பயில்வோன்) ஏறிக்கொண்டார்கள். நான் ஆட்டோ டிரைவரின் சீட்டில் ஒண்டிக்கொண்டேன்.


நேரே அண்ணா நகருக்குதான் போயிருக்கவேண்டும். ஆனால், போகவில்லை. சாவி இதழை பிரின்ட் செய்துகொடுக்கும் பிரஸ் நெல்சன் மாணிக்கம் ரோடு முனையில், அருண் ஹோட்டல் பின்புறம் இருந்தது. ஆட்டோவை அங்கே விடச் சொன்னேன். வெளியில் நின்றதும், இறங்கிக் கொண்டேன். “ம்...ம்... போய் காசு வாங்கி வா!” என்றார்கள் பின்னிருக்கைக்காரர்கள். நான் மட்டும் முதலில் அச்சகத்துக்குள் போனேன். அங்கே அச்சக உரிமையாளர் ஆர்.எஸ்.மணி இருந்தார். (அட்டைப்பட ஜோக் விவகாரத்தில் ஆசிரியர் சாவியுடன் கைது செய்யப்பட்டவர்கள் நானும் இவரும்தான்!)


அவரிடம் நடந்ததை எடுத்துச் சொல்லி, “அந்த ரவுடிகளை இங்கே கூட்டி வந்திருக்கேன். ஏதாவது பண்ணுங்க சார்!” என்றேன். “அப்படியா!” என்றவர், தன் பிரஸ் ஆட்களை எல்லாம் தயாராக இருக்கச் சொன்னார். வெளியே வந்தார். “யாரப்பா அது காசு கேட்டது? வந்து வாங்கிட்டுப் போப்பா!” என்று அன்பொழுக அழைத்தார். “டேய், சைக்கிளைப் பார்த்துக்கடா! நான் போய் காசு வாங்கிட்டு வந்த பொறவு, ஆட்டோவுலேர்ந்து இத்த எறக்கினா போதும்” என்று சிறுவனுக்கு உத்தரவு போட்டுவிட்டு அந்தக் கறுத்த ஆசாமி இறங்கி பிரஸ்ஸுக்குள் வந்தான்.


அவன் உள்ளே நுழைந்ததுமே, பிரஸ்ஸின் இரும்புக் கதவைச் சாத்தினார் மணி. பிரஸ் ஆட்கள் இருபது பேர் அவனைச் சுற்றி வளைத்தார்கள். அவனைக் கிட்டத்தட்ட நெட்டித் தள்ளிக்கொண்டு போய் ஒரு மூலையில் உட்கார வைத்துப் பின் கைகளைக் கட்டிப் போட்டனர். “போலீஸ் வந்து என்ன புடுங்கும்னா கேட்டே? இப்ப புடுங்கப் போவுது பார்!” என்றபடியே டெலிபோன் டயலைச் சுழற்றினார் மணி. “சார்! சார்! இன்னா சார் நீ... தம்பி சைக்கிளை மோதினதுல ஃபால்ட்டாயிருச்சு சார்! எங்காள் சார் அவரு! நான் ஒண்ணியும் தப்பா கேக்கல சார்! கொளந்திக்கு எதுனா மருந்து...” என்று என்னவோ உளறிய அவன் முகத்தில் கால் முட்டியால் இடித்தார் அச்சக ஊழியர் ஒருவர். “மவனே, ஏதாவது பேசினே மூஞ்சி முதுகுப் பக்கம் திரும்பிக்கும்” என்றார்.


பின்னர் மணி வெளியே சென்று ஆட்டோ டிரைவரிடம், “இதோ பாருங்க, உங்க கூட வந்த ஆளை உள்ளே கட்டிப் போட்டிருக்கோம். மரியாதையா சைக்கிளை இங்கே விட்டுட்டு உங்காளைக் கூட்டிட்டுப் போறதுனா போங்க! இல்லேன்னா சைக்கிளை எடுத்துக்கிட்டு வந்த வழியே திரும்பிப் போங்க. எப்படி மீட்டுக்கறதுன்னு எங்களுக்குத் தெரியும்” என்றார்.


அந்தப் பையன் எந்த முரண்டும் செய்யாமல், வெகு ஜாக்கிரதையாக சைக்கிளை ஆட்டோவிலிருந்து இறக்கி, உள்ளே கொண்டு வந்து வைத்தான். பின்னர், கறுத்த ஆளின் கட்டுக்களை அவிழ்த்து, முதுகில் ஓங்கி ஓர் அறை வைத்து, “யார் கிட்டே உங்க வேலையைக் காட்டுறீங்க? பிச்சுப்புடுவேன் பிச்சு! ஓடிப் போங்க” என்று தள்ளினார் மணி. அவர்கள் மேற்கொண்டு எந்த வம்பும் செய்யாமல் ஆட்டோவில் ஏறிப் போய்விட்டனர்.


அதன்பின், வெளியே காத்திருந்து உதைக்கப் போகிறார்களோ என்று பயந்து, இரண்டு மணி நேரத்துக்கும் மேல் அங்கேயே இருந்து, பின்புதான் சாவி அலுவலகம் போனேன்.


அடுத்த நாளிலிருந்து என் பயண ரூட் – மாம்பலத்திலிருந்து அசோக் நகர், நூறடி ரோடு, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், அண்ணா நகர் என்பதாக மாறிவிட்டது!


நேற்றைக்குத் தொலைக்காட்சியில், வடிவேலு ஒரு சிறுவனை வாகனத்தின் முன் தள்ளிவிட்டுக் காசு பறிக்கும் ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படத்து நகைச்சுவைக் காட்சியைப் பார்த்தபோது நான் அவ்வளவாகச் சிரிக்காததற்குக் காரணம், பழைய ஞாபகங்கள் வந்ததுதான்!

.

6 comments:

ரவுடிகளைச் சமாளித்த விதம் சூப்பர்.
கனிவு கூர்ந்து தற்போது தாங்கள் பைக்கில் செல்லும் ரூட்டை மண்ணடி மாரி கேட்கச் சொன்னார். சொல்லவும்.
 
...ம்...ம் சும்மா சொல்லக் கூடாது சார். பொளந்து கட்டிட்டீங்க. இவ்வளவு விறுவிறுப்பா எழுத எனக்கு எப்போ வருமோ தெரியல்லியே!

ரேகா ராகவன்.
 
//சாலை ஒரு திருகலாக வளைகிற… காது கருகும்படியான வார்த்தைகளால்..//
முருவல் நடை சார்! முழு எபிசோடும் நல்ல விறு விறுப்பு! வடிவேல் காட்சி இனி செம யதார்த்தமா தெரியும்!
புன் முறுவலுடன்,-- கே.பி. ஜனா
 
நல்ல கட்டுரை ஐயா. கசப்பான அனுபவத்தை நன்கு விவரித்துள்ளீர்கள்.

அந்தப் படம் அருமை; கட்டுரைக்கு மிகப் பொருத்தமான படம்.
 
மறுபடியும்க் நான்தான்!
அ.நம்பி மிக அழகாகச் சொலியிருக்கிறார்.
கசப்பான அனுபவங்களைச் சுவைபட எழுதுவது எல்லோராலும் முடியாது.
உங்களுக்கு(ம்) அது வாய்த்திருக்கிறது.
இனிமேலாவது வறட்டி தட்டிகள் சரியாவார்களா?
 
Could you recognise these photos ?
http://www.dinamalar.com/new/varamalar_detail.asp?news_id=859&dt=09-16-09

Mahesh