உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, August 25, 2009

நான் ஏன் கதை எழுதுவதில்லை?

‘நீங்கள் ஏன் இப்போதெல்லாம் சிறுகதைகளே எழுதுவதில்லை?’ என்று எனக்கு நெருங்கியவர்கள், வேண்டியவர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கோபுலு, மாயா என்று என் மீது அக்கறை கொண்ட பெரியவர்கள் எல்லோரும் அவ்வப்போது கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், “ஆமாம், எழுதணும். எழுத வேண்டியதுதான். ஆபீஸ் வேலையே டைட்டா இருக்கு” என்று ஏதாவது மழுப்பலாகச் சொல்லிவிட்டுப் பேச்சை மாற்றிவிடுவேன். சமீபத்தில் இதே கேள்வியை, தொடர்ந்து என் வலைப்பூவை வாசித்து வரும் சகோதரி கிருபாநந்தினி கேட்டிருந்தார். நானும் வலைப்பூ எழுதி ரொம்ப நாளாகிவிட்டதா, சரிதான் என்று அந்தக் கேள்விக்கான பதிலாகவே இதை எழுதுகிறேன்.

இனி, நான் சிறுகதை எழுதாமைக்கான காரணங்கள்:

1) சிறுகதை எழுதுவதற்கு ஆர்வம் மிக முக்கியம். நான் சிறுகதை எழுதத் தொடங்கிய காலத்தில் (1978) எனக்குப் படிப்பும் இல்லை; வேலையும் இல்லை. தண்டச் சோறாகத் திரிந்துகொண்டு இருந்தேன். பொழுது போகவில்லை. எதையாவது கிறுக்குவோமே என்று எழுதத் தொடங்கினேன். நிஜமாக நடந்த ஒரு சம்பவத்தைச் சிறுகதையாக்கி ‘கரிநாக்கு’ என்னும் தலைப்பில் ‘கல்கி’ பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். அது பிரசுரம் ஆகுமென்று எனக்குக் கொஞ்சமும் நம்பிக்கையில்லை. காரணம், என் எழுத்தின் மீதான அவநம்பிக்கை அல்ல. பத்திரிகையில் வேலை செய்பவர்களேதான் கதைகளையும் எழுதுவார்கள் என்று நான் எண்ணிக்கொண்டு இருந்த காலம் அது. ஆனால் அதிசயமாக, கதையை நான் அனுப்பி வைத்த அடுத்த இருபதாவது நாள் அது கல்கியில் பிரசுரமாகி, வீட்டுக்குப் புத்தகம் வந்தது.

முதல் முயற்சியே வெற்றியாக அமைந்ததில் ஏக நம்பிக்கை பிறக்க, நானும் உற்சாகமாகி தொடர்ந்து எழுதத் தொடங்கினேன். ஆனந்த விகடன், கல்கி, குங்குமம், தினமணி கதிர், சாவி என ஐந்து பத்திரிகைகளிலும் அடுத்தடுத்து என் சிறுகதைகள் மாதத்துக்கு ஒன்றாக வெளியாகின. (ஏனோ குமுதத்துக்கு மட்டும் நான் என் படைப்புகளை அனுப்பி வைக்கவேயில்லை.) நான் முதலில் எழுதிய பன்னிரண்டு சிறுகதைகளுமே திருப்பியனுப்பப்படாமல் பரிசீலனையில் தேர்வாகிப் பிரசுரம் ஆனதில் தலைகால் புரியவில்லை எனக்கு.

பத்திரிகையில் பணியாற்ற இந்த ஒரு தகுதியே போதும் என்று எண்ணிக்கொண்டு, சென்னைக்குக் கிளம்பி வந்து, பத்திரிகை வேலைக்கு முயன்றதில் மூக்குடைபட்டு, பின்பு கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து, பின்னர் தங்கையின் திருமணத்துக்காக 1981-ல் விழுப்புரம் போனவன், அதன்பின் கொஞ்ச நாள் பாண்டிச்சேரியில் அஞ்ஞாதவாசம் செய்து... அது பெரிய கதை!

திரும்பவும் 1985-ல் சென்னை வந்தவன், முதலில் ஆம்ப்ரோ பிஸ்கட் கம்பெனியில் பணியாற்றி, பின்னர் ‘சாவி’ வார இதழில் சேர்ந்தேன். நேர்காணலின்போது சாவி சாரிடம் நான் கதை எழுதியிருப்பதைப் பற்றிச் சொல்ல, “அது என்ன பெரிய விஷயம்! வீட்டுக்கு ஒரு பொம்மனாட்டி கதை எழுதறா. பத்திரிகையாளன் ஆகணும். அதுதான் சிறப்பு. பத்திரிகையாளனாக இருக்கிறவனால் அற்புதமான கதை எழுத முடியும். ஆனா, எழுத்தாளனாக இருக்கிறவனெல்லாம் நல்ல பத்திரிகையாளனாக முடியாது!” என்றார்.

அந்த நிமிடத்திலிருந்தே கதை எழுதுவதில் இருந்த ஆர்வம் எனக்குப் புஸ்ஸென்று குறைந்து போய்விட்டது என்பதுதான் நிஜம்!

2) அதன்பின், ‘சாவி’ வார இதழில் நான் பணியாற்றிய ஒன்பது வருட காலமும் சராசரியாக மூன்று வாரத்துக்கு ஒருமுறை அதில் நான் சிறுகதை எழுதியிருக்கிறேன். ஆனால், எதுவும் என் சொந்தப் பெயரில் அல்ல; ஏகப்பட்ட புனைபெயர்களில்! (அவற்றைப் புனைபெயர்கள் என்று சொல்வது கூடச் சரியில்லை. புனைபெயர்கள் என்றால், அதில் ஒரு தனித்துவம் இருக்க வேண்டும். இஷ்டத்துக்கு கோபி, வைஷ்ணவி என்று மனதுக்குத் தோன்றிய பெயர்களில் எல்லாம் எழுதினால் அவை புனைபெயர்களா என்ன?)

அதற்கு மூன்று காரணங்கள். சாவி இதழின் மொத்தப் பொறுப்பையும் சாவி சார் என்னையே நம்பி ஒப்படைத்திருந்ததால், அதைப் பயன்படுத்திக்கொண்டு நான் என்னுடைய கதைகளை வெளியிட்டுக் கொள்கிறேன் என்பதாக அவர் என்னைத் தப்பாக நினைக்கக்கூடாது என்பது ஒரு காரணம். தவிர நானே சிறுகதை எழுதி, அதை நானே வெளியிட்டு, நானே என் பெயரைப் போட்டுக்கொள்ளக் கூச்சப்பட்டதும் ஒரு காரணம்.

இரண்டாவது, ஒரே எழுத்தாளரின் கதைகள் திரும்பத் திரும்ப வந்தால் வாசகர்களுக்குச் சலிப்பாக இருக்கிறதோ இல்லையோ, மற்ற வளரும் எழுத்தாளர்கள் அத்தனை பேருக்கும் கொஞ்சம் கடுப்பாக இருக்கும். அந்தப் பத்திரிகை மீது எரிச்சல் உண்டாகும். இதைத் தவிர்க்கவும் நான் என் பெயரைத் தவிர்த்தேன்.

மூன்றாவது, பரிசீலனைக்கு வருகிற சிறுகதைகளில் சரியாக எதுவும் தேறாத பட்சத்தில் அவசரமாக தொலைபேசியில் ஓவியர் ஜெயராஜிடமோ, அரஸ்ஸிடமோ ஒரு ஸீனைச் சொல்லிப் படம் வரைந்து தரும்படி கேட்டுவிட்டு, இரவோடு இரவாக ஒரு கதையை எழுதி, மறுநாள் அதை அச்சுக்கு அனுப்பி, ஃபாரத்தில் சேர்ப்பது எனக்குச் சௌகரியமாக இருந்தது. எனவே, சிறுகதை எழுதுவது என்பது எனக்கு ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. அதற்கு என் பெயரைப் போட்டுக்கொள்வது ஒரு பெருமையாகவும் தோன்றவில்லை.

ஆக, பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்தே, அச்சில் என் பெயரைப் பார்க்கிறபோது உண்டாகிற பரவசமும் சந்தோஷமும் தொலைந்துபோய்விட்டது. நான் சிறுகதை எழுத ஆர்வப்படாததற்கு இதுவும் ஒரு காரணம்.

3) ஆரம்பக் காலங்களில், நான் ஒரு சிறுகதையை எழுதி முடித்ததுமே, (பெரும்பாலும் இரவு 11 மணிக்குதான் எழுதத் தொடங்குவது வழக்கம். எழுதி முடிக்கும்போது நடு இரவு 2 மணியானாலும் சரி, விடியற்காலை 4 மணியானாலும் சரி) உடனுக்குடன் என் கையெழுத்துப் பிரதியை ஆர்வத்தோடு வாங்கிப் படித்து மகிழ்ந்தவர் என் அப்பா. அவர் கொடுத்த ஊக்கத்திலும் உற்சாகத்திலும்தான் நான் மேலும் மேலும் எழுத வேண்டும் என்கிற எண்ணம் உண்டாயிற்று. சாவியில் சேர்ந்த பின்னர் நான் சென்னை வந்து செட்டிலாகிவிட்ட படியால், சிறுகதை எழுதுவதை என் பத்திரிகை வேலைகளில் ஒன்றாகத்தான் செய்தேனே தவிர, என் சுய சந்தோஷத்துக்காக எழுதவேயில்லை. தவிர, என் கதையை அப்பா போன்று உடனுக்குடன் படித்து சந்தோஷப்படுவாரும் ஊக்குவிப்பாரும் அருகில் இல்லாததும் ஒரு காரணம்.

4) ஆனந்த விகடனில் பணியில் சேர்ந்த புதிதில், சில கதைகள் எழுதியிருக்கிறேன். ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் தந்த ஊக்கம் பெரிது. ஆனால், சாவி பத்திரிகை போல் இங்கே நான்தான் கதை எழுத வேண்டும் என்கிற நிர்பந்தம் கிடையாது. ஏனென்றால், கதைக்கு இங்கு பஞ்சமே இல்லை. இங்கே பரிசீலனைக்கு வந்த, வந்துகொண்டிருக்கும் சிறுகதைகளின் எண்ணிக்கை சாவி இதழுக்கு வந்ததைப் போல இருபது மடங்கு. தவிர, முன்பே சொன்னது போல ஆர்வமோ, பத்திரிகையில் என் பெயரைப் பார்க்கிற பரவசமோ இல்லை.

5) நினைத்தால் ஒரு சிறுகதை எழுதிவிடமுடியும் என்றால், எழுதுவதில் எப்படி ஆர்வம் பிறக்கும்? அதற்காகத்தான் சிறப்புச் சிறுகதைகளை மட்டும் எழுதுவது என்று வைத்துக்கொண்டேன். 9.09.99 தேதியிட்ட விகடன் இதழ் என்று நினைக்கிறேன்; ‘இதழ் தேதியில் ஒன்பது சிறப்பாக இருக்கிறது. இதற்குப் பொருத்தமாக ஏதேனும் சிறுகதை எழுத முடியுமா?’ என்று கேட்டார் திரு.கண்ணன். (இவர் விகடனின் ரா.கண்ணன்). கதையின் தலைப்பு, அதில் வருகிற கதாபாத்திரங்களின் பெயர்கள், அதில் இடம்பெறுகிற கற்பனை சினிமா பெயர்கள் எல்லாம் ஒன்பது எழுத்தில் அமையும்படி ஒரு கதை எழுதினேன். (அதில் நான் எழுதியிருந்த ‘வெற்றிக் கொடி கட்டு’ என்னும் தலைப்பிலேயே பின்னர் இயக்குநர் சேரன் ஒரு படம் எடுத்து வெளியிட்டது யதேச்சையாய் அமைந்த சுவாரசியம்.)

அதன்பின், சினிமா சிறப்பிதழ் ஒன்று தயாரிக்கும்போது திரு. கண்ணன் சொல்லி, சினிமா தலைப்புகளை வைத்தே ஒரு சிறுகதை எழுதினேன். அந்தக் கதையில் மொத்தம் 150 தலைப்புகளுக்கு மேல் இடம்பெற்றிருந்தன.

பின்பு, ‘ஏடாகூட கதைகள்’ ஒன்றிரண்டு எழுதிக் காட்டவும், ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் உற்சாகமாகி, ஊக்குவித்ததில் எட்டு கதைகள் அப்படி எழுதினேன். சாதாரண கதை எழுதுவது போலில்லாமல், ஒவ்வொன்றிலும் ஒரு விநோதம் செய்ய வேண்டிய சவால் எனக்கு இருந்தது.

பின்னர் ஒருசமயம், திரு. கண்ணன் எட்டு விஷுவல் டேஸ்ட் புகைப்படங்களைக் காட்டி, “இவற்றுக்குப் பொருத்தமாக ஒரு பக்கச் சிறுகதைகள் எழுத முடியுமா?” என்று கேட்டபோது, எழுதினேன். கடைசி கதையின் அடியில் மட்டும் சின்னதாக என் பெயரைப் போட்டுக் கொண்டேன்.

பெண்களை மட்டம் தட்டும் பொன்மொழிகளைத் திரித்து, (உதாரணமாக, பெண்ணிடம் ரகசியம் சொல்லாதே என்பதை ‘பெண்ணிடம் ரகசியம் சொல்’ என்று பெண்களுக்கு ஆதரவாக மாற்றித் தலைப்பிட்டு) அவற்றுக்குப் பொருத்தமாகச் சிறுகதைகள் எழுதி, ‘அவள் விகடன்’ பத்திரிகையில் ‘பெண்மொழிக் கதைகள்’ என்று எழுதி வந்தேன்.

‘ஒரு நிமிடத்தில் படித்து முடிக்கிற மாதிரியான மிகக் குட்டியூண்டு கதைகள் எழுத முடியுமா?’ என்று கேட்டார் திரு.கண்ணன். அப்படி முதல் செட்டாக நான் எழுதிய எட்டு ஒரு நிமிடக் கதைகள் விகடனில் வெளியாகின. அதற்கு ஏராளமான வரவேற்பு. அதைத் தொடர்ந்து வாசகர்களும் எழுத்தாளர்களாக மாறி, எக்கச்சக்கமாக ஒரு நிமிடக் கதைகள் எழுதி அசத்திவிட்டார்கள். இந்தக் குட்டிக் கதை ஜுரம் பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போல வேகமாகப் பரவி, ‘அரை நிமிடக் கதைகள்’, ’கால் நிமிடக் கதைகள்’ என்றெல்லாம் இதர பத்திரிகைகளிலும் வெளியாகத் தொடங்கிவிட்டது.

ஆக, இப்படி ஏதேனும் ஒரு சவால் இருந்தால் மட்டுமே எனக்குச் சிறுகதை எழுதத் தோன்றுகிறது. வெறுமே ஒரு சிறுகதை எழுத வேண்டும் என்ற எண்ணமே ஏற்படவில்லை.

6) இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. விகடனின் பரிசீலனைக்கு வரும் ஏராளமான கதைகளைப் படித்துப் பரிசீலிக்கும் பொறுப்பு எனக்கு இருப்பதால், நான் வாரத்துக்கு எப்படியும் இருபது, இருபத்தைந்து கைப்பிரதிகளையாவது முழுமையாகப் படிக்கிறேன். அவற்றில் ஒன்றிரண்டு பரிசீலனையில் தேறலாம். அல்லது, அத்தனையுமே தேர்ந்தெடுக்கப்படாமல் போகலாம். சில கதைகள் எழுதப்பட்ட விதமே சரியில்லாமல், எடிட் செய்து திருத்தியமைக்கக்கூட முடியாமல் இருக்கும். ஆனால், மையக் கரு அற்புதமாக இருக்கும்; இந்தக் கதை தேர்ந்தெடுக்கப்படாமல் திருப்பியனுப்பப்பட்டாலும், அந்தக் கரு என் மனதின் ஆழத்தில் போய்ப் பதிந்துவிட வாய்ப்புண்டு. பிறகு எப்போதாவது நான் சிறுகதை எழுதினால், என்னையும் அறியாமல் அந்தக் கருவை மையப்படுத்திக் கதை எழுதிவிட வாய்ப்புண்டு. இந்தத் தவறு நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே நான் சிறுகதை எழுதுவது இல்லை.

திரு. கண்ணன் புகைப்படங்களைக் கொடுத்துக் கதைகள் எழுதச் சொன்னபோது, நான் எழுதிய ஒரு கதையின் மையக் கரு இப்படித்தான் வேறு ஒரு எழுத்தாளர் விகடனின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்திருந்த, நான் படித்து நிராகரித்த கதை ஒன்றின் கருவாக என்னையுமறியாமல் அமைந்துவிட்டது. அந்த எழுத்தாளர் கடிதம் எழுதியதும் நான் உண்மையிலேயே கூசிக் குறுகிப் போனேன். என் தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டு அவருக்குக் கடிதம் எழுதிப் போட்டேன்.

அதன்பின் நான் சிறுகதை எழுதுவதையே விட்டுவிட்டேன்.

7) இதெல்லாவற்றையும்விட இப்போது எனக்குத் தோன்றுகிற ஒரு காரணமும் முக்கியமானதுதான். பயம்! இன்றைக்குச் சிறுகதை எழுதுகிற இளைய தலைமுறையின் எழுத்தின் வேகம் அபாரமாக இருக்கிறது. பின்னிப் பெடலெடுக்கிறார்கள். எங்கள் விகடன் அலுவலகத்திலேயே அற்புதமான இளம் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ராஜு முருகன், பாரதி தம்பி, கார்த்திகேயன்... இன்னும் பலரின் எழுத்துக்கள் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. விகடனின் பொறுப்பாசிரியராக இருந்துகொண்டு நான் கதை எழுதினால், அது இவர்களின் கதைகளைவிட ஒரு படி மேலாக இருக்க வேண்டும் அல்லவா! இருக்குமா? இளைய தலைமுறையின் வேகத்தோடு என்னால் போட்டி போட முடியுமா? எல்லோராலும் சுஜாதா ஆக முடியுமா என்ன?
.

9 comments:

அருமையான பதில் சார்.. இருந்தாலும் அவ்வப்போது எழுதுங்கள்..
பத்திரிக்கையில் பெயர் பார்கும் சந்தோஷம் போய்விட்டாலே அவ்வள்வுதான்.

என்னுடய சிறுகதைகள் உங்களுடய பத்திரிக்கையில் வந்திருக்கிறது..சமீபத்தில்..
 
அருமை சார்.
 
சாவி பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோதும் நீங்கள் அதிக அளவு கதைகளைப் படித்துக்கொண்டு இருந்திருப்பீர்களே, அப்போது மட்டும் எப்படி (காரணம் 6) இரண்டு மூன்று வாரத்துக்கு ஒருமுறை சிறுகதை எழுதினீர்களாம்?
 
கிருபாநந்தினி
பதில் அருமை. இதுவே ஒரு அற்புதமான சிறு கதை படிப்பது போல இருக்கிறது. என்றாலும் சாவி அவர்கள் சொன்ன, 'பத்திரிகையாளரா இருக்கிறவரால அற்புதமான கதைகள் எழுத முடியும்,' என்பதையும் நீங்கள் அவ்வப்போது செய்யணும் இல்லையா? 2. சவால் விடும் கதைகளை அவ்வப்போதாவது தொட(ர)லாம் இல்லையா? -- கே.பி.ஜனா
.
 
கேபிள் சங்கருக்கு...
பின்னூட்டத்தின் முன்பகுதிக்கு - ஆகட்டும் பார்க்கலாம்! பின்பகுதிக்கு - ஆகா, நான் பார்க்காமலா!

மங்களூர் சிவாவுக்கு...
எதை அருமை என்கிறீர்கள்? நான் கதை எழுதாமல் விட்டதையா? :-(
சும்மா தமாஷ்! :-)

கிருபாநந்தினிக்கு...
போங்க கிருபா! இதுக்கெல்லாம் நான் இன்னொரு பதிவு எழுத முடியாது!

ஜனார்த்தனனுக்கு...
சவால் விடும் கதைகளை எழுதச் சொல்லி சவால் விடுறீங்களா? இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளப்படுத்திருவீங்க போலிருக்கே!
 
ஒரு பக்கக் கதைகளுக்குப் பிதாமகர் நீங்கதானா? சபாஷ்!

சாவியில் இருக்கும்போது பிரசுரத்துக்கு ஏற்ற கதைகள் இல்லாமல் போயிருக்கலாம். மேலும் சூழ்நிலைக்குத் தக்கவாறு செயல்பட வேண்டிய நிலையும் இருந்திருக்கலாம்.
ஆனந்தவிகடனில் வேறு அட்மாஸ்பியர் இருந்திருக்கலாம். அதனால் அதற்குத் தகுந்தபடி நீங்கள் react செய்யலாம்.

இதையெல்லாம் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை.

அதைத் தெரிந்ததால்தானோ என்னவோ அனானிமஸ் போர்வையில் வந்து கேள்வியை வீசியிருக்கிறார் “கிருபா நந்தினி”!
 
படிக்கப் படிக்க ஹா...என்றிருந்தது. பத்திரிகை அலுவலகத்தில் பணி புரிபவர்களுக்கு நிறைய கதைகளை படிக்கும் பாக்கியம் கிட்டும் என்றிருந்த எனக்கு உங்கள் பதிவை படித்தபின் எவ்வளவு இழப்புகளும் இருக்கு என்பது புரிந்தது. மறக்கவே முடியாத பதிவு.

ரேகா ராகவன்.
 
லதானந்த் சார், கேள்வி கேக்க உரிமை இல்லேன்னு சொல்ல உங்களுக்கு உரிமை இல்லே! நியாயமான கேள்வி யாரும் கேக்கலாம். பரிசீலனைக்கு வரும் நிறைய கதைகள் படிச்சு அந்தக் கரு அடி மனசுல பதிஞ்சு, அதைத் தானே கதையாக எழுதிடக்கூடாதேன்னுதான் கதை எழுதறதை விட்டுட்டதா ஆறாவது காரணம் சொன்னார் ரவிபிரகாஷ். அப்படின்னா சாவி பத்திரிகையிலும் அதே சூழல்தானே? அப்போ மட்டும் வாசகர்களின் கருவைத் தான் கையாண்டு கதையா எழுதுற ஆபத்து இல்லையா? அதைத்தான் நான் கேட்டேன். பதில் சொல்ல முடியாம அவரே மவுனம் சாதிக்கும்போது நடுவுல நீங்க என்ன அண்ணாவி?
 
கிருபாநந்தினி
ஜி.. ஜி.. லதானந்த்ஜி! ஒரு பக்கக் கதைகளுக்கெல்லாம் நான் பிதாமகன் இல்லைஜி! ஐயையோ, எவ்ளோ பெரிய வார்த்தை! 1940-களில் ஆனந்தவிகடனில் சசி என்பவர் ஒருபக்கக் கதைகள் எழுதினார். அதுதான் பிரபலம். எனக்குத் தெரிந்து ஒருபக்கக் கதைகளுக்குப் பிதாமகர் அவர்தான்!

திரு.(ரேகா)ராகவன்,
பத்திரிகைகளில் பணியாற்றுபவர்களுக்கு நிறையக் கதைகள் படிக்கும் பாக்கியம்..?!!!

கோபிக்காதீங்க கிருபாநந்தினி!
ஆனந்தவிகடன் அனுபவத்துக்குப் பிறகுதான் அப்படியொரு ஆபத்து உள்ளது (ஆறாவது காரணம்)என்பதைப் புரிந்துகொண்டேன் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறேனே!