உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, July 09, 2009

சி.ஆர்.கண்ணன்... - தொடர்ச்சி

சிலர் மீது நமக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தபோதிலும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் வேறு விதமாக அமைந்து, அவரோடு பகை என்னும்படியான ஒரு நிலைக்கு நாம் விரும்பாமலே ஆளாகிவிடுவதுண்டு. அப்படியான ஒரு நிலை, எனக்குப் பிரியமான சிலருடனேயே நேர்ந்திருக்கிறது.

அவர்களில் ஒருவர், இன்று காலையில் அமரரான திரு. சி.ஆர்.கண்ணன். நான் சாவியில் சேரும்போது, என்னை இன்முகத்தோடு வரவேற்று, அன்பாகப் பேசியவர். ‘அபர்ணா நாயுடு’ என்கிற புனைபெயரில் தினமணி கதிரில் நான் படித்து ரசித்த கதைகளை எழுதியவர் இவர்தானா என்று பிரமிப்போடு அவரைப் பார்த்திருக்கிறேன். ஆனால், முந்தைய பதிவில் சொன்னது மாதிரி, சேர்ந்த பத்தே நாட்களுக்குள் அவர் என் மீது மனக் கசப்பு கொள்ளும்படியான சம்பவம் நிகழ்ந்துவிட்டது.

அடுத்து, மோனா மாத இதழின் பொறுப்பை அவரிடமிருந்து பிடுங்கி, என்னிடம் தந்து, “இனி நீதான் மோனா இதழைப் பார்த்துக் கொள்ளப்போகிறாய். என்ன செய்வாயோ, ஏது செய்வாயோ... சரியாக முதல் தேதியன்று அடுத்த மோனா இதழ் என் மேஜையில் இருக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுவிட்டார் சாவி.

எனக்குப் பயம் வந்துவிட்டது. பழம் தின்று கொட்டை போட்ட அபர்ணா நாயுடுவாலேயே முடியாதபோது, நான் சுண்டெலி எம்மாத்திரம்!

சில மணி நேரம் கழித்து, சாவி சார் வீட்டில் தன் அறையில் தனியாக இருக்கிற நேரம் பார்த்து, அனுமதி பெற்று அவர் அறைக்குள் சென்றேன்.

“சார்! திடீர்னு நீங்க பெரிய பொறுப்பைத் தூக்கி என்கிட்டே கொடுத்துட்டீங்க. அவ்வளவு அனுபவம் வாய்ந்தவராலேயே செய்ய முடியாத காரியத்தை, அனுபவமே இல்லாத என்னால் மட்டும் எப்படிச் செய்ய முடியும்? தவிர, அவருக்கு முன்னே சவால் வேற விட்டுட்டீங்க. இப்போ இதை என்னால செய்ய முடியலைன்னா, அவமானம் எனக்கு இல்லை. உங்க முகத்துல கரி பூசினது மாதிரி ஆயிடும். அதுக்காகத்தான் நான் பயப்படறேன். வேண்டாம் சார்! மோனாவை அவரே தொடர்ந்து பார்த்துக்கட்டும்” என்றேன்.

“அப்போ, அவர்கிட்டே போய், ‘அவனால முடியாதாம். பயப்படறான். நீங்களே பழையபடி பார்த்துக்குங்க!’ன்னு என்னைச் சொல்லச் சொல்றியா? அப்ப மட்டும் என் மூஞ்சியில கரி பூசின மாதிரி ஆகாதா? நீதான் பார்த்துக்கறே! பயப்படாதே! தைரியமா எடுத்துச் செய். எல்லாம் சரியா வரும். போ!” என்றார்.

மேற்கொண்டு பேச முடியாமல், திக் திக்கென்ற நெஞ்சோடு வெளியே வந்தேன். நேரே அபர்ணா நாயுடுவிடம் போனேன். “சார்! என்னை மன்னிச்சுக்குங்க. இவர் (சாவி) இந்த மாதிரி பண்ணுவார்னு எனக்குத் தெரியலை. உங்களாலேயே முடியாத ஒரு காரியத்தை என்னால பண்ண முடியும்னு எனக்குத் தோணலை. இது என் மீது சார் சுமத்தியிருக்கிற பொறுப்பு. என்னைத் தப்பா நினைக்காதீங்க, ப்ளீஸ்!” என்றேன்.

“அவர் எப்பவும் இப்படித்தான். முன்கோபக்காரர். அவர்கிட்டே நானாக இருக்கக்கொண்டு காலம் தள்ளிக்கிட்டிருக்கேன். அவர் கோபத்தை உன்னால தாங்க முடியாது. நான் உன்னை எதுவும் தப்பா நினைக்கலை. நீ பாவம், என்ன செய்வே? ஆனா, சார் கிட்டே மட்டும் ஜாக்கிரதையா இரு. எப்போ என்ன செய்வார்னு சொல்ல முடியாது. தனக்கு ஒருத்தனைப் பிடிக்கலைன்னா, அவனை மட்டப்படுத்தறதுக்காகவே அவன் கீழ் இருக்கிறவனை உற்சாகப்படுத்தற மாதிரி பேசுவார். அவனும் அதை நம்பி, தன் தலையில அவர் ஏதோ கிரீடம் சூட்டிட்டதா அகமகிழ்ந்து போவான். அப்புறம், இன்னொரு புதுமுகம் வருவான். இவர் அந்தப் புதுமுகத்தை உற்சாகப்படுத்தி இவனை டமால்னு தூக்கிக் கீழே போடுவார். உடைஞ்சு சுக்குநூறாயிடுவான். அந்த நிலை உனக்கு வரக் கூடாது. பார்த்து நடந்துக்கோ!” என்று இதமாகப் பேசினார் அபர்ணா நாயுடு.

மறுநாள், ஒரே வாரத்துக்குள் கிடைக்கும்படியாக மோனா நாவலுக்கு ஒரு கதை எழுதி அனுப்பும்படி எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்குத் தந்தி கொடுத்தேன். ‘அப்படியே செய்கிறேன்’ என்று பதில் தந்தி அனுப்பியிருந்தார் ராஜேஷ்குமார். நான் கேள்விப்பட்டிருந்த வரையில், சொன்னால் சொன்ன வாக்குத் தவறாதவர் ராஜேஷ்குமார். (இன்று வரையிலும் அவர் அப்படித்தான். ஒப்புக்கொண்டு விட்டாரானால், ஓரிரு நாட்கள் முன்பாகவே கதை நம் கைக்குக் கிடைக்கும்படியாக அனுப்பிவிடுவார்.)

ஆனால், ஒரு வாரமாயிற்று. கதை வரவில்லை. எஸ்டீடி செய்து பேசினால், “இரண்டு நாள் முன்பே அனுப்பிவிட்டேனே! சரி, அதன் ஜெராக்ஸ் பிரதியை இன்றைய தபாலில் ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பி வைக்கிறேன்” என்றார் ராஜேஷ்குமார். அப்போது பார்த்துதானா தபால் ஊழியர்கள் ஸ்ட்ரைக் ஆரம்பிக்க வேண்டும்?

தேதி 27. பதறிப்போய் மீண்டும் ராஜேஷ்குமாருடன் தொலைபேசினேன். தானே 29-ம் தேதி சென்னை வரவிருப்பதாகவும், பாக்கெட் நாவல் அசோகனின் அலுவலகத்திற்கு ஆளை அனுப்பிக் கதையை அன்று வாங்கிக் கொள்ளும்படியும் சொன்னார். அவ்விதமே செய்தேன்.

நல்லவேளையாக அந்த மாதத்துக்கு 31 தேதி. கதையோடு நேரே சென்று பிரஸ்ஸில் நானே போய் உட்கார்ந்துவிட்டேன். மற்ற வேலைகளோடு தலைமை அச்சக ஊழியர் ராஜாபாதர் இந்த நாவலையும் அச்சுக்கோத்து கேலிகளாகப் போட்டுத் தரத் தர, உடனுக்குடன் அங்கேயே அமர்ந்து திருத்திக் கொடுத்தேன். ராஜேஷ்குமார் தொலைபேசியில் சொன்ன தலைப்பைக் கொண்டு (சின்ன தப்பு, பெரிய தப்பு) மோனா அட்டையை டிசைன் செய்து, ரெடி செய்தாகிவிட்டது.

மறுநாள் 30-ம் தேதி, இரவு ஏழு மணிக்கு நாவல் மொத்தமும் அச்சுக்கோத்து முடிந்தது. அப்போதுதான் புதிய சோதனை ஒன்று முளைத்தது! மோனா மொத்தம் 72 பக்கங்கள். ஆனால், ராஜேஷ்குமாரின் நாவல் 60 பக்கங்களிலேயே முடிந்துவிட்டது. மிச்சம் 12 பக்கங்களுக்கு என்ன செய்வது?

போய் சூடாக ஒரு டீ குடித்துவிட்டு வந்தேன். போனில் சாவி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, ஆர்ட்டிஸ்ட் ராஜேந்திரனிடம் (தற்போது தினமலரில் பணிபுரிகிறார்) ‘நா ஒரு மாதிரி!’ என்ற தலைப்பைச் சொல்லி, ஏதாவது பழைய ஜெயராஜ் ஓவியத்துப் பெண்ணை வைத்து ஒரு பக்கம் டிஸைன் செய்யச் சொன்னேன். மீதி 11 பக்கங்களுக்கு நானே கதை எழுதிவிடுவதென்று முடிவெடுத்துவிட்டேன்.

இரவு 9 மணியிலிருந்து, அச்சகத்தில் அமர்ந்து நான் எழுதிக்கொடுக்கக் கொடுக்க, ராஜாபாதர் உடனுக்குடன் அதை அச்சுக்கோத்துத் தர... இரவு 1 மணிக்கு, “போதும், கதை 12 பக்கத்துக்கு மேல் ஓடுகிறது” என்றார் அவர். “மொத்தத்தையும் அச்சுக்கோத்து முடியுங்கள். பின்னர் கேலி திருத்தும்போது குறைத்துத் தருகிறேன்” என்று ஒருவழியாகக் கதையை முடித்தேன்.

மொத்தம் 14 பக்கங்களில் கதை நிறைவடைந்திருந்தது. தேவை 12 பக்கங்கள். தவிர, முகப்புப் பக்கமாக ஜெயராஜ் ஓவியம் + தலைப்பு என ஒரு பக்கத்தை ஒதுக்கினால், கதைக்கு 11 பக்கம்தான் இடம். கேலி திருத்தும்போதே எடிட் செய்துகொடுத்தேன்.

எல்லாம் முடியும்போது விடியற்காலை மணி 4. அவசர அவசரமாக அதை அப்போதே தடக் தடக்கென பெரிய ராட்சத இயந்திரம் அச்சிடத் தொடங்கியது. மோனா நாவல் அட்டையோடு சேர்த்து பைண்டிங் ஆகி, கையில் ஆசிரியருக்கான இரண்டு காப்பிகள் கிடைக்கும்போது மணி 6.

எடுத்துக்கொண்டு நேரே அண்ணா நகருக்கு ஓடினேன். வீட்டு வாசலில் சாவி சார் காபி சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அவரிடம் மோனா இதழ்களைக் கொடுத்தேன்.

“என்ன, மோனா ரெடியாயிடுச்சா? அவ்வளவுதான்! என்னமோ பயந்தியே! சரி, நீ போ! ராத்திரி பூரா தூங்காம இருந்திருப்பே. நாளைக்கு வா!” என்றார் சாவி.

மறுநாள் போனேன்.

முதல்நாள் சாவி சார் கோபப்பட்டுத் திட்டியதில், திரு.சி.ஆர்.கண்ணன் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போயிருந்தார்...

இல்லை. அப்படி எதுவும் விபரீதமாக நடக்கவில்லை. ஒருவேளை, அப்படி நடந்திருந்தால், இன்றளவும் அது என் மனசுக்குள் உறுத்திக்கொண்டே இருந்திருக்கும்.

சரியான தேதியில் மோனா இதழைக் கொண்டு வந்தது சம்பந்தமாக ஆசிரியர் சாவி, திரு.கண்ணனிடம் எதுவுமே முதல் நாள் பேசவில்லை என்றார்கள் சக நண்பர்கள். என்னிடமும் சாவி அது சம்பந்தமாக பிறகு ஒருபோதும் பேசவில்லை.

ரமணீயன் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட, திரு.கண்ணன் சாவி இதழ் பொறுப்பை மேற்கொண்டார். மோனா மாத இதழ் பொறுப்பு என் வசம் தொடர்ந்தது.

உதவி ஆசிரியரின் பொறுப்புகள், கடமைகள் என்னென்ன, எதை எதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் எனக்குக் கற்றுத் தந்தவர் திரு.சி.ஆர்.கண்ணன்தான். அந்த நன்றி என் மனதில் இப்போதும் உண்டு!

6 comments:

/
உதவி ஆசிரியரின் பொறுப்புகள், கடமைகள் என்னென்ன, எதை எதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் எனக்குக் கற்றுத் தந்தவர் திரு.சி.ஆர்.கண்ணன்தான். அந்த நன்றி என் மனதில் இப்போதும் உண்டு!
/

நன்றி மறப்பது நன்றன்று இல்லைங்களா ரவி சார்!

விடிய விடிய கதை எழுதின கதை சூப்பர்!. அப்படி வேலை பாக்கிறதே செம த்ரில்.
 
very good experience
 
* ‘நன்றி மறப்பது நன்றன்று!’ அது சரிதான். அந்தக் குறளின் அடுத்த வரி ‘நன்றல்லது அன்றே மறப்பது நன்று’. அந்த வரி எனக்குப் பொருந்தவில்லையே சிவா, அதற்காக வருத்தப்படுகிறேன், உண்மையிலேயே!
விடிய விடிய கதை எழுதின கதை மட்டும் சூப்பர் இல்லை; அந்தக் கதையே ஏனோதானோவாக இல்லாமல் சூப்பர் கதை என என் குரு சாவி வாயால் பாராட்டப்பட்டது. நேரம் கிடைக்கும்போது அதைப் பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் சிவா.

* உண்மையில்-லேயே சில அனுபவங்கள் அருமையானவைதான் லதானந்த்ஜி! ஆனால், அதன் அருமை, அதை அனுபவிக்கும்போது தெரிவதில்லை என்பதுதான் கஷ்டம்!
 
அன்புள்ள ரவி!

உங்கள் அஞ்சலிக் குறிப்பு எனக்குச் சில பழைய நினைவுகளை மீட்டுத் தந்தது.

திரு. சி.ஆர்.கே., ஒரு தலைமுறையின் இடப்பெயர்ச்சிக் காலத்தில் வாழ்ந்திருக்கிறார் என்று கருதுகிறேன். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நான் கல்கியில் சினிமா விமரிசனம் எழுதப் போன சமயம், அவர் அங்கே எழுதிக்கொண்டிருந்தார். அவரை நகர்த்திவிட்டுத்தான் என்னை அந்த இடத்தில் சொருகினார்கள்.

சி.ஆர்.கேவுக்கு என் எழுத்து பிடிக்கும். ஆனாலும் நான் கல்கியில் இருந்தவரை என்னிடம் எப்போதும் செல்லமாக முறைத்துக்கொண்டேதான் இருப்பார்.

நான் இல்லாதுபோயிருந்தாலும் வேறு யாருக்கேனும் சினிமா விமரிசனம் எழுதும் பணி மாற்றித் தரப்பட்டிருக்கும் என்கிற உண்மை அவருக்கு விளங்கச் சற்று அவகாசம் எடுத்தது.

அதுவரை எனக்குத்தான் மிகவும் தர்மசங்கடம். உங்களது இப்பதிவைப் படித்ததும் அவசர அவசரமாகத் தேடி எஸ். சங்கரநாராயணனின் ‘கவாஸ்கர்’ சிறுகதையை ஒருதரம் படித்துப் பார்த்தேன்.

நீங்களும் படிக்கலாம். சி.ஆர்.கே. ஒரு கவாஸ்கர்.
 
அனுபவங்கள் அனுபவிப்பதை விட அசைபோடும் போது மிகவும் ருசிக்கும்..


கடினமான உழைப்பாளி நீங்கள்..
 
திரு. ராகவன், தங்களின் பின்னூட்டம் படித்து எனக்குச் சற்று ஆறுதல். அப்போது சிறுவனான என்னை வைத்துக்கொண்டே ஆசிரியர் சாவி திரு.கண்ணனைத் திட்டும்போது எனக்குத் தர்மசங்கடமாக இருக்கும், ஏதோ நான்தான் அதற்குக் காரணம்போல! குறிப்பிட்ட தேதியில் நான் மோனா இதழைக் கொண்டு வந்ததும், சாவி சார் எதுவும் சொல்லவில்லை என்றாலும்கூட, திரு.கண்ணனுக்கு அது ஒரு அதிர்ச்சிதான்! அது முதலே சாவி சாருக்கும் கண்ணனுக்கும் டெர்ம்ஸ் சரியில்லாமல் போய்விட்டது. அதன் ஒரு தொடர்ச்சியாகத்தான் கண்ணன் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போனார். எனக்கு அதில் வருத்தம்தான்.நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல், அங்கே (சாவியில்) நான் இல்லையென்றாலும் வேறு யாருக்காவது அந்தப் பணி மாற்றித் தரப்பட்டிருக்கும் என்றுதான் இப்போது தோன்றுகிறது.கவாஸ்கர் கதையை அவசியம் படிக்கிறேன்.

* திரு. வண்ணத்துப்பூச்சி, நான் கடினமான உழைப்பாளியோ என்னவோ, சின்ஸியர் உழைப்பாளி! அதிகப்பிரசங்கித்தனமாக இருந்தாலும், அந்தப் பெருமை எனக்கே உண்டு!