உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, July 19, 2009

கண்ணன் எத்தனைக் கண்ணனடி!

சாவி வார இதழில் எனக்கு சீனியராக இருந்த திரு. கண்ணன் அவர்களைப் பற்றிய பதிவை எழுதிய அன்றைக்கு, என்னோடு எத்தனைக் கண்ணன்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று சும்மா தமாஷாக யோசித்துப் பார்த்தேன்.

விகடன் ரா.கண்ணன்:
விகடன் நிர்வாக ஆசிரியர். என்னைவிடக் குறைந்தபட்சம் 20 வயதாவது இளையவராக இருப்பார் என்று நினைக்கிறேன். பழகுவதற்கு மிக இனிமையானவர். அதே சமயம், விகடன் பணிகள் என்று வந்துவிட்டால் மிகவும் கண்டிப்பானவர். விகடன் பரிசீலனைக்கு வரும் படைப்புகள் சிலவற்றின் தரத்தில் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், பிரசுரிக்கலாம் என்று நினைப்பவன் நான். புதிய படைப்பாளியை ஊக்குவிப்போமே என்கிற நல்ல எண்ணம்தான். ஆனால், தரத்தில் குறைவு என்று தெரிந்தால், அதை உதவி ஆசிரியர்களிடம் கொடுத்து சரி செய்யச் சொல்வார் கண்ணன். அப்படியும் திருப்தியாக வரவில்லை என்றால், அது எத்தனைப் பிரபல படைப்பாளியினுடையதாக இருந்தாலும், அந்தப் படைப்பை தாட்சண்யமின்றி நிராகரித்துவிடுவார். ஆனந்த விகடன் இதழ் தரமானதாக வந்துகொண்டிருப்பதில் பெரும்பங்கு கண்ணனைத்தான் சாரும். இளம் வயதில், ஒரு படைப்பை எடை போட்டுத் தேர்ந்தெடுக்கிற திறனும், தரமாக இல்லையெனில் கொஞ்சமும் தயங்காமல் நிராகரிக்கிற திறனும் இருப்பது வியப்புக்குரியது; போற்றத்தக்கது.

சாவியில் பணியாற்றிய காலத்தில் நான்கூட அப்படித்தான் இருந்தேன். ஆசிரியர் சாவி இருக்கிற தைரியத்தில், பிரபல படைப்பாளிகள் சிலரின் படைப்புகளை நிராகரித்திருக்கிறேன். அதற்காக அவர்கள் என்னைப் பற்றி சாவி அவர்களிடமே புகார் செய்ய, பிரபலம் என்பதற்காக சாவி சார் அவர்கள் பக்கம் சாராமல், என் பக்கம்தான் நின்றார். அவற்றைப் பற்றிப் பின்னர் சமயம் வரும்போது விரிவாக எழுதுகிறேன்.

என்.கண்ணன்:
என் இரண்டாவது தங்கையின் இரண்டாவது மகன். ப்ளஸ் டூ படிக்கிறான். ஐந்தாறு வருடங்களுக்கு முன்பே, “என்ன மாமா, எப்படி இருக்கே? லைஃபெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு? குழந்தைகள் எல்லாம் சௌக்கியமா? மிஸஸ் உடம்பு ஒண்ணுமில்லாம இருக்காங்களா?” என்றெல்லாம் பெரிய மனுஷத்தனமாக விசாரித்தவன். ஸ்போர்ட்ஸில் நாட்டமுள்ளவன். படிப்பிலும் கெட்டிக்காரன். மகா துறுதுறுப்பும், பழகினால் யாருடனும் ஒட்டிக் கொள்கிற குணமும் உள்ளவன்.

ஐந்தாறு வயதுக் குழந்தையாக இருந்தபோது, வீட்டுக் காம்பவுண்டுச் சுவரில் ஏறி விளையாடி, அங்கிருந்து தலைகுப்புற வெளியே தவறி விழுந்து, டிரெயினேஜில் தலைகீழாய்ப் போய்ச் சிக்கிக்கொண்டு, மண்டை உடைந்து, மகா பயங்கரமாகி, அவனைப் பிழைக்க வைப்பதே பெரும் பாடாகிவிட்டது.

எஸ்.கண்ணன்:
விழுப்புரத்தில், நான் என் மாமா வீட்டில் தங்கிப் படித்துக்கொண்டு இருந்த காலத்தில், வீட்டின் இன்னொரு போர்ஷனில் சுந்தரம் ஐயர் என்பவர் குடியிருந்தார். அவரின் மூத்த பிள்ளைதான் கண்ணன். அவரின் தம்பி சிவராமகிருஷ்ணன். எம்.ஜி.ஆர். ரசிகர். சிவாஜி ரசிகனாக இருந்த என்னை வற்புறுத்தி எம்.ஜி.ஆர். படத்துக்கு அழைத்துப் போவார். முதன்முதல் நான் பார்த்த எம்.ஜி.ஆர். படம் ‘பறக்கும் பாவை’. அதற்கு அழைத்துக்கொண்டு போய் என்னைப் படம் பார்க்கவைத்தவர் சிவராம கிருஷ்ணன்தான். அதன்பின் பல எம்.ஜி.ஆர். படங்களுக்கு என்னை அழைத்துப் போய், எம்.ஜி.ஆர். படங்களையும் ரசிக்க வைத்தவர் அவர்.

சரி, கண்ணனுக்கு வருவோம். கண்ணன் அவரின் அண்ணன். சென்னை, கற்பகம் ஸ்டுடியோவில் வேலை செய்துகொண்டு இருந்தார். ஆண்டுக்கு ஒரு முறை விழுப்புரம் வருவார். தேங்காய் சீனிவாசனுடன், நாகேஷுடன், ஐசரி வேலனுடன், வி.கே.ராமசாமியுடன் இருப்பது போன்ற புகைப்படங்களையெல்லாம் என்னிடம் காட்டி பிரமிப்பில் ஆழ்த்துவார். அவர்களும் அவரும் மட்டும் இருக்கிற படங்கள் அல்ல அவை. அந்த நடிகரைச் சுற்றி நட்பு வட்டம் போல் ஏழெட்டுப் பேர் இருப்பார்கள். அவர்களில் ஒருவராக இந்தக் கண்ணனும் இருப்பார்.

நிறையப் படங்களில் நடித்திருப்பதாகச் சொல்லி, அந்தப் படம் வந்தால் கட்டாயம் பார்க்கும்படி சொல்வார். எந்தக் காட்சியில் யாராக தான் வருகிறார் என்பதையும் குறித்துக் கொடுப்பார். ‘வாயில்லாப் பூச்சி’ என்று ஒரு படத்தில் ஜெய்சங்கரோடு தான் வருகிற காட்சிகள் நிறைய என்று சொன்னார். அதற்காகவே அந்தப் படத்தைப் பார்த்தேன். இரண்டு மூன்று இடங்களில் அவரைக் கண்டுபிடித்துவிட்டதில் ஏக சந்தோஷம் எனக்கு.

‘இரும்புத் திரை’ என்ற படத்தில், ஒரு காட்சியில் கூலித் தொழிலாளர்கள் வரிசையில் நின்று கூலி வாங்குகிற காட்சியில் இவரும் ஒருவராக நின்றிருப்பார். பின்பு அதே படத்தில் வேறு ஒரு காட்சியில், ‘சார், போஸ்ட்’ என்று சொல்லி தபால் கொடுப்பார். பின்பு வேறு ஒரு காட்சியில், ஒரு துணிக்கடையிலிருந்து கஸ்டமர் போல வெளியே வருவார்.

அந்தப் படத்தில், சிவாஜி இருக்கும் அறையில் இவர் அமர்ந்து ஏதோ டைப் அடித்துக்கொண்டு இருப்பார். சிவாஜி இவர் சொந்தப் பெயரைச் சொல்லி அழைத்து, ‘கண்ணன், அவர் வந்தா என்னை அங்கே வந்து பார்க்கச் சொல்லிடுங்க’ என்று ஏதோ சொல்லிவிட்டுப் போவார். எனக்குத் தெரிந்து கண்ணன் பளிச்சென்று தெரிந்த காட்சி இது மட்டும்தான்!

கண்ணன்:
சென்னை, அசோக் நகரில் நான் சுமார் பதினைந்து வருடங்களாகக் குடியிருக்கும் வீட்டு ஓனர் ஓர் இஸ்லாமியர். அவரும் அவரது குடும்பத்தில் உள்ள அனைவருமே எங்களிடம் அன்பு கொண்டவர்கள். அவரது கடையில் வேலை செய்கிற பையன் பெயர் கண்ணன். அவனுக்குச் சொந்த ஊர் சென்னை இல்லை. கம்பமோ, தேனியோ! அடிக்கடி அவன் தன் முதலாளியிடம் கோபித்துக்கொண்டு இனி வரவே போவதில்லை என்று சொல்லிவிட்டு, ஊருக்குப் போய்விடுவான். ஆனால், சில மாதங்கள் கழித்து அவனாகவே வந்துவிடுவான். இவர்களும் மறுக்காமல் அவனை வேலைக்கு வைத்துக் கொள்வார்கள்.

ஒருமுறை, டிரைசைக்கிளில் அந்தப் பையன் கடை விஷயமாகப் போய்க்கொண்டு இருந்தபோது விபத்து ஏற்பட்டு, தகவல் தெரிந்ததும் கடை ஓனரின் பெரிய பையன் ஓடிப் போய்ப் பார்த்தார். மயங்கிக் கிடந்த அவனை ஆட்டோவில் போட்டுக்கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தார். பதினைந்து நாளுக்கு மேலாயிற்று அந்தப் பையன் டிஸ்சார்ஜ் ஆக. அதுவரைக்கும் அந்தப் பெரிய பையன்தான் கடைக்கும் ஆஸ்பத்திரிக்குமாக ஓடிக்கொண்டு இருந்தார்.

கண்ணன் உடம்பு பூரண குணமானதும், தான் இனி ஊருக்குப் போய் பெட்டிக் கடை வைத்துப் பிழைத்துக்கொள்ளப் போவதாகச் சொல்லிவிட்டுச் சென்றான். அவன் இனி நிஜமாகவே வரமாட்டான் என்றுதான் நான் நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால், அடுத்த ஏழெட்டு மாதத்தில் வந்துவிட்டான் - புதுப் பெண்டாட்டியோடு! அந்தப் பெண் அவர்கள் வீட்டில் வேலை செய்ய, அவன் பழையபடி கடையில் வேலை செய்துகொண்டு இருக்கிறான்.

அவனைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு, ‘எங்கிருந்தோ வந்தான் கண்ணன்...’ பாட்டுதான் ஞாபகத்துக்கு வரும்.

கே.கண்ணன்:
நான் முன்பு சங்கீதமங்கலம் என்கிற கிராமத்தில் வசித்தேன். அங்கே ஊர்க்கார நண்பர் ஒருவர் கண்ணன் என்ற பெயரில் எனக்கு உண்டு. ஏறக்குறைய என் வயதுதான் இருக்கும். மற்றபடி நான் அவரோடு சேர்ந்து படித்ததில்லை; வேலை செய்ததில்லை. ஒரே ஊர்க்காரர். அவ்வளவுதான். சேர்ந்து அரட்டை அடித்திருக்கிறோம். கடையில் டீ குடித்திருக்கிறோம். அருகில் உள்ள அனந்தபுரம் தியேட்டரில் (பனமலை குமரன் என்று அந்தத் தியேட்டருக்குப் பெயர்) சினிமா பார்த்திருக்கிறோம்.

எனக்கு முகங்களையும் பெயர்களையும் தொடர்புபடுத்தி நினைவுக்குக் கொண்டு வருவதில் பிரச்னை உண்டு. நன்கு பழகிய ஒருவரை முற்றிலும் வேறு ஒரு இடத்தில், வேறு ஒரு சூழ்நிலையில் பார்த்தால், அவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்குமே தவிர, யார் என்று சட்டென்று நினைவுக்கு வராது. இதனால் பல நண்பர்களின் கோபத்துக்கும் கடுப்புக்கும் ஆளாகியிருக்கிறேன்.

விழுப்புரத்தில் இருந்தபோது, ஒரு விபத்தில் எனக்குக் கை ஒடிந்துபோய்விட்டது. அதற்காக அம்மாவுடன் சென்று கடலூர் பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு, மாவுக் கட்டு போட்டுக்கொண்டு வந்தேன். மாதமொரு முறை போய், கட்டு மாற்றி வரவேண்டும். இப்படியாக எலும்பு ஒன்று கூடும் வரையில் இரண்டு மூன்று மாதம் தொடர்ந்து கடலூர் போய் வரவேண்டியிருந்தது.

அப்படி ஒரு முறை அம்மாவுடன் கடலூர் போய்விட்டுத் திரும்பி பஸ் ஸ்டாண்டு வரும் வழியில், எதிரே ஒருவர் எதிர்ப்பட்டார். “என்ன ரவி, என்ன ஆச்சு?” என்று விசாரித்தார். சொன்னேன். அவர் யார் என்று தெரியவில்லை.

“யாருடா இது?” என்று கேட்டார் அம்மா. “தெரியாது” என்று சொன்னால், அந்த நபர் மனம் புண்படப் போகிறாரே என்று, அம்மாவின் கேள்வி காதில் விழாதது போல் அந்த நண்பருடன் பேச்சுக்கொடுத்தேன். அவரைப் பற்றிய ஏதாவது குறிப்பு அவர் வாயிலிருந்தே வந்தால், அதை வைத்து அவர் யார் என்று கண்டுபிடித்துவிட முடியாதா என்ற நப்பாசை எனக்கு.

அவரோ, “அம்மா கேட்கறாங்க இல்லே, சொல்லு ரவி!” என்றார்.

அம்மா விடாமல், “யாருடா இது? உன் கூடப் படிக்கிற ஃப்ரெண்டா? இவரும் விழுப்புரமா?” என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுத் துளைத்தார்.

“போகும்போது சொல்றேம்மா!” என்று கடுப்பாகச் சொல்லிவிட்டு, அவரிடம், “ம்... அப்புறம்... எப்படி இருக்கீங்க? அங்கே எல்லாரும் சௌக்கியமா?” என்றேன்.

“முதல்ல அம்மா கேட்டதுக்கு நான் யாருன்னு சொல்லு ரவி!” என்றார் அவர் விடாப்பிடியாக. அம்மாவும் என் நிலைமையைப் புரிந்துகொள்ளாமல், ஆர்வம் மேலிட, “யார் ரவி இது? சொல்லேன்!” என்றார்.

தர்மசங்கடமான நிலையில், “தெரியவில்லை” என்று முனகலாகச் சொன்னேன். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. “இவ்வளவுதானா ரவி நீ ஃப்ரெண்ட்ஷிப்புக்குக் கொடுக்கிற மரியாதை!” என்றார் தாங்கமாட்டாமல்.

“நீங்கதான் சொல்லுங்களேன்” என்றார் அம்மா அவரிடம். “உங்க பையனுக்கே அப்புறம் ஞாபகம் வந்தா சொல்லச் சொல்லிக் கேட்டுக்குங்க” என்று கோபமாகச் சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டார்.

அப்புறம் ரொம்ப நாட்கள், நாட்களென்ன, மாதங்கள்... அவர் யாரென்ற கேள்வியே என் மனதில் சுற்றிச் சுழன்றுகொண்டு இருந்தது. ஊஹூம்... ஞாபகத்துக்கு வரவே இல்லை.

அதன் பிறகு, பல வருடங்கள் கழித்து நான் சென்னை வந்து செட்டிலான பிறகு, ஒரு நாள் பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்தபோது, சம்பந்தமே இல்லாமல் அவரைப் பற்றிய நினைவும், கூடவே சட்டென்று கடலூர் சம்பவமும் அடுத்தடுத்து ஞாபகத்துக்கு வந்து, ‘அடடா! அந்தக் கண்ணன்தானா அன்றைக்குக் கடலூரில் எதிர்ப்பட்டவர்!’ என்று ஆச்சரியப்பட்டுப் போனேன்.

எம்.கண்ணன்:
மாம்பலத்தில் என் அம்மாவுடைய சித்தி வீடு இருந்தது. அந்தச் சித்தப்பா பெயர் மார்க்கபந்து சாஸ்திரிகள். அவர் வீட்டில் தங்கியிருந்தபோதுதான், நண்பர் மார்க்கபந்து என்னை முதன்முதலில் தேடி வந்து பார்த்தார். இன்றளவும் குடும்ப நண்பராக இருக்கிறார்.

அந்த மார்க்கபந்து சித்தப்பா பையன் பெயர் கண்ணன். என்னை விட இரண்டு மூன்று வயது பெரியவராக இருப்பார். எனக்குத் தெரிந்து எங்கள் உறவினர்களில் காதல் திருமணம் செய்துகொண்ட ஒரே நபர் இந்தக் கண்ணன்தான். அவருடைய பெண்ணுக்குத் திருமணமாகி இன்றைக்கு அமெரிக்காவில் இருக்கிறாள்.

இந்தக் கண்ணன் படிப்பில் படு சூரப்புலி. அப்போதெல்லாம் சட் சட்டென்று ஒரு கம்பெனியிலிருந்து இன்னொரு கம்பெனிக்கு அதிக சம்பளத்துக்கு மாறிவிடுவார். இப்போது எந்த வேலையிலும் இல்லாமல், விருப்ப ஓய்வு பெற்று, சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு சுகமாகக் காலம் தள்ளி வருகிறார். பொழுதுபோகவேண்டுமே என்பதற்காக இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட்டாக இருக்கிறார்.

இயக்குநர் பாண்டியராஜன் இவரின் நண்பர். நான் சென்னை வந்த புதிதில், பாண்டியராஜனிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக என்னைச் சேர்த்துவிடுகிறேன் என்று சொல்லி, கடிதம் கொடுத்து, அப்போது சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோட்டிலிருந்த அவரது வீட்டுக்கு அனுப்பினார். நானும் போய்க் காத்திருந்தேன். பாண்டியராஜனின் முதல் படம் ‘கன்னி ராசி’ வெளியாகி, சக்கைப்போடு போட்டுக்கொண்டு இருந்த நேரம் அது. பாண்டியராஜனின் வீட்டு வாசலில் ஒரு மணி நேரம் காத்திருந்தேன். ஷூட்டிங் முடிந்து அவர் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று அவரின் மனைவி சொன்னார். காபி கொடுத்தார். குடித்தேன். பிறகு, ‘அப்புறம் வந்து பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஆனால், மறுபடியும் போகவே இல்லை. நான் முதலும் கடைசியுமாக ஏறிய டைரக்டர் வீட்டுப் படி, பாண்டியராஜனின் வீட்டுப் படிதான்! அதற்கு வழிவகை செய்தவர் என் மாமா முறையான கண்ணன்.

ன்னோடு பழகிய கண்ணன்களில் சட்டென்று என் நினைவுக்கு வந்தவர்களைப் பற்றி மட்டுமே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். இன்னும் சிலரும் இருக்கக்கூடும். மற்றபடி பாம்பே கண்ணன், யார் கண்ணன், ‘வேதம் புதிது’ கண்ணன், கவர்ச்சி வில்லன் கே.கண்ணன் பற்றியெல்லாம் இங்கு நான் குறிப்பிடவில்லை.

2 comments:

Under the sun எதை வேண்டுமானாலும் சுவாரசியமாக உங்களால் எழுதமுடியும் என்பதற்குக் கண்ணன்களே சாட்சி!
 
Xlent..

எல்லா கண்ணனும் அழகுதான்.