உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, July 09, 2009

சி.ஆர்.கண்ணன் - சில நினைவுகள்!

‘நானும் என் சாவி சகாக்களும்’ என்னும் தலைப்பில், சாவியில் என்னோடு பணியாற்றிய சீனியர்களையும் ஜூனியர்களையும் பற்றிய அறிமுகக் கட்டுரை ஒன்றை போன மாதம் எழுதியிருந்தேன்.

அதில், ‘அபர்ணா நாயுடு’ என்கிற சி.ஆர்.கண்ணன் பற்றித்தான் முதலாவதாகக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். அவர் இன்று காலை மரணமடைந்துவிட்டார் என்று எனக்குத் தொலைபேசித் தகவல் வந்தது.

கண்ணன் எப்போதுமே தூய வெள்ளை வேட்டியும் ஜிப்பாவும்தான் அணிவார். நடனம் பழகியவரா என்று தெரியவில்லை. ஆனால், அவரது பேச்சும் அங்க அசைவுகளும் நடன அபிநயங்கள் போலத்தான் இருக்கும். தன்மையாகப் பேசுவார். இனிமையாகப் பழகுவார்.

அவர் மீது எனக்குப் பெரும் மரியாதை உண்டு. ஆனால், நான் சாவி வார இதழில் பணியாற்றியபோது நடந்த சில சம்பவங்கள், சாவி சார் என் பொருட்டு திரு.கண்ணனிடம் கோபப்பட்ட நிகழ்வுகளாகவே அமைந்துவிட்டன. அவை என் மீது திரு.கண்ணனுக்கு மனக் கசப்பை ஏற்படுத்தியிருக்கலாம் - உண்மையில் அதற்கெல்லாம் நான் பொறுப்பு இல்லை என்றபோதிலும்!

அவரைப் பற்றி எண்ணும்போது, என் மனதில் எழக்கூடிய நினைவுகள் எதுவும் அவரைப் பெருமைப்படுத்துகிற விதமாக இல்லை. ஓர் அஞ்சலிக் கட்டுரையில் அவற்றை எழுதுவது நாகரிகம் இல்லைதான். என்றாலும், அவரின் மதிப்பைக் குறைக்காத விதமாக இங்கே இரண்டொன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

‘கேலி’ (galley) பார்ப்பது என்றொரு வழக்கம் அந்த நாளில் பத்திரிகை அலுவலகங்களில் உண்டு. அதாவது, கையால் அச்சுக்கோத்து, அதை வால் போன்ற நீளமான நியூஸ்ப்ரின்ட் தாளில் அச்சிட்டுத் தருவார்கள். அதை உதவி ஆசிரியர்கள், ஆசிரியர் எனப் பலரும் பலப்பல முறை திருத்தித் திருத்திக் கொடுக்க, ஒவ்வொரு முறையும் அச்சுக்கோப்பவர் அந்தத் திருத்தங்களைச் செய்து, புது கேலி எடுத்துக் கொடுப்பார். சாவி சாரின் தொடர்கதை, பதில்கள் பகுதி, தலையங்கம் அல்லது கட்டுரையைப் பொறுத்தவரை, கடைசி வரையில் அவரேதான் கேலி புரூஃப் பார்த்துத் தருவார். ஃபைனல் புரூஃபின்போதுதான் நாம் பார்த்து, அச்சுப் பிழை இருந்தால், அதை மட்டும் திருத்திக் கொடுக்க வேண்டும். அங்கே அதுதான் முறையாக இருந்தது.

நான் சாவியில் வேலைக்குச் சேர்ந்திருந்த புதிது. பத்து நாள் கூட ஆகியிருக்காது. சாவி சார் பார்ப்பதற்காக, அவர் பார்க்க வேண்டிய கேலி புரூஃப் ஒன்று நெல்சன் மாணிக்கம் ரோடிலிருந்த (அருண் ஹோட்டல் பின்புறம்) சாவி அச்சுக்கூடத்திலிருந்து வந்தது. மதிய நேரம். சாவி சார் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார். அதுவரையில் சும்மா இருப்பானேன் என்று, அந்த கேலி புரூஃபை நான் எடுத்து, எனக்குத் தோன்றிய திருத்தங்களைச் செய்து வைத்துவிட்டேன்.

இதை சி.ஆர்.கண்ணன் அவர்கள் பார்த்து, என்னைக் காச் மூச்சென்று திட்டத் தொடங்கிவிட்டார். “ஆசிரியர் பார்க்கிற புரூஃபில் கைவைப்பதாவது! உடனே நீயே சைக்கிளில் போய், வேறு ஒரு கேலி போட்டு வாங்கிக்கொண்டு வா! சீக்கிரம். சார் எழுந்திருப்பதற்குள் அவர் மேசையில் கிறுக்கல் இல்லாத புதிய கேலி இருக்க வேண்டும்” என்றார். அதன்படியே நான் அண்ணா நகரிலிருந்து அமிஞ்சிக்கரை வரை சைக்கிளில் போய், வேறு ஒரு கேலி போட்டு எடுத்து வந்தேன்.

நான் வருவதற்குள் சாவி சார் எழுந்து வந்து, நான் திருத்தி வைத்திருந்த புரூஃபைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார். கண்ணன் அருகில் சென்று, எனக்கு ஆதரவாக, “சார்! ரவி சின்னப் பையன். புதுசு! நீங்க பார்க்க வேண்டிய புரூஃபில் கை வைக்கக்கூடாதுன்னு தெரியலே! வேறு புரூஃப் வாங்கிக்கொண்டு வரச் சொல்லி, அவனை அனுப்பியிருக்கேன். இதோ வந்துடுவான். அதைப் பாருங்க!” என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால், என்னுடைய திருத்தங்கள் மிகச் சரியானதாக இருக்கவும், சாவி சார் வியந்து, என்னை வெயிலில் துரத்தியதற்காகவும், ஓர் இளம் உதவியாளனை ஊக்குவிக்கும் விதம் இதுதானா என்று கேட்டும் திரு. கண்ணனைக் கடுமையாகத் திட்டிவிட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல், அன்றிலிருந்து தான் பார்க்கவேண்டிய புரூஃப்கள் அனைத்தையும் என்னை முதலில் பார்த்துத் திருத்திக்கொடுத்து, அடுத்த புரூஃப் வாங்கி வைக்கும்படி சொல்லிவிட்டார். (என் புத்தகத் தொகுப்புக்காக எழுதித் தந்த அணிந்துரையில் இதை மறக்காமல் குறிப்பிட்டுள்ளார் சாவி சார்.) திரு. கண்ணன் என் மீது ஆரம்பத்திலேயே எரிச்சலும் கோபமும் கொள்ளும்படியான நிகழ்வாக ஆகிப்போனது இது.

சாவியின் சகோதர பத்திரிகையான ‘மோனா’, மாதமிருமுறை இதழாக அப்போது வந்துகொண்டிருந்தது. ரமணீயன் சாவி வார இதழைக் கவனித்துக் கொள்ள, சி.ஆர்.கண்ணன் மோனா இதழுக்குப் பொறுப்பேற்றிருந்தார். 15-ம் தேதி வெளியாகவேண்டிய பத்திரிகை, 20-ம் தேதிதான் ரெடியாகும். முதல் தேதி வர வேண்டிய பத்திரிகை நாலைந்து தேதிகளில்தான் தயாராகும். ஒவ்வொரு முறையும் சாவியிடம் இதற்காகத் திட்டு வாங்குவார் சி.ஆர்.கண்ணன்.

அப்படி ஒரு முறை 20 தேதி வாக்கில், மோனா இதழை சாவி சாரிடம் கண்ணன் கொண்டு வந்து கொடுத்தபோது, புத்தகத்தை வாங்கி விட்டெறிந்தார் சாவி. “நீங்க ஒரு தடவை கூட ஒழுங்கான தேதிக்குப் புத்தகம் கொண்டு வர்றதாய் இல்ல. பார்க்கறீங்களா, இந்தச் சின்ன பையனை வெச்சு நான் சரியான தேதியில மோனாவைக் கொண்டு வந்து காட்டட்டுமா?” என்று கத்திவிட்டு, அருகில் நின்றிருந்த என்னை அழைத்தார். நான் சாவியில் சேர்ந்து அப்போது கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியிருந்தது.

“ரவி, இனிமே மோனா உன் பொறுப்பு. என்ன செய்வியோ, ஏது செய்வியோ, யார் கிட்ட கதை வாங்குவியோ, எனக்குத் தெரியாது! வர ஒண்ணாம் தேதி அடுத்த இதழ் மோனா என் மேஜையில் இருக்கணும். போ!” என்று விரட்டிவிட்டார். தேதி 20.

எனக்குப் படபடப்பாகிவிட்டது. கை கால்கள் நடுங்கத் தொடங்கிவிட்டன. தனியாக ஒரு புத்தகத்தை ஏற்று நடத்தும் அளவுக்கு எனக்கு அனுபவம் கிடையாது. என்ன செய்வது என்று தெரியாமல் பதறிப்போனேன்.

(இதன் தொடர்ச்சியை எனது அடுத்த பதிவில் எழுதுகிறேன்.)

3 comments:

சாவி அலுவலகத்திற்கு வந்திருந்த போது திரு.பாச்சாவிடம் கண்ணன் என்னை அறிமுகப்படுத்தினார். பாச்சா ஆசிரியர் சாவியிடம் கூட்டிச் சென்றார். அந்த சமயம் நீங்கள் இதழ் பணியில் படு மும்முரமாய் ஈடுபட்டிருந்ததால் சற்று நேரம் காத்திருந்து பார்த்து விட்டது கிளம்பி விட்டேன். கண்ணன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

[சத்யராஜ்குமார்]
 
அண்ணாருக்கு எனது அஞ்சலிகள் :(
 
ரவி பிரகாஷ் சார்,

இதன் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.