உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, June 12, 2009

விகடனில் முதல் நாள்!

சாவியில் முதல் நாள் அனுபவம் சொன்னேன். விகடனில் முதல் நாள் அனுபவம் சொல்ல வேண்டாமா?

முன்பே நான் சொன்னது போல், நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொண்டு எனக்குப் பழக்கமில்லை. என்ன கேட்பார்கள், அதற்கு எப்படிப் பதில் சொல்ல வேண்டும் என்கிற எந்த ஐடியாவும் எனக்கு இல்லை.

சாவி பத்திரிகை நிறுத்தப்பட்டதும், ஆனந்த விகடனில் வேலைக்கு விண்ணப்பித்து ஒரு அரைப் பக்கத் தாளில் (ஃபுல்ஸ்கேப் பேப்பர்கூட இல்லை.) எழுதிப் போட்டேன். எந்த மேலதிக விவரமும் இல்லாமல், ‘சாவி பத்திரிகையில் பணியாற்றினேன். பத்திரிகை நிறுத்தப்பட்டுவிட்டது. தங்களிடம் வேலை இருந்தால், இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்’ என்று சிக்கனமாக இரண்டே வரிகளில் எழுதிப் போட்டேன்.

இதற்கிடையில், முன்பு குமுதம் எஸ்.ஏ.பி-யும் சுஜாதாவும் சொன்னதை மனதில் கொண்டு அங்கேயும் ஒரு அப்ளிகேஷன் தட்டிவிட்டேன். அதுவும் போதாதென்று ஓவியர் அரஸ் சிபாரிசின்பேரில் சுதேசமித்திரன் நாளேட்டில் (அப்போது சுதாங்கன் அதற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்தார்.) போய் வேலைக்கும் சேர்ந்துவிட்டேன். அந்தப் பத்திரிகை தொடர்ந்து வெளிவராது என்று அங்கு சேர்ந்த மூன்றாம் நாளே எனக்குத் தெரிந்துவிட்டது. வேலையிலிருந்து நின்றுவிட்டேன்.

குமுதத்திலிருந்து ஆசிரியர் சுஜாதாவிடமிருந்து அழைப்பு வந்தது. போனேன். ‘இங்கே சப்-எடிட்டர் வொர்க் மாதிரி தற்சமயம் எதுவும் இல்லை. கொஞ்ச நாள் ரிப்போர்ட்டரா இருங்க. சமயம் வந்ததும் சப்-எடிட்டராகலாம்’ என்றார். மறுத்துவிட்டு வந்துவிட்டேன்.

ஓவியர் அரஸ்ஸுக்கு போன் செய்து, நான் சுதேசமித்திரனிலிருந்து விலகிவிட்ட தகவலைச் சொன்னேன். “அதிருக்கட்டும்... விகடனுக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கீங்களா?” என்றார். “ஆமாம்” என்றேன். “உடனே வந்து இங்கே ராவ் சாரைப் பாருங்க” என்றார்.

அன்றைக்கே போனேன். ஓவியர் அரஸ் அனுப்பியதாகச் சொல்லி, ராவ் சாரைப் பார்க்க வேண்டும் என்றேன். அவர் வந்திருக்கவில்லை. காத்திருந்த நேரத்தில் வீயெஸ்வி சார் அழைப்பதாகத் தகவல் வந்தது. மேலே படியேறி, விகடன் எடிட்டோரியலுக்குப் போனேன். வீயெஸ்வி சாரின் தனியறைக்கு வழிநடத்தப்பட்டேன்.

நேர்முகத் தேர்வு மாதிரி இல்லாமல், சாவியில் நான் என்ன பண்ணிக்கொண்டு இருந்தேன், சாவி எப்படிப்பட்டவர் என்று பொதுவான கேள்விகளையே அவர் கேட்டார். நானும் யதார்த்தமாகப் பதில் சொல்லிக்கொண்டு இருந்தேன். இதற்குள் ராவ் சார் வந்துவிட, அவர் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார் வீயெஸ்வி.

ராவ் என்னைக் கேட்ட ஒரே கேள்வி... “அரஸ் உங்களுக்கு ரொம்ப ஃப்ரெண்டா?”

இதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குக் குழப்பமாக இருந்தது. ஃப்ரெண்டுதான் என்று சொன்னால், சிபாரிசுக்கு இங்கே இடமில்லை என்று சொல்லி மறுத்துவிடுவார்களா அல்லது அவர் இங்கே எனக்கு பலமாக சிபாரிசு செய்திருந்து, ‘ஃப்ரெண்டெல்லாம் இல்லை. தெரியும்’ என்று படாமல் சொல்லி வைக்கப்போக, அதனால் வாய்ப்பு நழுவிவிடுமா என்று குழப்பமாக இருந்தது. ‘இதைச் சொல்லலாமா, அதைச் சொல்லலாமா என்று குழப்பம் வந்தால், எது உண்மையோ அதைச் சொல்லிவிடுவதே மேல்’ என்று ஒரு பொன்மொழி உள்ளது. அதன்படி நான் செயல்பட்டு, “ஆமாம். நல்ல நண்பர்” என்று சொல்லிவிட்டேன்.

பின்னர், நாங்கள் மூவருமாய் ஆசிரியர் பாலசுப்பிரமணியனின் அறைக்குள் போனோம். சாவி சாரை முதன்முதல் பார்த்தபோது உண்டான அதே உதறல் இவர் முன்பும் எனக்கு இருந்தது. “அ... உக்காருங்கோ!” என்றார் எங்கள் மூவரையும்.

“அப்ளிகேஷன் பார்த்தேன். எங்க கிட்டேர்ந்து பதில் வரதுக்குள்ள குமுதத்துக்குப் போயிருக்கீங்க. சுதேசமித்திரன்ல சேர்ந்திருக்கீங்க. ஏன்?” என்றார் எடுத்த எடுப்பில் ஆசிரியர்.

“இங்கே நிச்சயம் வேலை கிடைக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்லை. நாலு இடத்துல கல் விட்டுப் பார்த்தா ஏதாவது ஒரு காய் விழாதாங்கிற நப்பாசைதான்! திடீர்னு சாவி பத்திரிகை மூடப்பட்டதும், நடுக்கடல்ல விழுந்து தத்தளிக்கிற மாதிரி ஓர் உணர்வு. அவசரத்துக்கு எந்தக் கட்டையாவது கிடைக்காதா பிடிச்சுக்கன்னு அலைபாய்ஞ்சேன். அதான்..!” என்றேன்.

“குமுதத்துல ஏன் சேரலை?” என்றார்.

“எனக்கு ரிப்போர்ட்டிங் வராது. தெரியாது. பிடிக்காது. சாவியிலும் நான் ரிப்போர்ட்டிங் பண்ணினதில்லை. டெஸ்க் வொர்க்தான். ஆனா, குமுதத்துலே என்னை ரிப்போர்ட்டரா இருக்கச் சொன்னாங்க. வேண்டாம்னு வந்துட்டேன்!”

“இங்கே ரிப்போர்ட்டர்ஸ் நிறையப் பேர் இருக்காங்க. பஞ்சமே இல்லை. டெஸ்க் வொர்க் பண்ணத்தான் ஆளில்லை. நீங்க சாவி கிட்டே எட்டு வருஷம் வேலை பார்த்திருக்கீங்க. அதை விடப் பெரிய தகுதி வேண்டியதில்லை. நீங்க இங்கே வேலை செய்யலாம். ஆனா, முதல்ல கான்ட்ராக்ட்லதான் வேலை செய்யணும். அதுதான் இங்கே முறை. கான்ட்ராக்ட்ல வேலை செய்யறப்போ உங்களுக்கு இங்கே திருப்தி இல்லேன்னா தாராளமா போயிடலாம். கான்ட்ராக்ட் முடிஞ்சு புரொபேஷன் தருவோம். அந்தச் சமயத்துலயும் உங்களுக்கோ எங்களுக்கோ பரஸ்பரம் திருப்தி இல்லேன்னா விலகிக்கலாம். அப்புறம்தான் பணி நிரந்தரமாகும். ஆனா, அதுக்குக் கொஞ்ச காலம் ஆகும். அதுக்குள்ளே உங்களுக்கு விகடனைப் பிடிக்கணும்; விகடனுக்கு உங்களைப் பிடிக்கணும். நீங்க நல்லா வேலை செய்வீங்க. அதுல எனக்குச் சந்தேகமில்லே. ஆனா, அங்கே நீங்க தனியாளா ஒரு பத்திரிகையைப் பார்த்து, சுதந்திரமா முடிவெடுத்து இருப்பீங்க. இங்கே அப்படியில்லே. உங்களுக்கு மேல பல சீனியர்ஸ் இருக்காங்க. அவங்களோடு இணைஞ்சு வேலை செய்ய வேண்டியிருக்கும். மத்தபடி, ஒண்ணாந்தேதிலேர்ந்து நீங்க இங்கே வந்து வேலை செய்யலாம். அன்னிக்கே உங்க அப்பாயின்ட்மென்ட் ஆர்டரையும் வாங்கிக்கலாம். பெஸ்ட் ஆஃப் லக்!” என்று கைகுலுக்கினார் ஆசிரியர்.

விடைபெற்று வெளியே வந்தேன். ராவ், வீயெஸ்வி ஆகியோரிடமும் விடைபெற்று வெளியேறி, வீட்டுக்கு வந்தேன். முதல் தேதிக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள்தான் இருந்தன.

முதல் தேதியன்று காலை... சுறுசுறுப்பாகக் கிளம்பி வேலைக்குப் போகும் ஜோருடன் விகடன் அலுவலகத்துக்குப் போனேன். ரிசப்ஷனிஸ்ட் பத்மினி, “யார் நீங்க? என்ன வேணும்?” என்று கேட்டார். “புதுசா ஜாயின் பண்ணியிருக்கிறேன்” என்றேன். “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று அங்கேயே சோபாவில் உட்கார வைத்துவிட்டார். பிறகு இன்டர்காமில் யாருடனோ பேசி, “மேலே போய் மதன் சாரைப் பாருங்க” என்றார். போனேன்.

ஆசிரியரின் அறையைப் போல் இரண்டு மடங்கு விசாலமாக இருந்தது அவரின் அறை. உள்ளே நுழையவே படபடப்பாக இருந்தது. அவரின் பி.ஏ. என்னை அழைத்துச் சென்று அவர் முன் நிறுத்திவிட்டுப் போய்விட்டார்.

மதன் என்னை இன்டர்வியூ செய்யத் தொடங்கினார். வழக்கமான கேள்விகள்தான். ஆனால், வேலை கேட்டு வந்தவன் நான் என்கிற பிரக்ஞையே இல்லாமல் நான்பாட்டுக்கு என் மனதில் தோன்றிய பதில்களைச் சொல்லி வைத்தேன். உதாரணத்துக்கு ஒரு கேள்வி: “கார்ட்டூன்களிலே உங்களுக்கு யாரோட கார்ட்டூன்ஸ் பிடிக்கும்?”

மதன் சார் கேட்டதும், “உங்க கார்ட்டூன்கள்தான்” என்று சொல்லியிருக்கக் கூடாதோ நான்? “எனக்கு மதிக்குமாரின் கார்ட்டூன்கள்தான் பிடிக்கும். சாவியில் அவர் போட்ட ஒவ்வொரு கார்ட்டூனும் அற்புதமானவை. இப்போது தினமணியில் வேலை செய்கிறார். அபாரமான சிந்தனையாளர். எப்படித்தான் அவர் மூளையில் இத்தனை கார்ட்டூன் ஐடியாக்கள் உதயமாகுதோன்னு நான் ஆச்சரியப்படுவேன்.” இப்படியா ஒருத்தன் பதில் சொல்வான்? நான் சொன்னேன்.

“உங்களுக்கு என்ன பத்திரிகை பிடிக்கும்?”

“சாவிதான்.”

“ஆனந்த விகடனில் எதை விரும்பிப் படிப்பீர்கள்?”

“ஆனந்த விகடனை நான் சமீப காலத்தில் படித்ததில்லை. இதன் பின் அட்டையில் த்ரீ-டி படங்கள் வெளியிடத் தொடங்கியதிலிருந்துதான் வாங்கவே ஆரம்பித்தேன். எனவே, இதில் நான் விரும்பிப் படிக்கும் பகுதி என்று தனியாக எதுவும் எனக்குச் சொல்லத் தெரியவில்லை.”

நேர்முகத் தேர்வு இப்படியாக என் அசட்டுத்தனத்துடன் நீண்டுகொண்டிருந்தது. முடிவில், “சரி, போயிட்டு வாங்க! லெட்டர் வரும்” என்றார் மதன்.

எனக்குக் குழப்பமாகிவிட்டது. இத்தனை நேரம் அவர் ஏதோ அறிமுகத்துக்காகத்தான் கேட்கிறார் என்று நினைத்தால், இதுதான் அசல் இன்டர்வியூவா?!

“சார்! நான் ஏற்கெனவே ஆசிரியரை வந்து பார்த்துப் பேசி, இன்னிலேர்ந்து வேலைக்கு வரலாம், அப்பாயின்ட்மென்ட் ஆர்டரையும் இன்னிக்கு வாங்கிக்கலாம்னு சொன்னாரே?” என்றேன்.

இப்போது மதன் சார் குழம்பிவிட்டார். “அப்படியா..! சரி, போய் வேலை செய்ங்க” என்று அனுப்பிவிட்டார்.

இப்படியாக விகடனில் என் பணி தொடங்கியது. ‘உங்களுக்கும் விகடனைப் பிடிக்கணும்; விகடனுக்கும் உங்களைப் பிடிக்கணும்’ என்றாரே ஆசிரியர்... அது நடந்தது. பரஸ்பரம் பிடித்துப்போக, கான்ட்ராக்ட், புரொபேஷன் என்ற நீட்டிப்புகள் எதுவுமின்றி, அடுத்த ஆறே மாதத்தில் விகடனில் என் பணி நிரந்தரமாக்கப்பட்டது.

4 comments:

மேன்மேலும் உயரவும் வாழ்த்துகள்.
 
எந்த நேர்முகத் தேர்வுகளையும் விட இது சிறப்பாக அமைந்திருக்கிறது.
ஆங்கிலத்தில் "Truth has got only one face" என்ற சொலவடை ஒன்று இருக்கிறது. அது மறுமுறையும் நிரூபணமாகியிருக்கிறது.
 
/
“சரி, போயிட்டு வாங்க! லெட்டர் வரும்” என்றார் மதன்.
/

professionals.
:))))))))))
 
மதன் இண்டர்வியூ மேட்டர் படிக்கும்போது எனக்கே திக்கென்றிருந்தது. உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? :-)