உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, June 09, 2009

சாவியில் முதல் நாள்!

வேலைக்கான நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொண்டு அதிகம் எனக்குப் பழக்கமில்லை.

குப்பை பொறுக்குவதில் தொடங்கி, பின்னர் வீடு வீடாகச் சென்று பழைய பேப்பர் வாங்குபவனாக மாறி, பழைய பேப்பர் கடைக்காரனாக ஒரு கடையில் உட்கார்ந்திருக்கப் பழகி, கிளார்க், டைப்பிஸ்ட், டைப்ரைட்டிங் இன்ஸ்ட்ரக்டர், டெப்போ இன்சார்ஜ் எனப் பல வேலைகளைச் செய்து, கடந்த 22 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணியாற்றிக்கொண்டு இருக்கிறேன். சாவியில் எட்டு வருடம் (இடையில் ஏழு மாத காலம் அமுதசுரபியில்), விகடனில் பதினான்கு வருடங்களுக்கும் மேலாக...

பத்திரிகை வேலைகளில் சேரும்போதுகூட எனக்கு சினிமாக்களிலும், கதைகளிலும் பார்த்த மாதிரியான நேர்முகத் தேர்வு வாய்க்கவில்லை.

சாவியில் முதல் நாள்:

ஆம்ப்ரோ பிஸ்கட் கம்பெனியின் சென்னைக் கிளையில் டெப்போ இன்சார்ஜாகப் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது, எழுத்தாளர் புஷ்பாதங்கதுரை அவர்களிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது, தன்னை உடனே வந்து பார்க்கச் சொல்லி! போனேன். அவர் உடனடியாக என்னைப் பத்திரிகையாளர் சாவியைப் போய்ப் பார்க்கச் சொன்னார். உடனே வேலையில் சேர்ந்துகொள்ளலாம் என்றார்.

அன்றைக்கே சாவி அலுவலகம் போனேன். அப்போது சாவி இல்லம் தனியாகவும், அலுவலகம் அண்ணா நகர் தபால்-தந்தி அலுவலகத்துக்கு அருகிலும் இருந்தன. நான் போயிருந்த நேரத்தில் அலுவலகத்தில் சாவியின் மூத்த மகன் ‘பாச்சா’ என்கிற பாலசந்திரன்தான் இருந்தார். சாவி சார் இல்லை.

பாச்சாவிடம் சென்று புஷ்பாதங்கதுரை அனுப்பியதாகச் சொல்லி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். ‘அப்படியா! அதான் உங்க ஸீட்! மத்தியானம் அப்பா வந்துடுவார். மத்த விவரங்களை அவர் கிட்டே பேசிக்கோங்க’ என்றார். அதாவது, நேர்முகத் தேர்வு நடப்பதற்கு முன்பே எனக்கான ஸீட் தயாராகிவிட்டது.

மதியம் சாவி சார் வரும்வரையில் எனக்கான ஸீட்டில் வெட்டியாக உட்கார்ந்திருந்தேன். சாவி சிங்கம் மாதிரி உள்ளே நுழைந்தார். அனைவரும் அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக உட்கார்ந்து தங்கள் வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருக்க, நான் படபடக்கும் நெஞ்சோடு எழுந்துகொண்டேன்.

சாவி சார் நேரே தன் அறைக்குச் சென்றார். பின்னாலேயே பாச்சாவும் சென்றார். சிறிது நேரத்தில் வெளியே வந்து, “சார் கூப்பிடறார், போங்க!” என்றார் என்னிடம். கொஞ்சம் கைகால்கள் உதறலெடுக்க, மெதுவாக அடி மேல் அடி வைத்து அவர் எதிரில் போய் நின்றேன்.

“நீதான் ரவிபிரகாஷா? உட்காரு, ஏன் நிக்கிறே!” என்றார். சடக்கென உட்கார்ந்தேன்.

“புஷ்பாதங்கதுரை சொன்னாரு. ம்... நீ சொல்லு!” என்றார்.

“சார், நான் ஆனந்த விகடன், தினமணி கதிர், கல்கி, குங்குமம் எல்லாத்துலயும் கதைகள் எழுதியிருக்கேன். சாவியில கூட என்னோட கதை ஒண்ணு வந்திருக்கு. பத்திரிகையில வேலை செய்யணும்கிறது என் ஆசை...” என்றபடி என் கதைகள் பிரசுரமாகியிருந்த இதழ்களை எல்.ஜி.பெருங்காய விளம்பரம் அச்சிட்ட துணிப்பையிலிருந்து வெளியே எடுத்து, மேஜையில் அவர் முன் வைத்தேன்.

சாவி சார் அதைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. “இதெல்லாம் எனக்கு வேண்டாம். எடுத்து உள்ளே வெச்சுக்கோ. யார்தான் கதை எழுதலே? வீட்டுக்கு ஒரு பொம்மனாட்டி கதை எழுதறா! அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை” என்றார். எனக்குப் பொசுக்கென்று போய்விட்டது. நான் ஏதோ சிறுகதை எழுதுவதையே பெரிய தகுதியாக நினைத்துக்கொண்டு வர, அவர் இப்படிச் சொன்னது எனக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது. பின்னாளில் எனக்குக் கதை எழுதும் ஆசை விட்டுப் போனதற்கும், என்னையறியாமல் அதுதான் காரணமாக அமைந்திருக்க வேண்டும்.

“பத்திரிகையில வேலை செய்யணும்கிற ஆசை உனக்கு இருக்கில்லே... அது போதும்! அதுதான் எனக்கு முக்கியம்.”

“சார், ஆனா கதை எழுதறது தவிர பத்திரிகை வேலை எதுவும் எனக்குத் தெரியாதே!” என்று தயங்கினேன்.

“பொறக்கும்போதே பத்திரிகை வேலை கத்துக்கிட்டா பொறக்கிறாங்க எல்லாரும்? கத்துக்கறதுதான். ஆசை இருக்கோல்லியோ, நீ இங்கே தாராளமா கத்துக்கலாம். பத்திரிகையாளனா ஆகறது ஒண்ணும் பிரம்ம வித்தையில்லை!”

“சார், எனக்கு இங்கிலீஷ் தெரியாது...”

“எனக்கு மட்டும் தெரியுமா? இங்கிலீஷ்ங்கிறது ஒரு லேங்வேஜ்யா! அது ஒரு முக்கியமில்லே! தவிர, நானென்ன இங்கிலீஷ் பத்திரிகையா நடத்தறேன்?”

சாவி சார் இப்படிச் சொன்னாலும், அவர் தம் நண்பர்களான டி.டி.வாசு, பாண்ட்ஸ் அதிபர் எனப் பலரிடம் ஆங்கிலத்தில் பேசுவதை நான் கண்டிருக்கிறேன்.

“ஆர்வம்தான் முக்கியம். பத்திரிகைக்காரனாக ஆசைப்படறவன் வாட்ச் கட்டக்கூடாது. சம்பளம் கொடுப்பேன். ஆனா நீ அதுக்காக வேலை செய்யக்கூடாது. பத்திரிகைக்காகச் செய்யணும். செய்வியா?”

“செய்வேன் சார்!”

“சரி, முதல்ல புரூஃப் பார்க்கக் கத்துக்கோ! சாந்தா நாராயணன்னு ஒரு அம்மா... பிரமாண்டமா, அற்புதமா கோலம் போடுவாங்க. ஆனா, அவங்களும் ஒவ்வொரு புள்ளியா வெச்ச பிறகுதான், அதைக் கோடுகளால் சேர்த்துக் கோலம் போட ஆரம்பிப்பாங்க. புள்ளி வைக்கிறது ஒண்ணும் சுலபமில்லே. கை பழகணும். பத்திரிகையில புரூஃப் பார்க்கிறது புள்ளி வைக்கக் கத்துக்கிற மாதிரி! கத்துக்கோ. ஆசை இருந்தா உனக்கு வரும்!”

அன்பாக, ஆசையாக, அக்கறையாக, பொறுமையாக, கோபமாக, கண்டிப்பாக (ஆனால் ஒருபோதும் எரிச்சலாக, வெறுப்பாக, அசிரத்தையாக இல்லை) ஒவ்வொன்றையும் கற்றுக்கொடுத்த அந்தப் பத்திரிகையுலக ஜாம்பவானை இப்போது மனதுக்குள் நினைத்துக்கொள்கிறபோதும் கண்கள் கலங்குகின்றன எனக்கு.

3 comments:

நேர்முகத்தேர்வை விட நூறு மடங்கு உயர்வான தேர்வு!
 
சிறப்பான இடம். மிகச்சிறந்த மனிதர்.

எல்.ஜி.பெருங்காய விளம்பரம் அச்சிட்ட துணிப்பையிலிருந்து வெளியே எடுத்து, மேஜையில் அவர் முன் வைத்தேன்.//// ரசித்தேன்.

பத்திரிகைக்காரனாக ஆசைப்படறவன் வாட்ச் கட்டக்கூடாது. //// அனுபவம் ... லட்ச ரூபாய் சம்பளம் கிடைத்தாலும் இது போன்ற மாமனிதரின் அனுபவங்களும் அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைக்குமா...

அருமையான பதிவு.
 
* பாராட்டுக்கு நன்றி லதானந்த்ஜி!

* பொதுவாக காஞ்சிப் பெரியவர் போன்ற பெரிய மகான்கள்தான் பெரியவரையும் சிறியவரையும் ஒரே தளத்தில் வைத்து மதிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், சாவி சார் கூட அப்படித்தான் நடந்துகொண்டார் என்பதை நான் அனுபவபூர்வமாகக் கண்டேன். அவற்றைப் பற்றியும் பின்னர் எழுதுவேன். தங்கள் பாராட்டுக்கு நன்றி!