உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, June 01, 2009

நானும் என் சாவி சகாக்களும்!

சாவியில் நான் சேர்ந்தபோது, மும்மூர்த்திகளாக அங்கே இருந்தவர்கள் சி.ஆர்.கண்ணன், ரமணீயன் மற்றும் சத்தீஷ் கே. வைத்தியநாதன்.

இவர்கள் மூவருமே வெவ்வேறு காரணங்களுக்காக, நான் அங்கே சேர்ந்த இரண்டு வருடத்துக்குள் வேலையை விட்டுச் சென்றுவிட்டார்கள்.

சி.ஆர்.கண்ணன்: அந்தக் காலத்தில் தினமணி கதிரில் ‘அபர்ணா நாயுடு’ என்ற புனைபெயரில் நிறையக் கதைகள் எழுதிப் பிரபலமானவர். வழக்கம்போல் அவருக்கு இந்தப் புனைபெயரை வைத்தவர் சாவி சார்தான். அவரின் கதை ஒன்று ரொம்ப காலமாக படமாக எடுக்கப்பட்டு, கமலஹாசன், காஞ்சனா, ஸ்ரீப்ரியா நடிக்க ‘பகடை பன்னிரண்டு’ என்ற பெயரில் திரைப்படமாக 1982-ல் வெளியாயிற்று. அதில், காஞ்சனா கலெக்டர் வேடத்தில் வருவார். காஞ்சனா நடித்த கடைசி படம் அதுதானென்று நினைக்கிறேன். படம் நீண்ட காலமாக எடுக்கப்பட்டு வந்ததாலேயோ என்னவோ, கமலஹாசனும் ஸ்ரீப்ரியாவும் ஒரு காட்சியில் குச்சி குச்சியாகத் தோன்றுவார்கள். அடுத்த காட்சியிலேயே புஸ்க் புஸ்க்கென்று இருப்பார்கள். படம் முழுக்க இந்த விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கும். படம் ஃப்ளாப்! சாவி சார் கோபப்பட்டுத் திட்டி, இவரை டிஸ்மிஸ் செய்துவிட்டார்.

ரமணீயன்: மெகா சீரியல் கலாசாரத்தைத் தொடங்கி வைத்தவரே இவர்தான். இவரது சிறுகதைகள் படிக்க வெகு சுவாரசியமாக இருக்கும். ஜாலியான மனிதர். அதுவரை ‘ந.இரவிப்பிரகாஷ்’ என்றிருந்த என்னை ரவிபிரகாஷ் என்று சிக்கென்று மாற்றியது இவர்தான். பொதிகை டி.வி-யில் வந்த ‘விழுதுகள்’ சீரியல்தான் முதல் மெகா சீரியல். அதைக் கதை வசனம் எழுதித் தயாரித்தவர் ரமணீயன்தான். ரமணீயனும் டைரக்டர் வசந்தும் (அன்று இயக்குநர் கே.பாலசந்தரின் அசிஸ்டெண்ட்) நெருங்கிய நண்பர்கள். அடிக்கடி ஒன்றாகவே எங்கும் போவார்கள்; வருவார்கள். பாலசந்தர் சாவி இதழில் எழுதிவந்த ‘பின்குறிப்பு’ என்ற தலைப்பிலான கட்டுரையை வசந்துதான் ஒவ்வொரு வாரமும் சாவி அலுவலகத்துக்கு நேரில் கொண்டு வந்து தருவார். பத்திரிகை வேலை பார்க்காமல் அடிக்கடி டி.வி., சீரியல் வேலை என்று ஓடிவிடுகிறார் என்று ரமணீயனை நிறுத்திவிட்டார் சாவி.

சத்தீஷ் கே.வைத்தியநாதன்: இப்போது தினமணி நாளேட்டின் ஆசிரியராக இருக்கிறார். ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, சஞ்சய் காந்தி, மேனகா காந்தி மற்றும் வட இந்திய வி.ஐ.பி-க்கள் பலரோடு இவருக்கு நல்ல பழக்கமுண்டு. கமல்ஹாசனின் ஆரம்ப கால நண்பர். நாலைந்து சினிமாவில் தலை காட்டியிருக்கிறார். கேரளாவைச் சேர்ந்தவர். சாவியில் அரசியல், சினிமா இரண்டையும் இவர்தான் எழுதி வந்தார். மேனகா காந்தியின் ‘சூர்யா’ பத்திரிகையில் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. ‘நியூஸ்க்ரைப்’ என்ற பெயரில் பல பத்திரிகைகளுக்குச் செய்திகளும் கட்டுரைகளும் வழங்கி, ‘நியூஸ்க்ரைப்’ வைத்தியநாதன் ஆனார். துக்ளக்கில் இவரது கட்டுரைகள் நிறைய வந்துள்ளன. இவரைப் பற்றி நான் கேள்விப்பட்ட ஒரு செய்தி... நிஜமா, பொய்யா என்று தெரியாது - இவர் வாங்கிப் படித்துச் சேர்த்து வைத்த பழைய ஆங்கில, தமிழ் நாளேடுகள் மற்றும் பத்திரிகைகள் இவற்றைப் பல ஆண்டுகள் கழித்து மொத்தமாகப் பழைய பேப்பர் கடைக்குப் போட்டு, வந்த காசில் இவர் ஒரு புத்தம்புது மோட்டார் பைக் வாங்கிவிட்டார் என்பது. அப்போதெல்லாம் நான் சாவி சாரிடம் சுருக் சுருக்கென்று கோபித்துக்கொண்டு வேலையும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று கிளம்பும்போதெல்லாம், ‘யோவ்... இருய்யா! அவர் எவ்வளோ பெரிய ஆளு! அவர் கிட்டே வேலை செய்யறது எவ்வளவு பெரிய பெருமைன்னு தெரியுமா உனக்கு! போகாதே, இரு’ என்று தடுத்திருக்கிறார். இல்லையெனில், மூன்று தடவை என்ன, 30 தடவைகளுக்கு மேல் நான் சாவி சாரிடம் கோபித்துக்கொண்டு வெளியே போயிருப்பேன். இவரும் சாவியின் கோபத்தின் காரணமாகவே சாவி பத்திரிகையை விட்டு விலகினார்.

மூவரும் சென்ற பின்னர், சாவியில் என் ஆட்சிதான்! எனக்கு உறுதுணையாக இருக்க உதவியாளர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படி சாவி ஒரு யோசனை சொன்னார். அதன்படி, சாவியில் ஜர்னலிசம் பழக விருப்பம் உள்ளவர்கள் (விகடன் மாணவர் திட்டம் போல்) தங்கள் படைப்பு ஒன்றையும், போட்டோ, பயோடேட்டாவையும் இணைத்து அனுப்பச் சொல்லி சாவியில் அறிவிப்பு வெளியிட்டேன். ஆயிரக்கணக்கில் வந்து குவிந்த விண்ணப்பங்களில் நானே எட்டு பேரைத் தேர்ந்தெடுத்தேன். இருவர் ஆண்கள்; ஆறு பேர் பெண்கள். அவர்கள் வருமாறு...

அப்பாஸ் மந்திரி: சுஜாதாவை இமிடேட் செய்து நிறையப் பேர் கதை எழுதிப் பார்த்திருக்கிறோம். இவர் புஷ்பா தங்கதுரையை அப்படியே இமிடேட் செய்து எழுதுவார். புஷ்பா தங்கதுரை டயலாக்குகளுக்கு முன்னும் பின்னும் மேற்கோள் குறிகள் இடமாட்டார். வெறுமே ஹைஃபன் போட்டு எழுதுவார். அப்பாஸ் மந்திரியும் அதைக் கடைப்பிடித்தார். நன்றாக எழுதுவார். ‘கொலை செய்வது எப்படி?’ என்ற தலைப்பில் கூட ஒரு மாத நாவல் எழுதியிருக்கிறார். சமீபத்தில் எனக்கு ஒரு நாள் போன் செய்து, “விகடனுக்கு ஒரு அப்ளிகேஷன் போட்டிருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் பணி செய்ய விருப்பம்” என்றார். மேலிடம் அது பற்றி எனக்கு ஒன்றும் தகவல் தெரிவிக்கவில்லை.

ஜெ.குமணன்: கோயமுத்தூர்க்காரர். அங்கே ‘ஜனரஞ்சனி’ என்ற பத்திரிகையில் வேலை செய்துகொண்டிருந்துவிட்டு சாவி விளம்பரம் பார்த்து வந்து என்னிடம் உதவியாளராகச் சேர்ந்தார். இப்போது எங்கே, என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.

அனுராதா சேகர்: இயல்பாக எழுதக்கூடியவர். பந்தா இல்லாத எளிமை. இப்போது ‘மங்கையர் மலர்’ பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருக்கிறார். சாவி இதழுக்கு வரும் சிறுகதைகளை இவரும் மற்றவர்களும் முதல் கட்டமாகப் படித்துப் பரிசீலித்து என்னிடம் தருவார்கள். அப்படித் தந்த ஒரு கதை மைசூர் பக்கமிருந்து வந்திருந்தது. மிக நன்றாக இருந்தது. ஆனால், அனுராதா சேகரிடம் நான் கேட்டேன், “இது நீங்க எழுதிய கதையா?” என்று. “இல்லவே இல்லை. தபாலில் வந்தது. மத்தவங்களை வேணா கேட்டுப் பாருங்க” என்று மைசூர் அட்ரஸைப் பார்த்துக் கதாசிரியையின் பெயர் சொன்னார். தான் எழுதவே இல்லை என்று சாதித்தார். “ஆனால், எனக்கென்னவோ இது நீங்க எழுதின கதை மாதிரிதான் தெரியுது” என்றேன். கதை சாவியில் வெளியாகி, அடுத்த வாரம் வந்து அவர் என்னிடம், “ஆமாம். நாந்தான் எழுதினேன். எப்படிக் கண்டுபிடிச்சீங்க?” என்று உண்மையை ஒப்புக் கொண்டார். “நானென்ன துப்பா கண்டுபிடிக்கிறேன்? எழுத்து நடை உங்க போல இருந்தது. சொன்னேன்” என்றேன். அவர் எழுதிய கதைகளையெல்லாம் நான் சாவியில் உடனே வெளியிட்டுவிடுகிறேன், மற்றவர்கள் எழுதிய கதைகள் பலவற்றை ரிஜெக்ட் செய்துவிடுகிறேன் என்று அவர்களுக்குள் உள்காய்ச்சல் வந்திருக்கிறது. எனவேதான், தானே கதையை நேரடியாகக் கொடுக்காமல் மைசூரிலிருக்கும் தன் உறவினரை விட்டு காப்பி எடுக்கச் சொல்லி, அங்கேயே போஸ்ட் செய்யச் சொன்னாராம். எப்படியிருக்கிறது கதை?

ஜி.தமயந்தி: சாவியிலிருந்து விலகிய பின், ‘குங்குமம்’ வார இதழின் சகோதரி பத்திரிகையான ‘சுமங்கலி’ பத்திரிகையில் சில காலம் பணியாற்றியிருக்கிறார். இவரும் நன்றாக எழுதக்கூடியவர். ஆனால், குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளும்பொருட்டு அதிகம் எழுதுவதைத் தவிர்த்து விட்டார். எப்போதாவது திடீரென்று நினைத்துக்கொண்டால் போனில் தொடர்பு கொண்டு அனைவரின் நலனையும் விசாரிப்பார். ஆனந்தவிகடனுக்குக் கதை எழுதி இதோ அனுப்பி வைக்கிறேன் என்பார்.

ஹேமா: உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்ட்டாக வேலை பார்த்துக்கொண்டே பார்ட் டைம் ஜாபாக சாவியில் வந்து ஜர்னலிசம் பயின்றவர் இவர். ரிசப்ஷனிஸ்ட் என்பதால், நல்ல அழகாகவே இருப்பார். தடயவியல் நிபுணர் சந்திரசேகரை பேட்டி கண்டு, வாரம் ஒரு தடயவியல் க்ரைம் கதையை சாவியில் எழுதி வந்தார்.

லோகநாயகி: இப்போது குமுதம் சிநேகிதியின் ஆசிரியராக இருக்கிறார். நான் விகடனுக்கு வருவதற்கு முன்பே இவர் சாவியிலிருந்து விலகி, விகடனில் சேர்ந்துவிட்டார். பரபரப்பாக எதையாவது செய்யவேண்டும் என்று துடிப்பு இவரிடம் எப்போதுமே உண்டு. நன்றாக எழுதக்கூடியவர். கவிதைகளும் எழுதுவார். சாவியில் சேர்ந்த புதிதில் டிப்பிகல் கிராமத்துப் பெண்மணியாக இருந்தார். இப்போது அல்ட்ரா மாடர்ன்!

சியாமா: என்னிடம் உதவியாளர்களாகச் சேர்ந்தவர்களில் இவர்தான் மூத்தவர். ஆனால், தன் வயது தெரியக்கூடாது என்பது போல் நடந்து கொள்வார். சாவியை விட்டுச் சென்ற பின் பாக்கெட் நாவல் ஜி.அசோகனிடம் சில காலம் பணியாற்றினார். பின்னர், சிவசங்கரியின் ‘அக்னி’ அமைப்பில் சேர்ந்து, சிசுக் கொலைகள் போன்ற சில ஆய்வுகள் செய்துகொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். “சாவி சார் பற்றி இவர் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறாராம். அதற்கு சாவி சாரைப் பற்றிய என்னுடைய அனுபவங்களையும் சொல்லச் சொன்னார். சொன்னேன். உங்களைக் கேட்டாரா?” என்று அனுராதா சேகர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் என்னைக் கேட்டார். சியாமா கேட்கவில்லை.

சு.தாமரை: இன்றைய பிரபல பாடலாசிரியை தாமரையேதான்! வலுவான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர். கோயமுத்தூரிலிருந்து இங்கே வந்து தங்கி வேலை செய்ய முடியாது என்பதால், தான் அங்கிருந்தபடியே மேட்டர்கள் செய்து அனுப்புவதாகச் சொன்னார். கதைகளைப் பிரசுரிக்கும்போது வெறுமே தாமரை என்று போடுங்கள். சு இனிஷியல் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இவர் ‘நேற்றைய மிச்சங்கள்’ என்ற தலைப்பில் ஒரு தொடர்கதை எழுதி அனுப்பியிருந்தார். மிக நன்றாகவே எழுதப்பட்டிருந்த கதை அது. தலைப்பும் நல்ல தலைப்புதான். ஆனால், சாமானிய வாசகனுக்குப் புரிபடாத ஓர் இலக்கியத் தலைப்பு மாதிரி இருந்ததால், ‘தேவி’ என்று சுருக்கமாகத் தலைப்பிட்டு, அடுத்த வாரத்திலிருந்து வெளியிடுவதாக அவருக்குத் தகவல் அனுப்பியிருந்தேன். பதறிக்கொண்டு, ‘தலைப்பை மாற்றாதீர்கள், ப்ளீஸ்!’ என்று தந்தியடித்தார். ‘நேற்றைய மிச்சங்கள்’ என்ற தலைப்பிலேயே அந்தத் தொடர்கதையை வெளியிட்டேன்.

அடுத்ததாக, சாவியில் நடந்த விபரீதம் என்ன என்பது பற்றிப் பார்ப்போம்.

3 comments:

விறுவிறுப்பாக இருந்தது
 
its nice, what about maalan, subramanya raaju, bala kumaaran, They were there before u or after u.
 
நிறைய தகவல்களுடன் விறு விறுப்புக்கும் குறைவில்லை..

தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.