உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, May 31, 2009

அரவணைத்தார் அன்னை!

கிட்டத்தட்ட நடுத்தெருவில் நான் அப்போது நின்றுகொண்டு இருந்தேன். வசமாக ஏமாற்றப்பட்ட துக்கம் ஒருபுறம்; என்னதான் அமுதசுரபியின் கதவுகள் எனக்காகத் திறந்திருக்கும் என்று விக்கிரமன் அவர்கள் சொன்னாலும், திரும்ப மறுநாளே அவர் முன் எந்த முகத்தோடு போய் நிற்பது என்கிற கழிவிரக்கம் ஒருபுறம்...

அன்னையிடம் பிரார்த்தித்துக்கொண்டேனே தவிர, அவர் என் பிரார்த்தனையை நிறைவேற்றித் தருவார் என்கிற நம்பிக்கை எனக்கு அப்போது கடுகளவும் இல்லை. அடுத்து என்ன செய்வதென்றும் தெரியவில்லை. ’வேலை இல்லை’ என்று வெட்டியாக வீடு திரும்பவும் கொஞ்சம் கூச்சமாக இருந்தது.

என் பழைய நண்பர்களைப் போய் ஒரு நடை பார்த்துவிட்டு வரலாமென்று சாவி அலுவலகம் போனேன். அவர் முகத்தில் விழிக்க எனக்கு பயமாக இருந்தது. அவர் வீடு மாடியில். கீழே சாவி அலுவலகம். அதனால், நண்பர்களை மட்டும் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்பது எண்ணம்.

போனேன். நண்பர்கள் என்னை வரவேற்று அன்போடு பேசிக்கொண்டு இருந்தார்கள். ஆசிரியரைப் பார்க்கிறீர்களா என்று கேட்டார்கள். ‘ஐயோ, வேண்டாம்!’ என்று பதறினேன். ஆனால், நான் வந்திருப்பதை வாட்ச்மேன் சித்திரை என்பவர் மேலே மாடிக்குப் போனபோது, அவராகவே ஆசிரியர் சாவியிடம் சொல்லிவிட்டிருக்கிறார்.

சற்று நேரத்தில், ஆசிரியர் சாவி என்னை அழைப்பதாக சித்திரை வந்து கூப்பிட்டார். ‘அடடா! ஏங்க நான் வந்ததை அவர்கிட்டே சொன்னீங்க’ என்று நெளிந்தேன். சார் கூப்பிட்டு அனுப்பிய பின், பார்க்காமல் போவது மரியாதையாகாதே! எனவே, திக்திக்கென்று நெஞ்சு துடிக்க மாடி ஏறிப் போனேன்.

முன்பு, அவரிடமிருந்து பிரியும்போது நேரில் கூடச் சொல்லிக்கொள்ளவில்லை; கோபத்தில் சற்றுக் கடுமையாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு நான்பாட்டுக்குக் கிளம்பிப் போய்விட்டிருந்தேன். அவரோ மகா கோபக்காரர். ஏதாவது திட்டினால், கம்மென்று வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியதுதான் என்று நினைத்தபடியே, மெதுவாக பூனைப்பாதம் வைத்து நடந்துபோய் அவர் முன் நின்றேன்.

சார் தலைகுனிந்து ஹிந்து படிப்பதில் மூழ்கியிருந்தார். நான் உதறலோடு அவர் முன் நின்றுகொண்டு இருந்தேன். ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாகக் கழிந்தது எனக்கு.

பின்னர், அவர் பேப்பரை வைத்துவிட்டு நிமிர்ந்தார். என்னைப் பார்த்ததும் சட்டென்று முகத்தில் பிரகாசத்தோடு, “அடடே! வா, ரவி! டீ... (தன் மனைவியை) யாரு வந்திருக்கான்னு பாரு!” என்று உள் நோக்கிக் குரல் கொடுத்தார். மாமி உள்ளிருந்து வந்தபடியே, “வா, ரவி” என்று அன்புடன் வரவேற்றார். “இரு, காபி கொண்டு வரேன்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் உள்ளே போய்விட்டார்.

சாவி சார் அடுத்து என்ன கேட்கப் போகிறார் என்று காத்திருந்தேன்.

காபி வந்தது. “சாப்பிடு” என்றார். இருவரும் காபி பருகினோம்.

பின்பு, “வா, கீழே போகலாம்!” என்று அழைத்துப் போனார் சாவி. அலுவலகத்துக்குள் சென்றோம்.

“நாளை நான் அமெரிக்கா கிளம்பறேனே, பத்திரிகையை யார் கிட்டே பொறுப்பா விட்டுட்டுப் போறதுன்னு கவலைப்பட்டுக்கிட்டிருந்தேன். ரவி வந்துட்டான். இனி எனக்குக் கவலையில்லே! இனிமே, இவன் பார்த்துப்பான்” என்று மற்ற உதவியாளர்களுக்கும், லே-அவுட் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கும் என்னை அறிமுகப்படுத்தினார். அவர்களும் என் வரவால் உற்சாகம் அடைந்ததை அவர்களின் பூரிப்பான முகம் காட்டியது.

மேனேஜர் துரையை அழைத்தார் சாவி. “துரை, ரவி இனி நம்மோடுதான் இருக்கப் போறான். 1,500 ரூபாய் சம்பளம். அட்வான்ஸ் ஏதாவது வேணும்னா கேட்டுக் கொடு” என்றவர் சிறிது நேரம் சகஜமாகப் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, “வா, மாடிக்குப் போகலாம்!” என்றார்.

மேரி பின்னால் ஆட்டுக்குட்டி மாதிரி அவரைப் பின்தொடர்ந்தேன்.

சோபாவில் அமர்ந்தவர், பக்கத்தில் இருந்த சிறு குறிப்பு நோட்டை எடுத்தார். என்னவோ எழுதி, “இதை இந்த வாரமே நம்ம பத்திரிகையில் சேர்த்துடு!” என்றார். என்னவென்று வாங்கிப் பார்த்தேன். ‘பொறுப்பாசிரியர்: ரவிபிரகாஷ்’ என்று எழுதியிருந்தார்.

உடம்பெல்லாம் சிலீரென்றாகிவிட்டது எனக்கு. ஜன்னி வந்தது போல் கிடுகிடுவென்று நடுங்கத் தொடங்கிவிட்டது. அதற்கு இரண்டு காரணங்கள்.

1. அவரிடம் வேலை வேண்டும் என்று நான் கேட்கவில்லை; அந்த எண்ணமே எனக்குச் சுத்தமாக இல்லை. காரணம், கேட்டாலும் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அந்த அளவுக்கு அவரிடம் நான் கடுமையாகக் கோபித்துக்கொண்டு வெளியேறியிருந்தேன். (அது என்ன சம்பவம் என்று பிறகு ஒருமுறை சொல்கிறேன்.) அப்படியிருக்க, என்ன செய்கிறேன், எதற்காக வந்திருக்கிறேன் என்று அவர் என்னை எதுவுமே கேட்காமல், அவராகவே வேலை கொடுத்ததோடு, சரியாக 1,500 ரூபாய் சம்பளம், பொறுப்பாசிரியர் பதவி என்று வழங்கினாரே... அன்னையிடம் பிரார்த்தித்துக்கொண்ட ஐந்து மணி நேரத்தில் அத்தனை துல்லியமாகவா என் வேண்டுதல் பலிக்கும் என்கிற எதிர்பாராத திக்குமுக்காடலால் எழுந்த சிலிர்ப்பே அது!

2. அடுத்த காரணம், சாவி சாரின் பெருந்தன்மை. ‘ஏன் இப்படிப் பண்ணிட்டுப் போயிட்டே?’ என்று, நான் நடந்துகொண்ட முறை பற்றி அப்போதும், அதன்பின்னும் அவர் என்னிடம் ஒருமுறை கூடக் கேட்கவே இல்லை. அத்தகைய மாமனிதரின் மனசு புண்படும்படி நான் எத்தனை ஈனத்தனமாக நடந்துகொண்டுவிட்டேன் என்கிற குற்றவுணர்ச்சியால் எழுந்த நடுக்கமே அது.

கரகரவென்று கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன் - சாவி சாரிடம் நான் முன்பு நடந்துகொண்ட முறைக்காகவும், அன்னையிடமே சவால் விட்டோமே என்கிற அதிகப்பிரசங்கித்தனத்துக்காகவும்!

அன்னையின் மகிமைகள் தொடரும்!

2 comments:

அன்பு நண்பரே! இவையெல்லாம் லட்சக் கணக்கானோர் படிக்கும் பத்திரிக்கைகளில் வந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! நீங்கள் நினைத்தால் அது ஒரு பெரிய விஷயமே இல்லைதானே?

கட்டுரை மிகவும் யதார்த்தமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் இருக்கிறது. தொடருங்கள். வாழ்த்துக்கள்!
 
அன்புள்ள ரவி, ”அன்னை அரவணத்தார்” படித்தேன்; நான் சொன்னபடியே “பொருப்பாசிரியர்” அந்தஸ்துடன் 1500 ரூபாயும் நிர்ணயித்து, அந்த மகான் சாவி உங்களுக்கு வழிகாட்டினார் என்பதில் பரம சந்தோஷம்..நிற்க,
நான் தில்லி ஆகாசவாணியில் இருந்த போது, சாவி பத்திரிகைக்கு பல சூடான பேட்டிக் கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். பெரியவர் சாவி என் கட்டுரைகள் அனைத்தையுமே
“சாவி”யில் வெளியிட்டது மட்டுமல்ல; பல நேரங்களில் பாராட்டவும் செய்திருக்கிறார் என்றால் பாருங்களேன். ஒரு முறை பழம்பெரும் பஞ்சாபி கவிதாயினி திருமதி.அம்ருதா ப்ரீதமை நேரில் சென்று பேட்டிகண்டு சாவிக்கு அனுப்பினேன். ’பிஞ்ச்ரா’என்ற அவரின் கவிதைப்படைப்புக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டபோது இந்த பேட்டியை எடுத்தேன். அவர் மனம் திறந்து பல அந்தரங்கமான தமது சொந்த விஷயங்களை எல்லாம் என்னோடுபகிர்ந்துகொண்டார்.அனைத்தையும் கலப்படமின்றி என் கட்டுரையில் பதித்தேன்.. சாவிசார் என் கட்டுரையைப் படித்தபின், தில்லியில் இருந்த எனக்கு ஃபோன்செய்தார்..வாய் நிறைய பாராட்டினார்..எழுத்துலக ஜாம்பவானி
டமிருந்து எனக்குக் கிடைத்த அந்த பாராட்டு, உண்மையிலேயே பத்மஸ்ரீ விருது பெற்றுவிட்டதைப் போன்ற ஒரு உணர்வை அன்றே என்னுள் ஏற்படுத்திவிட்டது..அப்படியிருக்க,
சாவியில் 1500 ரூபாய் சம்பளத்துடன், பொருப்பாசிரியர் பதவிபெற்ற நீங்கள் நிச்சயமாக, சாவி அளித்த புகழ்மாலையில் உச்சி குளிர்ந்து போயிருப்பீர்கள் என்பதைச் நான் சொல்லவும் வேண்டுமா?நான் சொன்னதைப்போலவே உங்களுக்கு,கருணைக்கடல் அன்னையின் அருள் கிடைத்துவிட்டதல்லவா?

அன்புடன்
சரோஜ் நாராயணசுவாமி